வரம் - காஞ்சனா தாமோதரன்
("அமெரிக்காவில் மென்பொருள் துறை வல்லுனராய்த் தொழில் புரியும் 'மனுபாரதி' தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.)

படைப்பு என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தருவதென்றால் பல வரையறைகள் அணிவகுத்து நிற்கும் - உணர்வுகளின் வெளிப்பாடு, அனுபவங்களின் பதிவு/பகிர்வு, கேள்விகளின்/தேடலின் மொழிவடிவம் என, காஞ்சனா தாமோதரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வரம்' இவையனைத்தையும் உள்ளடக்கிய படைப்புலகத்தைக் காட்டுகிறது.

இப்படைப்பில் உள்ள கதைகளை வாசகன் ஊன்றிப் படிக்க, படிக்க ஆசிரியரின் சுயதேடல் வெளிப்பட்டு, வாசிப்பு அனுபவத்தையும் தேடலாய் விரிக்கிறது. ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு வகையான தேடல். சராசரி வாழ்கையின் மறுபக்கத்தை, அறிதலின் மூலத்தை, தேடலின்மையை, தன்னைக் கடந்த நிலையை, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை, இன்னும் தொலைவைத் தாண்டி அதற்கும் அப்பால் உள்ள ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கின்றன இவர் படைப்புகள். முற்றுப்பெறாத தேடல்களின் இயல்பான சுவாரசியம் இவர் கதைகளை வலுப்படுத்துகிறது. ஐம்புலன் களுக்கும் நுகரக் கிடைக்கும் இயற்கையின் அழகியலைத் தன் தேடலின் ஒரு பிரதிபலிப்பாக பார்க்கிறார் ஆசிரியர். விளைவு - இவரது வர்ணனைகளில் இயல்பான கவித்துவ மிளிர்வுகள், ஆங்காங்கே தாமிரபரணியின் இதமான குளிர்ச்சியுடன்.

'வரம்' - தலைப்புச் சிறுகதை. சிறுகச் சிறுக எயிட்ஸினால் இறந்துகொண்டிருக்கும் மகனின் இருப்பையும் இறப்பையும் பற்றி ஒரு தாயின் அருவ உணர்வுகள் வார்த்தைகளில் வடிவம் பெறும் கதை. வாழ்வின் சோகமான கால கட்டங்களில் தாய் மகன் உறவில் தோழமையும், திறந்தமனமும் சாத்தியமா என்று சோதிக்கப் பட்டிருக்கிறது. தாய்மை என்பது உயிரை அளிப்பது மட்டும்தானா என்ற நுட்பமான கேள்வி மெல்ல அதிர்விக்கிறது. "உணர்வுக்கும் உதட்டுக்கும் இடையே உள்ள இணைப்பு பழுதடைந்துவிட்டது." என்பது போன்ற தடித்த வரிகள் மனதைக் கனக்கச் செய்கின்றன.

'சிற்றோடைத் தீவுகளாய்' வாழ நேர்ந்தாலும் குடும்பம் என்ற அமைப்பை இன்றைய இயந்திர வாழ்க்கையிலிருந்து ஆறுதல் தரும் அம்சமாக முன்வைக்கிறார் ஆசிரியர். 'விவாகரத்துக்கள் அமெரிக்காவில் மிக மிக அதிகம். அங்கு வாழும் நம் இந்தியர்களிடம் கூட'- என்ற பொதுப் படையான தவறான புரிதல்களுக்கு நடுவே இந்தக் கதை வித்தியாசப்படுகிறது. "குற்ற வுணர்வும், அனுதாபமும், சுயவெறுப்பும், பாவமன்னிப்பும், தொலைவுகளும் காலத்துள் கரைந்து உறவுகள் தம்மைத் தாமே அடையாளம் கண்டுகொள்ளும்."-- முடிவை வாசகரிடம் விட்டு விட்டு நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறது இக்கதை.

