பெருமானார் பார்வையில் பிற சமயங்கள்
ஜூன் 15 - மிலாது நபி முகமது நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா 'மிலாது' விழா என்னும் பெருமானார் பிறந்த நாள் விழா உலகெங்கும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் படுகிறது.

முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட வேண்டிய மனிதப் புனிதர் பிறந்த நாள் விழாவாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த இறைத்தூதர் அன்று. அவர் போதித்த இறைநெறியாகிய இஸ்லாமிய நெறியை ஏற்றுப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கப் படுகின்றனர். அவ்வளவே.

சவூதி போன்ற அரபு நாடுகளில் மீலாது விழா அவரவர் இல்ல அளவிலும் மசூதி, மதரஸா போன்ற வளாகங்களில் மட்டுமே கொண்டாடப் படுகின்றது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பொது விழாவாக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கொண் டாடப்பட்டு வருகிறது. அம்முறையும் இந்தியா வில்தான் முதன்முதலில் தொடங்கியதெனலாம்.

விடுதலைப் போராட்டம் சூடு பிடித்த நிலையில் இந்திய மக்களிடையே மதம் கடந்த தேசிய உணர்வையும் அதன் மூலம் ஒற்றுமை உணர் வையும் உருவாக்க அலீ சகோதரர்களால் மிலாது விழாவைப் பொது விழாவாகப் பொது இடங்களில் கொண்டாடும் முறை உருவாக்கப் பட்டது. இன்று அம்முறை அனைத்துத் தரப்பினராலும் உலகெங்கும் சீரும் சிறப்புமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இஸ்லாத்தைப் பிற சமயத்தவர் அறிந்துணரவும் பிற சமயத்தினர் தங்கள் சமயங்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக் குமிடையேயுள்ள ஒற்றுமைகளைக் குறிப்பாக வேற்றுமையிலும் ஒற்றுமை காணவும் அரிய வாய்ப்பாக அமைகின்றது.

இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. அது மார்க்கம் அல்லது வாழ்க்கை நெறி என்ற பொருளில் 'தீன்' என்ற அரபுச் சொல்லால் குறிக்கப்படுகிறது. அவ் வாழ்வியல் நெறியை உலகில் நிலைநிறுத்த உழைத்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பிற சமயங்கள் பற்றி கொண்டிருந்த உணர்வுகளை அறிந்து கொள் வது இன்றைய காலச்சூழலுக்கு இன்றியமை யாதது எனக் கூற வேண்டியதில்லை.

நாயகத் திருமேனி அவர்கள் மக்காவை விடுத்து, மதினா சென்றார். அவர் சென்றபோது மதினாவில் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடையே நிலவிய ஒற்றுமை யின்மையைப் பயன்படுத்திக் கொண்டு வெளி யார்கள் திடீர் திடீர் எனப் படையெடுத்து வந்து கொள்ளையிடுவதும் வழிபாட்டிடங்களைச் சேதப்படுத்துவதும் வழக்கமாக இருந்தது. இந்நிலையை மாற்றக் கருதிய அண்ணலார் அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாகத் திரட்டி மாநாடு நடத்தினார். உலகில் நடைபெற்ற முதல் சர்வ சமய மாநாடு அதுவேயாகும்.

அம் மாநாட்டில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை வெளியார் யாரேனும் ஒரு மதத்தவரைத் தாக்க முனைந்தால், மற்ற சமயத்தவர்கள் உடன் சென்று பாதிப்புக் குள்ளாகும் மதத்தவரைப் பாதுகாக்க வேண்டும். அதே போன்று ஒரு சமயத்தைச் சார்ந்த வழிபாட்டிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் பிற மதத்தவர்கட்கு உண்டு போன்றவைகளாகும். இத் தீர்மானங்களை அனைத்துச் சமயத்தவர்களும் ஒரு மனதார ஏற்றதோடு, அனைத்துச் சமயத்தவர்களும் தங்களை வழிநடத்தும் வழிகாட்டியாக - மதினா நகர அரசின் தலைவராகப் பெருமானாரைத் தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் அனைத்துச் சமயத்தவர்களும் ஒப்புக் கொண்ட முதல் தலைவர் என்ற பெருமை அண்ணலாரையே சார்ந்தது. ''உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு'' என்ற திருமறையின் அருங்கருத்துக்கு இலக்கணமாகவும் இலக்கிய மாகவும் திகழ்ந்த பெருமானார் அத்தகுச் சிறப்பைப் பெற்றது இயல்பே.

