புகையை விரட்டிய தீர்ப்பு
இந்தியாவில் 'புகையிலை' சம்பந்தப்பட்ட நோய்களால், ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் மரண மடைகின்றனர். எய்ட்ஸ், சாலை விபத்துக்கள், போதை மருந்துகள், மதுப் பழக்கம் போன்றவற்றால் மரணமடைபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதித்து, அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் நீதிபதி நாராயண குருப்.

பொதுநல மனு ஒன்றின் அடிப்படையில் இப்பிரச்சனையை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றிருந்த குருப், 1999- ஜூலை12ல் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த தீர்ப்பை வழங்கினார்.

அந்த தீர்ப்பின் படி பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு அதிகபட்சமாக ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில், அவற்றை அங்கேயே பற்ற வைப்பதற்கான வசதியை அளிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறையினரும் இத்தீர்ப்பினை அமல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் குருப். அவரது தீர்ப்பு இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதோடு பரவலான வரவேற்பையும் பெற்றது.

சமீபத்தில் சென்னை வந்த அவர், அப்போலோ மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதிலிருந்து ... '' மக்களை புகைப்பிடிக்கக் கூடாது என்று சட்டபூர்வமாகத் தடுப்பது இயலாது. ஆனால், பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது எனவும், மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துவது கூடாது எனவும் வற்புறுத்த முடியும்.

புகைப்பவர்கள் வெளியிடும் புகையால், அப்பழக்கம் இல்லாதவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். புகைப்பழக்கத்தால் உண்டாகும் புற்றுநோய் ஏற்படுத்தும் தாங்க முடியாத வலி மிகக் கொடுமையானது. அந்நோயைக் குணப்படுத்த ஏராளமான பொருட்செலவு ஆவதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

புகைப்பழக்கம் இதயத் தமணிகளின் சுற்றளவை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. இதனால் பிராணவாயுவின் அளவு குறைந்து விடுவதால் தமணிகள் செயலிழந்து விடுகின்றன. புகைக்கும் போது வெளிப்படும் கார்பன் மோனாக்ஸைடின் அளவு, தொழிற்சாலைகளில் அனுமதிக்கும் அளவை விட 100 மடங்கு அதிகம்.

இந்நிலையில், புகைப்பழக்கத்தால் மனித குலத்துக்கு ஏற்படும் கேடுகளைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தொடர் வண்டிகள், பேருந்துகள், திரையரங்குகள் போன்று பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் புகைப்பதால், அப்பழக்கம் இல்லாதவர்கள் படும் வேதனையும், அவஸ்தையும் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.

அரசும், அதிகாரிகளும் இப்பிரச்சனையில் செயலற்று இருப்பதால், புகைப்பழக்கம் இல்லாத அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் சட்ட அமைப்புக்கு ஏற்பட்டுவிட்டது.

பொது இடங்களில் புகைப்பதற்குத் தடை விதிப்பதால், அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை விட புற்று நோயாளிகளுக்காக அரசு செலவிட வேண்டிவரும் தொகை மிக அதிகம்.

மத்திய அரசும் இப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பரிசீலித்து வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக, கர்னாடக மாநில அரசுகள் இத்தடையை அமல்படுத்துவதற்காக உயர்நீதிமன்றங்களை அணுகி உள்ளன.

எனது தீர்ப்புக்கு, செய்தி ஊடகங்களும் உலக சுகாதார அமைப்பும் ஒருமித்த ஆதரவு அளித்ததும், ஜோர்டானில் நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்கும் கௌரவமும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கேரள மாநிலத்தில் புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்கள் ஓரளவாவது நிவாரணம் பெற்றுள்ளனர் என்ற திருப்தி மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே எனது விருப்பம்''.

எம்.எஸ்.ராஜகோபால்.

© TamilOnline.com