ஜூன் 2001: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)

குறுக்காக

3. பலர் வாழுமிடம் ரமா விரல் நுனியழகைச் சேர்த்தாள் (5)
6. பயந்து முட்டாள் இரு பாதியை அணைத்துக் கொண்டான் (4)
7. ஒரு தாவணி, கன்னியிடம் இருக்க பிறரிடம் கைநீட்டமாட்டான் (4)
8. பாறைக் கதிரவர் எழுத்தறியார் (6)
13. உயர்ந்த குடியிருப்பு நியாயமா, அடிப்பெண்ணே? (6)
14. அர்த்தமில்லாமல் பேசி தம்பி சுற்றி சுயம் இழந்தான் (4)
15. மாலை பிள்ளையார் தலையுடன் அவருடைய சுழி போடு (4)
16. காவிரிக்கரையூர் நீராடிய முதலை வால் (5)

நெடுக்காக

1. ராமலிங்கராசு, ராரா வேண்டாமடா, அவளுடைய கணவன் இருக்கிறான்! (5)
2. சிந்தித்து ஏகப்பட்ட பொருளைத்தர ஒவ்வொருவருக்கும் தலைகீழாய் நில் (5)
4. நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்பு சொல்பவர் ஊன்றப் போகிறாரோ? (4)
5. குரங்கன்பினால் ஐக்கியமாகித் தூங்குவதுபோல் பாவனைசெய்வான் (4)
9. பூந்தேனை நாடும் கருவிழிக்குவமை (3)
10. அளவுக்கு மீறிய காலம் (2, 3)
11. கல்வியை அனுபவத்தில் பெற்ற பாடமாகக் கொள்ளலாம் (5)
12. இரண்டாவதாகப் பணம் போட்ட நபரில்லை (4)
13. தெரிந்து வைத்துள்ள அந்த பன்றி வாலை நுழைத்தது (4)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக

3. மாநகரம் 6. மருண்டு 7. வணிகன் 8. கல்லாதவர் 13. அடுக்குமாடி 14. பிதற்றி 15. ஆரம்பி 16. குளித்தலை

நெடுக்காக

1. சுமங்கலி 2. எண்ணிலாத 4. நடுவர் 5. ரங்கன் 9. வண்டு 10. வெகு நேரம் 11. படிப்பினை 12. முதலாளி 13. அறிந்த

© TamilOnline.com