தமிழ்நாட்டு வாசக வட்டத்தின் விஞ்ஞான அறிவைக் குறைத்து மதிப்பிடுவதாலோ என்னவோ தமிழில் அதிகம் விஞ்ஞானப் புனைவுகள் காணப்படுவதில்லை. மனிதப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் பற்றியும், இன்றைய மனித சமுதாயம் விஞ்ஞானத்தின் மூலம் முன்னேறி வளர்ந்த பின் மிஞ்சப் போவதைப் பற்றியுமான அடிப்படைக் கேள்விகளை முன்வைத்து காஞ்சனாவின் விஞ்ஞானப் புனைவுகள் நகர்கின்றன. "சாவு இல்லைன்னா ஆசை இருக்காது. ஆசை இல்லைன்னா வாழ்க்கை இருக்காது. ஆக சாவு இல்லைன்னா வாழ்வும் இல்லை." - விஞ்ஞான தளத்தில் இதை நிறுவ இவருக்குக் கை வந்திருக்கிறது (அறிதலின் மூலம்' கதையில்). படைத்தலும் காத்தலும் அழித்தலும் தவிர நான்காவதாக ஒரு தொழில் இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க இயலுமா என்பது கேள்விக்குறியெனினும், அதை ஆசிரியரின் எதிர்கால விஞ்ஞானப் புனைவு கள்தான் சொல்லவேண்டும்.

பெண்களின் இடமாகக் கருதப்படும் பின்கட்டிலிருந்து முன்கட்டிற்கும் அதற்கப் பாலும் நகர்வதற்கு எத்தனை படி தாண்டல்கள் தேவையாக இருக்கிறது! "பெண்ணியம்" - என்று பெருங்குரலில் பிரச்சாரம் செய்யாமல் மிக இயல்பாக, நுட்பத்துடன் இத்தகைய தாண்டல்கள் சித்தரிக்கப் படுகின்றன. பெண் விடுதலையில் மனித குலத்தின் மறுபாதியாகிய ஆணுக்கும் இயற்கையான பங்குண்டு என்பதை மென்மையாகக் கோடிட்டுக் காட்டுவதுடன் நிறுத்திக் கொள்கிறார். "நீ எல்லாமா இருக் கணும்னு "வசியம் இல்லை. உனக்கு எது "வசியம், எது சரின்னு படுதோ, அத உன்னால செய்ய முடியணும்" என்று சுதந்திரத்தை விளக்கிச் சாத்தியமாக்கும் பெரியம்மாக்கள் எல்லா 'வீடு'களிலும் இருந்தால் தேவலை. 'வழிப்பறி'-யின் இளம்பெண்ணும் பலவற்றையும் எதிர்த்தே படிப்பு பெறும் நிலை. ஆடிமாதக் காற்றில், பாவாடைகள் கால்களைச் சுற்றும் குடை ராட்டினமாவதை" ரசிப்பதையும், "கன்றுக்குட்டித் துள்ளலை"யும் முதன்முறையாக இழந்து, தற்காப்பும் சந்தேகமும் தரிக்க வைக்கும் ஒரு நிகழ்வு. "மறுமலர்ச்சியில், அதன் தொடர்ச்சியில்தான் மனிதர்களுக்கு எத்தனை நம்பிக்கை!" - சில நேரமேயுளுள்ள கோலம் தினம் தினம் போடப்படுவதை வியக்கும் ஆசிரியரின் வரியிது. அன்றாட நிகழ்வாக எதையும் ஒதுக்கி விடாமல் மனித வரலாற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் விசயமாக அவரது விஷே பார்வையில் ஒவ்வொன்றும் விரிகிறது.

'நீலப்பச்சை 1-6' - ஒரு வண்ணக்கலவையாய் முளைத்து, நீலப்பச்சையாய்த் தழைத்து, முடிவில் எல்லா வண்ணங்களையும் அடக்கிய பூரண வெண்ணிறமாய் நிற்கும் ஒரு உருவகக் கவிதை. 'எல்லாவற்றையும் அடைந்து நிறைவது பூரணம்' என்பதன் எதிர்ப்பலையாய் 'இன்மையில் பூரணம்' என்ற தரிசனம். இது மிக அருவமான கூற்றையடக்கிய (abstract) கதை. அதனால் வேறொரு பொருள் பொதிந்திருக்குமோ என்ற ஐயத்தில் இக்கதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் அகற்ற விசித்திர ஆசை ஒன்று பிறக்கிறது வாசகருக்கு.

