ஜூன் 18 சர்வதேசத் தந்தையர் தினம்
'தாயைப் போலப் பிள்ளை; நூலைப் போலச் சேலை' - இது பாரம்பரியத் தத்துவமல்ல. தந்தையின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகக் காலம் காலமாகக் கட்டப்பட்டு வரும் ஆணாதிக்கச் சிந்தனை.

அன்றாடச் சமையல் வேலைகள், கணவனுக் கான பணிவிடைகள், குடும்ப வண்டியை நகர்த்த மாடாக உழைத்துச் சம்பாதிக்கும் நிலை. இந்த முற்றுப் பெறாத வேலைப்பளுவுடன் குழந்தைப் பராமரிப்பின் முழுச்சுமையும் கூடப் பெண்களின் தலை மேலேயே விழுந்து விடுகிறது.

போதாக்குறைக்கு நமது சமூகம், 'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' - என்று குழந்தையின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தாயையே காரணம் காட்டி வருகிறது. குழந்தையின் பராமரிப்பில், வளர்ச்சியில், அதன் ஆளுமை உருவாக்கத்தில் ஆண்களுக்குப் பங்கேயில்லையா? நிறையவே உண்டு என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ரோஸ்-டி-பார்க்கி. ஒரு குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிவதற்குள் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி ஆராய்ந்து இவர் தந்திருக்கும் தகவல்கள் தந்தையர்கள் தமது கடமையை உணர்ந்து கொள்ள உதவும்.

ஒரு குழந்தை உலகத்துக்கு வந்ததும் முதலில் சந்திக்கும் உறவு அதன் தாய். மகப்பேறு பற்றிய விஞ்ஞான அறிவு வளர்ச்சியடையாத காலத்தில் 'தீட்டு' என்று காரணம் காட்டித் தந்தை தன் குழந்தையை உடனே பார்க்க முடியாதவாறு தடுத்து விடுவார்கள். இப்போது அப்படியல்ல; குழந்தை பிறக்கும்போதே கணவர் பிரசவ வேதனையால் துடிக்கும் மனைவிக்குப் பக்கத்திலிருப்பது அவளுடைய வேதனை உணர்வைக் குறைப்பதாகக் கண்டுபிடித்துப் பிரசவ அறையில் கணவரையும் இருக்க அனுமதிக்கிறார்கள்.

தந்தை தனது குழந்தையின் வளர்ச்சியை இரு வழிகளில் பாதிக்கிறார். ஒன்று: குழந்தையுடன் நேரடியாகத் தான் உறவாடுகிற முறையில். மற்றையது: குழந்தையின் தாயுடன் தான் உறவாடுகிற விதத்தில்.

குழந்தையுடன் அப்பா விளையாடுவது குழந்தையுடன் அம்மா விளையாடுவதை விட வித்தியாசமானது. தாய் அதிகம் கொஞ்சிப் பேசுவதிலும் விளையாட்டுப் பொருள்களைக் கொடுத்து விளையாட்டுக் காட்டுவதிலும் ஈடுபடுகிறார். தந்தையோ குழந்தையுடன் உடல்ரீதியாகச் - சொல்லப் போனால் சற்று முரட்டுத்தனமாகவே விளையாடுவார். அம்மாவை விட அதிகக் குதூகலமும் கூச்சலும் அப்பாவுடன் விளையாடும்போதே குழந்தைக்குக் கிடைக் கிறது.

ஆண்- பெண் குழந்தைகளை ஒரு தந்தை விரும்பும் விதமும், கையாளும் விதமும் கூட வேறுபடுகிறது. பொதுவாக எல்லாக் கலா சாரங்களிலும் தந்தையர்கள் பெண் குழந்தை களை விட ஆண் குழந்தைகளை மூன்று மடங்கு அதிகம் விரும்புகிறார்கள். பிறந்தது ஆண் குழந்தை என்றதுமே தந்தை - அவன் உறுதி யாகவும், பருமனாகவும் நூறு பேரைத் தூக்கி யடிக்கக்கூடிய பலசாலியாகவும் வளர வேண்டும் என நினைக்க ஆரம்பித்து விடுகிறார். பெண் குழந்தை என்றால் அப்பாவைப் பொறுத்த வரையில் எப்போதும் அது மெல்லினம்தான்.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளை விடப் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை அப்பாக்கள் தொடுவதும், பேசுவதும் அதிகமாக இருக்கிறது. அதிலும் முதலாவது குழந்தை ஆண் பிள்ளையானால் பின்னர் பிறக்கின்ற ஆண் குழந்தைகளை விடவும் அதனிடம் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். ரீஸஸ் குரங்குகளிலும் அப்பாக் குரங்கு இளம் ஆண் குரங்குகளோடு அதிகம் விளையாடுகிறது. அம்மாக் குரங்கும் ஏட்டிக்குப் போட்டியாக இளம் பெண் குரங்குகளைத்தான் அதிகம் கவனித்துக் கொள்கிறது. ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் பெண், தன் குழந்தை களிடம் பால் வேறுபாடு காட்டுவதில்லை. எல்லாக் குழந்தைகளும் அடிப்படைத் தேவை களுக்கு அம்மாவிடம் வர வேண்டியிருப்பதால் அம்மாவால் இப்படி வேறுபாடு காட்ட முடிவதில்லை போலும்.

ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளும் அப்பா அம்மாவை வெவ்வேறு அளவுகளில் விரும்புவ தில்லை. சமமாகவே பார்க்கின்றன. ஒரு வயது நிறைவடையும்போது அம்மாவும் அப்பாவும் அதற்குச் சம அளவில் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் குழந்தையின் இந்த ஒரு ஆண்டு வளர்ச்சியில் தந்தையின் நடவடிக்கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் தந்தை, குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார் என்பதை விட எப்படிச் செலவு செய்கிறார் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு நாளும் தந்தை ஏதாவது ஒரு விதத்தில் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருப்பது அதை மகிழ்ச்சிப்படுத்த ஒரு வழி என்று கூறுகிறார்கள். தந்தையினால் அதிகம் கவனிக்கப்படும் குழந்தை, ஒரு அந்நியருடன் தனியே இருக்க இலகுவில் பயப்படாது. ஆனால் அப்படி கவனிக்கப்படாத குழந்தைகள் பிறருடன் பழகுவதில் பயத்தைக் காண்பிக்கின்றன.

அறிவு வளர்ச்சியில் தந்தையும் தாயும் வெவ்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்கி றார்கள். தந்தையுடனான தொடர்பின் அளவு அதிகரிக்கக் குழந்தையின் உள வளர்ச்சியும் அதிகரிக்கிறது. தாய்மார்கள் குழந்தையுடன் சிரித்தல், மழலை செய்தல் போன்ற வழிகளில் விளையாடுவதால் குழந்தையின் மன வளர்ச்சி வேறொரு தளத்தில் விரிகிறது.

அப்பா, அம்மாவுக்குரிய கடமைகள், வேலைப் பங்கீடு எல்லாம் கலாசாரத்தின் அடிப்படை யிலேயே செய்யப்பட்டது. பொதுவாக எல்லாக் கலாசாரங்களிலும் குழந்தையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, சுகாதாரம் என்பவற்றைத் தாய்தான் கவனித்துக் கொள்கி றாள். தந்தை, குழந்தையைத் தாய் அருகிலில் லாத சமயங்களில் தூக்கி வைத்துப் போக்குக் காட்டுவதுடன் தனது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறார்.

தாயின் கடமைகள் சிலவற்றைத் தந்தையும் பங்கு போட்டுக் கொண்டால் குழந்தையின் உள வளர்ச்சியை மேன்மேலும் ஆரோக்கியமாக மாற்ற முடியும். 'அம்மா கொடுத்தால்தான் சாப்பிடுவான்' என்று சில அப்பாமார் சொல்வ தெல்லாம் தவறானது. குழந்தைக்குத் தன் தேவைகளை நிறைவேற்றுவதில் பால் பேதம் இல்லையென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அம்மாவைப் போலவே, அப்பா உணவூட்டி விடும்போதும், துடைத்துவிடும் போதும் உடை மாற்றி விடும்போதும் அது சிரிக்கிறது. புட்டியில் தாய் கொடுத்தாலும் தந்தை கொடுத்தாலும் அது ஒரேயளவு பாலை ஒரே விதமாகவே குடித்து முடிக்கிறது என ஆராய்ச்சிகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு எப்படி ஊட்டுவது, துடைப்பது, தூங்க வைப்பது என்று ஒரு பயிற்சி வகுப்பை அமெரிக்காவில் சில அப்பாக்களுக்கு நடத்தி விட்டு விளைவுகளைப் பரிசோதித்துப் பார்த் திருக்கிறார்கள். தந்தைமார்கள் அதில் தாய் மாரைத் தோற்கடித்து விட்டார்கள்.

அதற்கு முன்னர் அப்பாமார் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. தன் மனைவியை ஒவ்வொரு கணவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறார். ஆனால் அந்தப் பாதிப்பின் வடிவம் தாய் - குழந்தை இடையேயான உறவில் வெளிப் படுகிறது என்பது அப்பாவாகிவிட்ட ஒவ்வொரு கணவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். குடிபோதையில் மனைவியைத் துன்புறுத்தித் திட்டி, அடித்து முன்மாதிரியாக இருக்கும் தந்தையர்கள் இன்னமும் நம் மிடையே அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று குடியை விட வேண்டும். அல்லது குடித்தனத்தை விட வேண்டும். இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு அந்தத் தந்தை செய்கின்ற பெரிய உதவியாக இருக்க முடியும்.

பொ. ஐங்கரநேசன்

© TamilOnline.com