இன்றும் பத்திரிகை சுதந்திரம் எதுவரை?!
மே 3 - பத்திரிகை சுதந்திர நாள்

அந்த நடிகைக்கும் இந்த நடிகருக்குமிடையே இது. அவருடைய பிள்ளை இவருடைய மகளை இஸ்துக்கினு போய் விட்டார். போன்ற செய்திகளைத் தெகிரியமாக வெளியிடுவது மட்டுமே பத்திரிகைச் சுதந்திரம் என்பதாக பத்திரிகையுலகம் ஸாரி.. தமிழ்ப் பத்திரிகை யுலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை. அதிகப் பட்சமாக சுமார் சில ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பாருங்கள் எங்களுடைய தைரியமிகுந்த செயல்பாடுகள் உங்களுக்குப் புரியும் என்றுதான் ஒவ்வொரு பத்திரிகைகளும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனவே தவிர தற்போதைய அவை களின் நிலையைப் பற்றி கண்டு கொண்ட தாகவே தெரியவில்லை.

எமெர்ஜன்ஸி காலத்தில் அதை ஆதரித்து தலையங்கம் எழுதிய ஒருவரைப் பற்றி முன்னாள் நிதியமைச்சர் ஒருவர் புளகாங்கிதமடைந்து புகழ்ந்து தள்ளுகிறார். எல்லோரும் ஆதரிக்கும் ஒரு விசயத்தை எதிர்ப்பதும், எதிர்க்கும் விசயத்தை ஆதரிப்பதுமே பத்திரிகைச் சுதந்திரமாக நினைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலை பரிதாபம்.

மற்ற ஆங்கில மற்றும் பிற மொழிப் பத்திரிகைகளுடன் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் பின் தங்கிய நிலையிலேயே நாம் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. பத்திரிகையியலை மதிக்காமல் தாந்தோன்றித் தனமாகச் செயல்படும் ஒன்றாகவே தமிழ்ப் பத்திரிகைகள் இருந்து வருகின்றன.

பத்திரிகையியல் நடைமுறைகளைச் சாத்தியப்படுத்திய சோதனை முயற்சிகள் தமிழ்ப் பத்திரிகைகளில் இதுவரை சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிப் பத்திரிகைகளில் பத்திரிகையியலின் அனைத்துச் சாத்தியங்களும் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன.

பத்திரிகையியலில் ' ஒவ்வொருவரும் சம்பவத்துக்காகக் காத்திருக்கின்றனர்' என ஒரு சொற்றொடர் வரும். அதற்கு எடுத்துக்காட்டாக கறுப்பின மக்களின் போராட்டத்தைக் குறிப்பிட்டு கறுப்பினப் போராட்டம் வெடிக்கும் வரையில் பத்திரிகைகள் காத்துக் கொண்டிருந்தன என்பர். அதைப் போலத் தான் இன்றைய இதழ்களும் சம்பவத்துக்காகக் காத்திருக்கும் நடைமுறையையே பின்பற்றி வருகின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில், சாதிகளுக்கிடையிலான புகைச்சல்கள் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரிந்த விசயமே. அதைப் பற்றி உடனடியாக எழுதுவதை விட்டுவிட்டு சாதிக் கலவரங்கள் வெடித்த பின்னர், அவைகளில் உள்ளார்ந்த அரசியல் பற்றி சிலாகித்தோ, எதிர்த்தோ எழுதுவதைக் கூறலாம்.

மகளிர் பிரச்சனைகள், மக்களின் அன்றாடத் தேவைகள் கிடைக்காமை போன்ற பிரச்சனைகளை தேர்தல் மற்றும் ஏதாவது எதிர்ப்பு அலைகளை உருவாக்க நினைக்கும் போதும் எழுதுவதென்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டலாம்.

பத்திரிகைகளில் அடுத்துக் குறிப்பிட வேண்டிய விசயம். பத்திரிகைகளின் அரசியல் சார்பு. தமிழில் தற்போது வெளியாகும் எந்தப் பத்திரிகைக்கும் குறிப்பிட்ட சில அரசியல் பின்புலங்கள் உண்டு. இந்த வரிசைகளில் தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. அரசியல் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து மக்களுக்குச் சரியான நடுநிலை நோக்குடன் அமைந்த தகவல்கள் வந்து சேருமா? என்பது கேள்விக்குறியே.

