நிக்கோட்டின் அபாயம்
மே 30 - புகைக்கும் பழக்கத்தை எதிர்க்கும் நாள்

பெப்சி-கொக்கோ கோலா என ஆசிய நாடுகளில் நுழைந்து பகாசுர வளர்ச்சி கண்டுவிட்ட பன்னாட்டு மென்பான நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களினது - குறிப்பாக அமெரிக்கப் புகையிலை நிறுவனங்களின் - பார்வையும் ஆசிய நாடுகளின் மீது திரும்பியிருக்கிறது. தமதுத் தயாரிப்புகளை ஆசியச் சந்தைகளில் ஏகத்துக்கும் பரப்பத் தொடங்கியுள்ளன. கடத்தி வரப்படும் அல்லது வெளிநாட்டு நண்பர்களால் தரப்படும் மால்பரோ', 'ரோத்மன்ஸ்', 'பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்', '555' என்று அந்நியப் புகைச்சரக்குகளின் ருசி கண்டவர்களுக்கு இவற்றை உள்ளூர்க் கடைகளிலேயே தங்கு தடையின்றிக் கொள்வனவு செய்வதென்பது கொண்டாட் டமான ஒன்றுதான்.

ஆனால் மேற்கு நாடுகளில் இருந்து புகை இப்படி ஆசிய நாடுகளை நோக்கிச் சடுதியாக நகர ஆரம்பித்திருப்பதன் பின்னணி அதிர்ச்சி தரக்கூடியதாயே உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வை எப்போதுமே உலக சனத்தொகையில் பாதிக்கும் மேல் (58.7 வீதம்) கொண்டிருக்கும் ஆசிய நாடுகளின் மீதுதான் . அதுவும் இந்தியா மீது சற்று அதிகமாகவேப் பதிந்திருக்கிறது. சிறந்த சந்தையாகத் தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றிவிட்ட இந்தியாவின் சனத்தொகை (இப்போது 100 கோடி) பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்குச் 'சக்கைபோடு போடும்' சந்தையாக இந்தியாவை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. சுஸ்மிதா, ஐஸ்வர்யாராய், டயனா, யுக்தா முகி, இப்போது லாரா தத்தா என அடுத்தடுத்து உலக அழகியாக இந்தியாவை முடிசூட்டுவது இந்தியச் சந்தையைக் கருத்திற்கொண்டு அழகு சாதனக் கம்பெனிகள் செய்யும் கைங்கரியம்தான் என்றக் குற்றச்சாட்டு இப்போது எழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சிகரெட் விவகாரத்தில் இந்தச் சந்தையையும் மீறிய ஒரு காரணம் இருக்கிறது. இதை விளங்கிக் கொள்ளக் கொஞ்சம் மூன்று ஆண்டுகள் பின்நோக்கிச் செல்ல வேண்டும்.

'அமெரிக்காவில் மரணங்களில் ஐந்தில் ஒன்றுக்குப் புகையே எமனாக இருக்கிறது. இப்படி அமெரிக்காவில் வருஷமொன்றுக்குச் சுமார் நாலு இலட்சம் பேரைப் புகை தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறது. புகையால் மூச்சை நிறுத்தியவர்களையோ அல்லது புகைப்பதை நிறுத்தியவர்களையோ ஈடுசெய்யும் புதிய புகையாளர்களில் 90 சதவீதம் பேர் சிறுவர்களாயும் பதின் பருவத்தினராயுமே (Teen age) உள்ளனர்.

அச்சமூட்டும் இந்த உண்மைகளைச் சொல்லிப் புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் கூப்பாடு போட்டதில் 1997 செப்டம்பர் மாதம், ·புளோரிடா அரசுக்கும் அமெரிக்கப் புகையிலை நிறுவனங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அமெரிக்கா மக்களைக் காப்பாற்ற வந்த இந்த ஒப்பந்தம் தான் கடைசியில் ஆசிய நாடுகளுக்கு எமனாக வந்து அமைந்துவிட்டது.

