பிரியாத வர வேண்டும் - சினிமா விமர்சனம்
நடிப்பு : பிரசாந்த், ஷாலினி, புதுமுகம் கிருஷ்ணா, புதுமுகம் ஜோமோள், மணிவண்ணன், 'நிழல்கள்' ரவி, மனோரமா, அம்பிகா, அஸ்வினி, ஜனகராஜ், கோவை சரளா, வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு
இயக்கம் : கமல்
இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்

குழந்தைப் பிராயத்தில் இருந்து ஒன்றாகப் பழகி விளையாடி, படித்து, ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் இருபாலர்கள் ஒரு நேரத்தில் தங்களுக்குள் உருவான காதல் உணர்வைக் கவனிக்கத் தவறுகின்றனர். சுற்றியுள்ள காதலர்களைக் கிண்டலடித்துக் கொண்டும் தேவையில்லாமல் இருவரும் வேறு யாரையோ காதலிக்க முயன்றும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு இறுதியில் ஜோடி சேருகிறார்கள்.

மணிவண்ணன்- அஸ்வினி தம்பதியரின் மகனாக பிரசாந்த். 'நிழல்கள்' ரவி- அம்பிகா தம்பதியரின் மகளாக ஷாலினி நடித்திருக்கிறார்கள். பிரசாந்தும் ஷாலினியும் குளிப்பது, தூங்குவது போன்ற நேரம் தவிர பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறார்கள். குழந்தையில் இருந்து ''வாடா போடா'' என்றே பேசிப் பழகிவிட்ட அவர்களுக்குள் ஒரு கல்லூரி கலைவிழா ஏற்படுத்திய சிறிய பிரிவு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைக் காதல் என்று உணர்கிறார் பிரசாந்த். திடீரென்று காதலிப்பதாகச் சொன்னால் ஷாலினி என்ன நினைப்பாரோ என்று பின்வாங்கிவிடுகிறார்.

இதே நேரத்தில் ஷாலினியையும் பிரசாந்தையும் முறையே வேறு இருவர் காதலிக்கிறார்கள். பிரசாந்தின் ஒப்புதலோடு புதுமுகம் கிருஷ்ணாவின் காதலுக்கு ஓகே சொல்லி விடுகிறார் ஷாலினி. கையை விட்டு நழுவிக் கொண்டிருக்கிற காதலியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் பிரசாந்த். ஷாலினிக்கு ஒரு பக்கம் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. ஒருநாள்கூட பிரிந்திருக்க முடியாத ஷாலினி அமெரிக்காவில் வாழப்போவதற்காக வருந்தி, ''பேசாம நீயே என்னைக் காதலிச்சிருக்கலாமே'' என்கிறார். சுழன்றடித்துவிட்டு இப்படி வந்து நிற்கிறது கதை.

காதல் உணர்வைச் சற்று முன்னரே உணர்ந்துவிட்டு மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் பிரசாந்த் ரசிகர்களின் அனுதாபங்களை அள்ளுகிறார். முதல்பாதியில் ஷாலினியும் அவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியின் போதும் இரண்டாவது பாதியில் பிரசாந்த் தனிமையில் புழுங்கும் போதும் சிறப்பாக நடித்திருகிறார். ஷாலினியின் நடிப்பில் படு இயல்பு. கேமிரா இருப்பது தெரியாமல் அவர் இஷ்டம் போல இருந்தது மாதிரி இருக்கிறது.

கிருஷ்ணா, ஜோமோள் இருவருக்கும் ஒருதலைக் காதலர்கள் பணி. அவர்கள் மீது அனுதாபப்படுவதற்குக்கூட வாய்ப்பில்லை. கதாநாயக- நாயகியின் காதல் விவகாரமே பெரிதாக இருப்பதால் இவர்களின் காதலுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை மரியாதைதான்.

மணிவண்ணன், நி.ரவி, மனோரமா, அம்பிகா, அஸ்வினி ஆகியோர் கலகலப்பான குடும்பப் பின்னணிக்கு உதவுகிறார்கள். வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு கோஷ்டி கல்லூரி மாணவர் சூழலுக்கு. எந்தப் படத்திலும் இப்படியொரு காமெடி மாணவர் கூட்டம். கல்லூரிகளில் வேறு மாணவர்களே படிக்க மாட்டார்களா? கோவை சரளா காமெடி என்ற பெயரில் அ(க)டிக்கிறார்.

ஷாலினி இல்லாத பாடல்காட்சியை மலையாளத்தில் இருந்து எடுத்து ஒட்ட வைத்திருக்கிறார்கள். எடிட்டருக்கும் இயக்குநருக்கும் சபாஷ். வாஸ்கோட காமா பாடலில் காட்டப்படும் இடங்கள் சென்னையில்தான் இருக்கின்றனவா? அமெரிக்கா போல காட்டியிருக்கிறார்கள்.

ரசித்துப் பார்க்க நிறைய காட்சிகள் நிறைந்த படம்.

தமிழ்மகன்

© TamilOnline.com