ஒரு முஸ்லிம் பிற சமயங்களை 'மாற்றுச் சமயம்' எனக் கருதாமல் சகோதரச் சமயமாகக் கருத வேண்டும் என்பது அண்ணலாரின் உட்கிடக்கை. ஏனெனில் உலகிலுள்ள அனைத்துச் சமய நெறிகளும் வேதங்களும் இறைவனால் வழங்க ப்பட்டவைகளேயாகும் என்பது திருக்குர் ஆன் தரும் மறைச் செய்தியாகும்.

உலகிலுள்ள எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் இறைத் தூதர்களும் இறை வேதங்களும் இறைவனால் அருளப்பட்டுள்ளன. இவ்வாறு மக்களுக்கு இறைநெறி புகட்ட வந்த முதல் மனிதரும் இறைத்தூதருமான ஆதாம்(அலை) முதல் இறுதி நபி அண்ணலார் வரை வந்த இறைத் தூதர்கள் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் பேர்களாவர். அவர்கட்கு வழங்கப்பட்ட இறை வேதங்கள் முப்பத்தியாறு என்பது இஸ்லாமிய மரபு ஆகும்.

ஏன் இத்தனை இறைத்தூதர்கள், இறை வேதங்கள்?

ஒரு 'இறைத்தூதர்' வாழ்நாள் முழுமையும் இறை வேத வழியில் இறைநெறி புகட்டி மறைவார். காலப்போக்கில் இறைத்தூதரையே கடவுளாக்குவர். வேதத்தில் தன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றத் திருத்தங்களைச் செய்து, மூலக் கருத்துக்களையே மாற்றி மாசுபடுத்துவர். மீண்டும் மூல வடிவில் வேதமும் அதனை உள்ளதை உள்ளவாறே விளக்கும் இறைத் தூதரும் வருவார். அவரது மறைவுக்குப் பின் பழைய நிலையே தொடரும். இவ்வாறு வந்தவர்களே இறைத் தூதர்களும் இறை வேதங்களும். இறுதித் தூதராக வந்த நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு வழங்கிய இறுதி இறை வேதமான திருக்குர்ஆன் திருமறையில்

'நபியே ! உமக்கு முன் வந்த இறைத் தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனை யேயன்றி வேறொன்றும் உமக்குக் கூறப்பட வில்லை' (திருக்குர்ஆன் 41:43)

என்ற இறைவாக்கின் மூலம் முந்தைய இறைத் தூதர்களுக்கு வழங்கப்பட்ட செய்திகள் அடிப்படையில் நபிகள் நாயகத்துக்கும் இறைவேதம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

முந்தைய இறைத் தூதர்கள் உபதேசிகளாக மட்டும் இருந்தனர். ஆனால், அண்ணலாரைப் பொறுத்தவரையில்.

'உங்களுக்கு அல்லாவின் தூதரில் அழகிய முன் மாதிரி அமைந்திருக்கிறது' (திருக்குர்ஆன் 33:21)

எனக் கூறியிருப்பதிலிருந்து பெருமானார் உபதேசிப்பதோடு, உபதேசத்திற்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டிய கடப்பாடும் இருந்தது.

முந்தைய வேதங்களைக் காக்கும் பொறுப்பை மனிதர்களிடம் தந்திருந்த இறைவன் இறுதி வேதத்தைக் காக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டதால் இன்று மாற்றமேதும் இல்லாத மாமறையாக விளங்கி வருகிறது.