உதாரணமாக ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்கிற கேள்விக்கு ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு நிலைப்பாடுகள் ஏன் எழுகின்றன. இரண்டாண்டுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் நிற்க முடியாதென்று தேர்தல் விதிகள் இருக்கும் போது இப்படியாகப் பட்ட கேள்விகள் எழுவது சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது.

அடுத்துக் குறிப்பிட வேண்டிய விசயம். பத்திரிகைகளின் வடிவமைப்பு அம்சம். ஒரு பக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஒருவரைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கும். அதற்கு அடுத்த பக்கத்தில் சினிமா நடிகையொருத்தி தொப்புளைக் காட்டியபடியான புகைப்படமொன்று வெளியாகியிருக்கும். இப்படி அடுத்தடுத்த பக்கங்களில் சம்பந்தமேயில்லாத வெவ்வேறுபட்ட மனநிலைகளை வாசகர்களால் எப்படி அடைய இயலும்? இந்த இரண்டு விசயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை வாசகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போவதற்குரிய வாய்ப்புகளே அதிகம் உள்ளன. இதைப் பற்றியெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

துப்பறியும் பத்திரிகையியலைச் சரிவரச் செய்து வருவதாக மார்தட்டிக் கொள்ளும் பத்திரிகைகளின் போக்கும் கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. உதாரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். தகவல் கிடைத்த பின்னரே சம்பவயிடத்துக்கு விரையும் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவத்தைப் பார்க்காமலே அவரிஷ்டத்திற்கு ஒரு கட்டுரையை எழுதுவார். அந்தக் கட்டுரை கீழ்க்கண்ட மொழிநடையில் இப்படி வெளியாகும். "சரியாக பத்து மணிக்கு அவரும் அவரது கூட்டாளிகளும் அலுவலகத்துக்குள் திபுதிபுவென்று அரிவாள்களுடன் உள் நுழைந்தனர். அங்க வேலை செய்து கொண்டிருந்த அவரை மறித்து சரக்சரக்கென்று வெட்டினர். வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் குபுகுபுவென்று வெளியேறியது. வெட்டுப்பட்டவர் அதே இடத்தில் வீழ்ந்து கதறிக்கதறிச் செத்தார்" என்று அந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த சோகத்தை, அக் கொலைக்கும் பின்னாலுள்ள வன்மத்தைக் கண்டிக்காமல் ராஜேஷ்குமார் பாணியில் கதைவிடும் போக்கே தமிழ் துப்பறியும் பத்திரிகையியலில் இருந்து வருகிறது.

துப்பறியும் பத்திரிகையியலின் மிகச் சிறந்த உதாரணமாக தெகல்ஹா டாட் காமின் தற்போதைய பணியைச் சுட்டிக் காட்டலாம். மேலும் என்.ராமின் போபர்ஸ் ஊழல் குறித்த துப்பறிவுக் கட்டுரைகளையும் சொல்லலாம்.

தமிழ்ப் பத்திரிகைகள் பத்திரிகைப் பணி என்பதை லாபநோக்கம் கருதியதாகவே இதுவரை மேற்கொண்டுவந்துள்ளன. முதலாளிகளின் கைகளில் சிக்கி சிலருக்கு மட்டும் முதுகு சொரியும்படியாகவும் இருந்து வந்துள்ளன. தலைப்புகளை விளம்பரப்படுத்தும் போக்கிலும் பரபரப்பு நடைமுறைகளையே கடைபிடித்து வருகின்றன. ஒருபக்கம் இது மாதிரி பத்திரிகைகளாகவும் மறுபக்கம் யாருக்குமே புரியாமல் ஒரு சிலருக்கான இலக்கியப் பத்திரிகைகளாகவுமே பத்திரிகையுலகம் இருந்து வருகிறது.

விற்பனை நோக்கென்பது அவசியம்தான். ஆனால் அவைகளையெல்லாம் தாண்டி வாசகர்களுக்கு உண்மையாய்ச் செய்திகளைத் தருவதன் தார்மீகக் கடமையைப் பத்திரிகைகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏற்கெனவே படிக்கும் பழக்கம் குறைந்து வருகிற இவ்வேளையில் மேலும் மேலும் வாசகர்களை எரிச்சலூட்டுவதாகவே பத்திரிகைகள் மாறிப் போய்விடும்.

சரவணன்

© TamilOnline.com