ஒப்பந்தப்படி புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயைக் குணப்படுத்த ஆகும் செலவை ஈடுசெய்யப் புகையிலை நிறுவனங்கள் ·புளோரிடா அரசுக்குப் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தர வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும். சிறுவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள தானியங்கி சிகரெட் இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும். விளம்பரங்களில் மனிதர்களையோ அல்லது கார்ட்டூன் விலங்குகளையோ கூடப் பயன்படுத்தக்கூடாது, புகை பிடிப்பதால் எவ்வளவு நிக்கொட்டின், 'தார்' பொருட்கள் உடலுக்குள் செல்கின்றன என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். 'புகைத்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது' போன்ற நாசூக்கான வாசகங்களையெல்லாம் கடாசிவிட்டு, 'புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும்', 'புகைத்தலால் மரணம் நேரலாம்' என்பது போன்ற பயமூட்டும் எச்சரிக்கைகளைச் சிகரெட் பெட்டிகளில் தெளிவாகப் பொறிக்க வேண்டும். இத்தனையும் போதாது என்று புகைபிடித்தலுக்கு எதிரானத் திட்டங்களுக்கு இப்புகையிலை நிறுவனங்கள் நிதியுதவியும் செய்ய வேண்டும்.

இப்படி அடி மேல் அடியாக ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் கையெழுத்தான ஒப்பந்தம் கடைசியில் ·புளோரிடா மாகாணத்தோடு நின்றுவிடாமல் அமெரிக்கா முழுவதுக்குமே பொருந்தும்படி ஆகிவிட்டது. இதன்படி இந்த நிறுவனங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் 368.5 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசுக்குச் செலுத்தியாக வேண்டும்.

35 வருடங்களுக்கு முன்பாகவே சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை இடம் பெற வைத்த புகையிலை எதிர்ப்புச் சக்திகளுக்கு, இப்போது கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய வெற்றி புகையிலை நிறுவனங்களை ஆட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. மற்றவர்களின் சுவாசப்பைகளை அரிக்கும் புகையிலை நிறுவனங்களுடைய வருமானம் நட்ட ஈட்டுத் தொகையாக ஒருபுறமும், விளம்பர யுக்தியின் ஆணிவேர் அசைக்கப்பட்டு அதனால் ஏற்படும் விற்பனைச் சரிவு இன்னொரு புறமுமாக அரிக்கப்படத் தொடங்கிவிட்டது. நிலைகுலைந்து போன புகையிலை நிறுவனங்களுக்குச் சரிவைச் சரிக்கட்ட அமெரிக்காவுக்கு வெளியே வலுவாகக் காலூன்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் தங்களது சந்தையை விரிக்கத் தொடங்கியதன் பின்னணி இதுதான்.

விளம்பரம் மற்றும் விற்பனை யுக்திகளின் சகிதம் புகைபடியாதக் கன்னி நுரையீரல்களைத் தேடி வேட்டையில் இறங்கியுள்ள புகையிலை நிறுவனங்கள் அவற்றின் இலக்குக்கும் மேலாக விற்பனையை விஸ்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இறுக்கமானச் சட்டதிட்டங்களினால் அமெரிக்காவின் உள்ளே 17 சதவீத சரிவைச் சந்தித்த புகையிலை நிறுவனங்கள் ஏற்றுமதியின் மூலம் தமது விற்பனையை 260 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் இயங்கும் நுகர்வோருக்கான அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

வருடம் ஒன்றுக்கு உலகில் 4 மில்லியன் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கும் புகையிலை வரும் 20 ஆண்டுகளில் எய்ட்ஸ் உட்பட எந்த ஒரு நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோரைப் பலிவாங்கும் என எச்சரிக்கப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது ஆசிய நாடுகள் தான். ஏற்கனவே உள்ளூர்ப் புகைப்பொருட்களால் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் ஆசிய நாடுகளுக்கு இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் சிகரெட்டுக்களையும் சேர்த்து இழுப்பது பெரும் சுமையாகவே இருக்கப் போகிறது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள் புகைத்தலைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதி புகையிலை நிறுவனங்களின் மீதும் புகைப்பவர்கள் மீதும் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் புகையிலை நிறுவனங்கள் பெற்றுத் தரும் கொள்ளை இலாபம் வறுமையில் உழலும் ஆசிய நாடுகளின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது.