மதினா பள்ளி வாசலில் இருந்த அண்ண லாரைக் காண வந்த பாதிரிமார்கள் தங்கள் பிரார்த்தனை நேரம் வந்தபோது, பிரார்த்தனை செய்ய வேண்டி வெளியே செல்ல முயன்ற போது, ''எங்கும் ஒரே இறைவன்தான், இங்கிருந்தும் வணங்கலாம்'' எனக் கூறிப் பள்ளி வளாகத்திலேயே கிறித்துவச் சம்பிரதாயப்படிப் பிரார்த்தனை செய்ய அனுமதித்துத் தன் சமயப் பொறையைச் செயல்வடிவில் நடைமுறைப் படுத்தியவர் பெருமானார்.

அது மட்டுமல்ல பிற சமயத்தவரை மதிப்பது மட்டுமல்ல மகிழ்ச்சிப்படுத்துவதும் ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை எனக் கூறியதற்கேற்ப வாழத் தூண்டியவர் பெருமானார்.

அபூபக்கர் (ரலி) அவர்களும் அவரது குமாரத்தி அஸ்மாவும் இஸ்லாத்தில் இணைந்த போதிலும், அஸ்மாவின் தாயார் இஸ்லாத்தில் இணையாது முந்தைய மதத்திலேயே இருந்தார்.

ஒரு சமயம் தன் மகள் அஸ்மாவைக் காண விரும்பிய தாயார் மகளின் இருப்பிடத்திற்குப் பரிசுப் பொருள்களுடன் சென்றார். ஆனால், பிற சமயத்தைச் சேர்ந்த தன் தாயாரைக் காண விரும்பாத அஸ்மா கதவைத் திறக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட பெருமானார் மிகவும் மனம் வருந்தியவராய் அஸ்மாவை அழைத்து, ''வேறு மதத்தைச் சார்ந்தவராயினும், உன் தாயாரை இன்முகத்தோடு வரவேற்று, அவர் தரும் பரிசுப் பொருள்களை மகிழ்வோடு ஏற்று, அவரைக் கண்ணியப்படுத்துவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை'' என்பதை உணர்த்தி, தன் தாயாரை வரவேற்று உபசரிக்கச் செய்தார்.

பிற சமயத்தவரை மதிப்பது மட்டுமல்ல அவர்கள் முகம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டி யதும் இன்றியமையாக் கடமையாகும்.

ஒரு சமயம் அலீ (ரலி) அவர்கள் சாலை வழியே நடந்து சென்றார். அவருக்கு முன்னால் ஒரு யூதர் சென்று கொண்டிருந்தார். 'ஒரு யூதர் பின்னால் ஒரு முஸ்லிம் நடப்பதா?' எனக் கருதிய அலீ (ரலி) மிக வேகமாக நடந்து யூதரைக் கடந்து சென்றார். அதே வேகத்தில் மூச்சு வாங்க அண்ணலார் முன்னிலையில் வந்து நின்றார். மூச்சு வாங்க விரைந்து வந்த காரணத்தைக் கேட்ட அண்ணலாரிடம் உண்மையைக் கூறினார் அலீ (ரவி). அதைக் கேட்டு மனம் வருந்தி அண்ணலார் 'அதே வேகத்தில் சென்று அந்த யூதரை வேண்டு மென்றே முந்தி நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டு வரச் சொன்னார். அலியாரும் அவ்வாறே செய்தார்.

இதன் மூலம் வேறு சமயத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வெறுப்பதோ மனம் வருந்த நடப்பதோ கூடாது. அது இஸ்லாமிய நெறிமுறை அல்ல என்பதைச் சொல்லால் மட்டு மல்லாமல் செயல் வடிவிலும் நிறுவிச் சென்றவர் பெருமானார்.

கட்டுரையாளர் 'யுனெஸ்கோ கூரியர்' தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர்.

© TamilOnline.com