சச்சினை தேடும் சாதனைகள்
'சச்சின் விளையாட்டில் என்னைப் பார்க்கிறேன்' என்றாரே டான் பிராட்மேன்! அது ஒன்று போதாதா? இதற்குப் பிறகும் சில சந்தேகப் பிராணிகளுக்கு திருப்தியில்லாது இருக்குமானால், அதையும் தீர்த்து வைக்கும் விதமான மகத்தான சாதனையை சச்சின் நிகழ்த்திக் காட்டி விட்டார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரராக கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டுவிட்டார் சச்சின். எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் இனி அந்த ஐந்திலக்க எண்ணிக்கையைத் தொடலாம். ஆனால், முதலில் கடந்த முத்தான வீரர் சச்சின் என்ற பெருமையை யாராலும் அவரிடமிருந்து பறித்துவிட முடியாது. டெஸ்ட் போட்டிகளில் 'லிட்டில் மாஸ்டர்' செய்த சாதனையை, ஒருநாள் போட்டிகளில் 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' செய்து காட்டியிருக்கிறார்.

10,000 என்ற மைல்கல்லை எட்டுவதற்கு 101 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில்தான், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர் துவங்கியது. பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே சதமடித்து சாதிப்பார் சச்சின் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சச்சினும் ஆக்ரோஷமான மனநிலையில், ஆஸ்திரேலியப் பந்து வீச்சை ஆரம்பத்தி லிருந்தே அடித்து நொறுக்கத் தொடங்கினார். 26 பந்துகளில் 35 ரன்கள் (6x4, 1x6) சேர்ந்த போது, இந்திய ரசிகர்களின் ஆரவாரம் பெங்களூர் விளையாட்டரங்கை குலுக்கியது. ஆனால், உடன் ஆ(ஓ)டிக் கொண்டிருந்த லஷ்மண் பயங்கரமாக சொதப்பியதில், டெண்டுல்கர் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப நேரிட்டது.

சரி, புனேயில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் சச்சின் சாதித்துவிடுவார் என்று ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். இங்குமே ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம்தான். 29 பந்துகளில் 32 ரன்கள் (6x4, 1x6) சேர்த்த சச்சின், அடித்து ஆடும் முயற்சியில் அவசரப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார். ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.

அடுத்து இந்தூரில் 3வது ஒருநாள் போட்டி. மகத்தான சாதனைக்கு இன்னும் 34 ரன்கள் தேவை. அனைத்து பந்துகளையும் அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்ற கண்மூடித் தனமான வேகத்துக்கு அணைபோட்டு விட்டு, சச்சின் பொறுப்போடு நிதானமாக ஆடுகிறார்.

ஷேன் வார்ன் வீசிய இரண்டாவது ஓவரில், லாங்ஆப் திசையில் தட்டி விட்டு ஒருரன் எடுக்க, ''ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர்'' என்ற அந்த சரித்திர சாதனை அரங்கேறுகிறது. எந்தவித ஆர்பாட்டமும் செய்யாமல் மிக அமைதியாக ரசிகர்களின் வாழ்த்தொலியை ஏற்றுக் கொள்கிறார் சச்சின்.

தொடர்ந்து முன்னேறிய சச்சின் ஒருநாள் போட்டிகளில் தனது 28வது சதத்தைப் (94 பந்துகளில்) பூர்த்தி செய்கிறார். 139 ரன்கள் குவித்த அவரது அன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றிதேடித் தருகிறது. ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே. ஆஸ்திரேலியர் களுக்கு எதிராக சச்சின் அடிக்கும் 6வது சதம் இது (110, 100, 143, 134, 141, 139) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாமன அவதாரம் விஸ்வரூபம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் மண்ணோடு மண்ணாகிப் போகிறது ஆஸ்திரேலிய அணி.

உங்களுக்குத் தெரியுமா? தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மட்டைவீச்சு வாய்ப்பு கிடைக்காமல் பெவிலியனில் ஏக்கத்தோடு அமர்ந்திருந்தவர்தான் சச்சின். தொடக்கத்தில், ஒருநாள் போட்டிகளில் அவருக்கான இடம் எது என்பதில் யாருக்கும் ஒரு தெளிவில்லாத நிலைதான் இருந்தது. 7வது வீரராகக் களமிறங்கிக் கொண்டிருந்தவரை 6,5,4 என்று மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சச்சின் தொடக்க வீரராகக் களமிறங்கத் தொடங்கிய பிறகுதான், அவரது திறமை முழுமையாகப் பளிச்சிடத் தொடங்கியது.

இன்று உலக ரசிகர்கள் அனைவருமே சச்சினின் ஆட்டத்துக்கு அடிமைகள்தான் என்றால் அது மிகையாகாது. ரசிகர்கள் மட்டுமல்ல நட்சத்திர வீரர்கள் பலருமே சச்சினின் ஆட்டத் திறனை மெச்சிப் போற்றுகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாகத் திகழும் ஷேன்வார்ன், கிளென் மெக்ராத் போன்றவர்களைத் திறமையாக எதிர்கொண்டதோடு அவர்களைச் சரணடையவும் வைத்தார் சச்சின்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சரியான 'ஓட்டைவாயர்கள்' என்பதில் யாருக்கும் எந்த விதச் சந்தேகமும் இருக்க முடியாது. அவர்களையே 'வாயடைத்துப்' போகச் செய்த ஒரே வீரர் சச்சின்தான். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 98 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சச்சின் விரைவில் அதிலும் சதமடித்து சாதிக்கவிருக்கிறார். சச்சினைத் தேடி ஓடி வரவிருக்கும் சாதனைகளில் அதுவும் ஒன்று... அவ்வளவே.

'எனது தனிப்பட்ட சாதனைகளை விட, இந்திய அணியின் வெற்றிதான் எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கும்' என்கிறார் சச்சின். அந்தக் கடமை வீரனின் லட்சியப் பயணம் தொடரட்டும். ''கங்காருகொண்டான்'' போற்றி போற்றி...

பா. சங்கர்

© TamilOnline.com