அம்மா
தாய்மையின் தலைவாசலில்
நான் நின்ற அன்று
அம்மா
உன் பரிபூரணம்
முகத்தில் அறைந்தது

வாழ்வின்
வலியும் வலிமையும்
சுமையும் சுவையும்
ரணமும் ரசமும்
தொலைப்பும் துறப்பும்
எடுத்துரைத்தாய்

வானும் நீரும்
நிலவும் நெருப்பும்
அப்பாவும் அகரமும்
அன்பும் அரவணைப்பும்
இசையும் அசைவும்
காட்டிக்கொடுத்தாய்

இடைவிடா(து) இடிவிழும் நேரம்
அமைதியாய் அடைகாத்த நீ
என் இமை மூடாது தவிக்கையில்
இதயம் வெதும்பி
உன் மென் கரத்தால்
என் துயர் துடைத்துத்
தோள் கொடுத்தாய்

பல மாதங்களுக்கு முன்
உன் மடியில் தலைவைத்த,
என் தலை கோதிய
உன் இதமான கைச்சூடு
என்னுள் இன்னும் பதிந்து
பாதுகாத்த புதையலாய்

பல்லாயிரம் மைல்களுக்கப்பால்
நீ இருப்பினும்
உன் விதிகளும்
வழிகளும்
வாஞ்சையும்
என்றென்றும் நீங்காமல் என்னோடு....

ரேகா ராகவன்
swathi17@hotmail.com

© TamilOnline.com