வெண்டைக்காய் மசாலா
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் 1/2 கிலோ
தக்காளி 1
புளிக்காத தயிர் 2 கப்
வெங்காயம் 5
பச்சை மிளகாய் 3
மிளகாய்த்தூள் 1 1/2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி (தேவையெனில்)
கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 15
கசகசா 1 மேசைக் கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு

குறிப்பு: புளிக்காத புதிய தயிரை மெல்லிய மஸ்லின் துணியில் கட்டி தண்ணீரை வடிகட்டி விட வேண்டும். நீர் முழுவதுமாக வடிகட்டியவுடன் தயிரை துணியிலிருந்து எடுத்து ஸ்பூனால் அடித்து கலக்கி வைக்கவும்.

செய்முறை

வெண்டைக்காயை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் ஒரு இன்ச் நீளத்துக்கு வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களைக் குறுக்கு வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் கசகசா, முந்திரிப் பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

வதக்கிய வெங்காயத்துடன், வறுத்த முந்திரி, கசகசாவைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய்த் துண்டங்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கருகக்கூடாது.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சீரகம், வெந்தயம், அரைத்தவிழுது, பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அத்துடன் கரம் மசாலா தூள்தூவி விடவும்.

பொன்னிறமாக வரும் வரை சிறு தீயில் வதக்கவும். அத்துடன் சர்க்கரை சிறிதளவு, உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும். (எண்ணெய் தனித்து வரும் வரை) வதக்கவும்.

வடிகட்டிய தயிரை அத்துடன் சேர்க்கவும். எண்ணெய் மேல் எழும்பி வரும் வரை கொதிக்க விடவும். பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய்ச் சேர்த்து சில நிமிடம் வரை கொதிக்க விடவும்.

நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும். சப்பாத்தி, பூரி இவைகளுடனோ அல்லது சாதத்துடனோ பரிமாறவும்.

© TamilOnline.com