பொருளாதார வளர்ச்சியும், நுகர்வுக் கலாச்சாரமும் அன்றாட குடும்ப வாழ்க்கை முறைகளை மாற்றி, மழலைகளின் முதுகை முறிக்கும் படிப்பும் சாட்டிலைட் சேனல்களும், குடும்ப நேரத்தை அபகரித்துக்கொள்கின்றதே என்ற கவலை 'X'-இல் வெளிப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு வயது பையனின் சிந்தனையில் இந்த 'X'களை அடையாளம் காணும் பின்புல அறிவு பற்றி தர்க்கம் செய்யவில்லை. பழங்கால வளர்ப்புமுறைக்கும் "மூச்சு விடக் கொஞ்சம் நேரத்துக்கும்" ஏங்குகின்றன மனங்கள்.

'பேச்சு வார்த்தைகள்'-இல் வெளியிடப்படும் பயங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிக் கருவாக விரியக்கூடியவை. "உலகமயமாதல்- க்ளோ பலைஸேஷன் என்பதன் விளைவாக எல்லாக் கலாச்சாரங்களும் ஒரே வகையான முகமூடி அணிய ஆரம்பிப்பதைக் கவனித்து" ஏற்படும் பயம் ஒரு உதாரணம்.

"ரசித்து அங்கீகரிக்க யாராவது வேண்டும். இல்லையெனில் உணர்வுகளுக்கும் பயனில்லை. "-அலுப்பின் எல்லையில் ஒரு சராசரி மனிதனின் மறுபக்கத்தில் இப்படியெல்லாம் சிந்தனைகள். சோதனை முயற்சியாக 'மறுபக்கம்'.

'நாரை சொன்ன கதை'--நிகழ்வுகளற்ற கதையைச் சொல்கிறார் ஒரு கதைசொல்லி. கதையென்றால் பெருங்காவிய அளவு சோகங்கள் மட்டுமே நிரம்பியதா? எத்தனை வகை வாசகர்கள் உண்டோ அத்தனை வகைக் கதைகளும் இருக்குமா? வார்த்தைகளின் நடுவே நிழலாடும் மௌனங்களின் பொருள் என்ன? -- கதை பற்றிய கதை இது.

'சில பயணக் குறிப்புகள்'- அருவி போல் பிரவாகமெடுத்து, இவரது நடை, இவரைத் தாண்டித் தானே எழுதிக்கொண்ட கதை இது. "காலமே நிரந்திரமும் சுதந்திரமும் நிறைந்த ஒரு மறைவிடம் தானோ?" - நிதரிசனம் ஒன்று கேள்வியாக பிறக்கிறது. "நான் ஒரு நாடோடி. பிறந்த நாடு என்பது நான் என்றோ இழந்துவிட்ட, இன்று அந்நியப்பட்ட, என் கற்பனையில் மட்டுமே தொடரும் ஒரு லட்சியவாதம். புகுந்த நாட்டின் அந்நியம் என்றுமே மாறாதது. ....இந்தத் திரிசங்கு அந்நியம் என் சுய தேர்ந்தெடுப்பு." - தம் தேர்வாகப் புலம்பெயர்வோர்க்கு பிந்தைய காலகட்டத்தில் பிடிபடும் உண்மை இது. தெளிவுடனும் வேகத்துடனும் தன் உணர்வு பூர்வமான மொழியின் மூலம் வெளிப் படுத்துகிறார், இருபதாண்டு கால அமெரிக்க வாசியான ஆசிரியர்.

தன்னைத் தானே முழு உண்மையுடன் எப்போதாவது அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறார் காஞ்சனா தாமோதரன். இத்தகைய ஆழ்மன உந்துதலின் வெளிப்பாடே இவரது வருங்காலப் படைப்புகளைப் பற்றிய நமது உறுதியான நம்பிக்கைக்கு அடிப்படை.

'வரம்' - காஞ்சனா தாமோதரன்

கவிதா பதிப்பகம்
15 மாசிலாமணி தெரு
தியாகராய நகர், சென்னை 600 017
மின்னஞ்சல்: kavitha_publication@yahoo.com

மனுபாரதி

© TamilOnline.com