சனத்தொகையில் உலக அளவில் முதலாவதாக நிற்கும் சீனாவே சிகரெட் உற்பத்தியிலும் நுகர்விலும் முன்னணியில் நிற்கிறது. சீனாவின் மரணத்துக்கானக் காரணிகளில் முன்னணியில் நிற்பதும் சிகரெட்தான். சீனாவின் மக்கள் தொகையில் 34.9 சதவீதம் பேர் புகை பிடிக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன் பேர் இங்கு சிகரெட்டால் உயிரிழப்பார்கள் என எதிர்வு கூறப்படுகிறது. சீன அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டதாகவே தெரிகிறது. மொத்த வருமானத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையால் பெறப்படும் தொகை 10 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தாலும் சீனஅரசு தனது 300 நகரங்களில் சிகரெட்டுக்கான விளம்பரங்களைத் தடைசெய்திருக்கிறது. சிகரெட்டின் விற்பனை விலையையும் ஆரோக்கிய வரி என்ற பெயரில் உயர்த்திவிட்டிருக்கிறது. விற்பனை விலையில் 10 சதவீத அதிகரிப்பு என்பது சிகரெட் பாவனையை 4 சதவீதத்தால் குறைக்கச் செய்யும் என்பது நிபுணர்களின் கருத்ததாக இருக்கிறது.

சமீபத்தில் இலங்கையில் 'சிலோன் டுபாக்கோ கம்பெனி' பத்திரிகை, வானொலி - தொலைக்காட்சி, - விளம்பரப் பலகைகள் மூலம் செய்யும் அத்தனை விளம்பரங்களையும் உடனடியாகவே நிறுத்துவதெனவும், விளையாட்டுத் துறைக்கு அனுசரணையாக இனிமேல் விளம்பரங்கள் எதனையும் வழங்குவதில்லையெனவும் அறிவித்துள்ளது. மேலும் சிகரெட்டில் அடங்கியுள்ள 'நிக்கொட்டின்', 'தார்' போன்றவற்றின் அளவுகளையும் சிகரெட் பெட்டிகளில் விரைவில் அச்சிடப் போவதாயும் அறிவித்திருக்கிறது.

ஆனால், நிக்கொட்டின் நஞ்சின் போராபத்தில் சிக்கியிருக்கும் இந்தியாவில் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. திறந்தப் பொருளாதாரக் கொள்கையினூடாக நுழையும் 'பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்', 'ரோத்மன்ஸ்', '555' போன்றத் தயாரிப்புக்கள் இந்தியாவின் புகையிலை நிறுவனங் களினாலேயே அடைக்கப்பட்டு விநியோகக்கப் படுகின்றன. ஏற்கனவே புகையிலை உற்பத்தியில் உலகில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா இப்போது பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களின் வருகையுடன் 'உலகின் புகைக்கிடங்கு' ஆக மாறிவிடும் அபாயம் அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் சிகரெட் தவிர, புகையிலை வெற்றிலையோடு சேர்த்தும், பாக்குத் தூளோடு கலக்கப்பட்டு 'மசாலா' என்ற பெயரிலும், சுண்ணாம்புடன் சேர்த்துப், 'பான் பராக்' ஆகவும் உட்கொள்ளப்டுகிறது. இப்படிப் புகையிலைப் பாவனையால் இந்தியாவில் வருடமொன்றுக்குப் 10 இலட்சம் பேர் வரையில் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். (வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகுபவர்கள் உலக அளவில் இங்குதான் அதிகம்) புகையிலைத் தொழிலால் 1100 கோடி இலாபம் சம்பாதித்து இரட்டிப்பு மடங்கிலும் அதிகமாகப் (2400 கோடி ரூபாய்) புகையிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கென அரசுமருத்துவமனைகள் மூலம் செலவழித்துக் கொண்டிருக்கும் இந்தியா இவ்விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமலேயே திணறுகிறது.

பொ. ஐங்கரநேசன்

© TamilOnline.com