'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஜூன் 6ம் தேதி முதல், 18ம் தேதிவரை, "அம்மா" ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ரமோனுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அருளுரைகளில் இருந்து சில குறிப்புகள்:

"எல்லா வசதிகளும் இருந்த போதும் மக்கள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அது ஏன் அம்மா?" என்று சிலர் கேட்பதுண்டு. இன்று உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு அமைதியும், நிம்மதியும் இல்லை. பெரிய மாளிகையைக் கட்டி அதன் நடுவில் இருந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாளிகைகளும், சொத்தும், பிற சுக செளகரியங்களும், மதுவுமே ஆனந்தம் தருகிறது என்றால் இப்படித் துயரத்தில் மூழ்கி இறக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? அப்படியாயின் நிச்சயமாக இவற்றில் ஆனந்தம் இல்லை. மனதை ஆதாரமாகக் கொண்டே அமைதியும், நிம்மதியும் இருக்கின்றன. வாழ்வில் அமைதியை அனுபவிக்க வேண்டுமென்றால் அதன் உண்மையான இருப்பிடம் எது என்று அறிந்து கொண்டு அங்கு தேட வேண்டும். வெளி உலகத்திலிருந்து அமைதியை பெற முடியாது. அமைதியும், நிம்மதியும் ஒருவனின் மனதைப் பொறுத்த விஷயங்களாகும்."

"குழந்தைகளே, நாம ஜபம் மட்டுமே பிரார்த்தனையல்ல. இனிமையான ஒரு வார்த்தை, பிறரை நோக்கிப் புன்னகை பூக்கும் முகம், கருணை, பணிவு இவை அனைத்தும் பிரார்த்தனையே. ஒரு கையில் காயம் பட்டால் மறு கை மருந்திட ஓடி வருவதைப் போல் பிறரது தவறுகளைப் பொறுத்து, கருணை காட்டும் மனதை நாம் பெற வேண்டும். மனம் பரந்ததானால் எவ்வளவோ பேருக்கு நம்மால் ஆறுதல் அளிக்க முடியும். நம்முள்ளத்தில் உள்ள அமைதியையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கச் சுயநலமற்ற மனம் நமக்குச் சக்தி அளிக்கும். 'இறைவா! உனது இதயத்தை மட்டும் எனக்குத் தந்தால் போதும். நீ உலகுக்குச் சுயநலமற்று சேவை செய்வது போல், எனக்கும் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் மனதைத் தர வேண்டும்' என்பது உங்களின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்."

மே 2ம் தேதி, 'இன்டர்ஃபெய்த் சென்டர் ஆப் நியுயார்க்' அமைப்பு (www.interfaithcenter.org), அம்மாவின் ஆன்மீக மற்றும் சமூக பணிகளை பாராட்டும் வகையில் 'ஜேம்ஸ் பார்க்ஸ் மார்டன் இன்டர்ஃபெய்த்' விருதை அம்மாவிற்கு நியூயார்க் நகரில் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா ஜூலை மாதத்தில் வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
டாலஸ் 07.02 - 07.03
சிகாகோ 07.05 - 07.06
மவுண்ட் பிளசன்ட் 07.08 - 07.09
வாஸிங்டன் டி.சி. 07.11 - 07.12
நியுயார்க் 07.14 - 07.16
பாஸ்டன் 07.18 - 07.21
டொரன்டோ , கனடா 07.23 - 07.26

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com