என் புருஷன் குழந்தை மாதிரி - சினிமா விமர்சனம்
நடிப்பு : லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு, ஆர். சுந்தர்ராஜன், பொன்னம்பலம், வினுசக்ரவர்த்தி
இயக்கம் : எஸ்.பி. ராஜ்குமார்
இசை : தேவா

தன்னை அறியாமல் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்ட (?) கணவனின் நல்ல குணத்தை மனைவி புரிந்து கொண்டு மீண்டும் ஏற்றுக் கொள்ளும் கதை.

தமிழ் சினிமா ஆய்ந்த தமிழ் நெஞ்சங்களுக்குச் சற்றே பழக்கப்பட்ட கதைதான். இரண்டாவதாகச் சேர்ந்த மனைவி சொல்லொணா தியாகங்களைச் செய்துவிட்டு உயிர்நீக்கும் காட்சியும் படத்தில் உண்டு.

பெண்கள் தியாக தீபங்களாகச் சித்திரிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இத்தகைய தியாகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணைவிட கதாநாயகனுக்கே சாதகமாக இருப்பதுதான் எப்படி என்று புரியவில்லை.

தேவயானியை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார் லிவிங்ஸ்டன். படிக்காதவராக இருந்தாலும் அவருடைய நல்ல குணத்துக்காக அவரை விரும்புகிறார் தேவயானி. இந்த நேரத்தில் கரகாட்டக்காரியான விந்தியாவை பொன்னம்பலத்திடம் இருந்து மீட்பதற்காக ஏலம் எடுக்கிறார். தோட்டத்து பங்களாவில் தங்கியிருக்கும் அவரிடம் குடிபோதையில் தவறிவிடுகிறார். மறுநாள் தேவயானிக்கும் லிவிங்ஸ்டனுக்கும் திருமணம். இந்த உண்மை தெரிந்தும் லிவிங்ஸ்டனைத் தாலிகட்டச் சொல்கிறார் மாமனார் ஆர்.சுந்தர்ராஜன். இதனால் இரண்டு இடத்திலும் லிவிங்ஸ்டனுக்கு குழந்தை வளர்கிறது. இத்தோடு விட்டிருந்தால் பரவயில்லை. லிவிங்ஸ்டனின் அப்பாவான வினுசக்ரவர்த்திக்கும் இரண்டு மனைவிகள், ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன என்ற சரித்திரப் பின்னணி வேறு. இது கதையின் நியாயங்களை வேடிக்கையாக்கிவிடுகிறது.

கடைசியில் பொன்னம்பலம், லிவிங்ஸ்டன் ஆகியோரது தவறுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு மன்னிக்கப்படுகிறது. குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மலை உச்சியில் இருந்து விழும் விந்தியாவின் பாத்திரம் இரக்க மூட்டுகிறது. பார்வைக்குப் பொல்லாதவர் போல இருந்தாலும் உள்ளத்தால் பச்சைக் குழந்தை என்ற வேடம் லிவிங்ஸ்டனுக்கு. படிக்காதவராக இருந்தாலும் பண்புள்ளவராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தேவயானி வேடமும் சிறப்பு.

தேவயானியை அசத்துவதற்காக அவர் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பும்போது, ''வருங்கால அமெரிக்க ஜனாதிபதி'' என்றெல்லாம் தன்னைப் புகழ்ந்து கோஷம் போட வைக்கிறார் லிவிங்ஸ்டன். தேவயானிக்குத் தெரியாமல் விந்தியாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வரும் லிவிங்ஸ்டனைப் பார்த்து ''பெண்ணினத்தின் காவலன்'' என்று ஊர் பையன் ஒருவன் கோஷம் போடுவதும் அதை அங்குவரும் தேவயானி பார்த்துக் கொந்தளிப்பதும் சுவாரஸ்யமான காட்சி.

வடிவேலுவைத் துரத்தும் அந்தப் பைத்தியக்காரர் யாரப்பா... பைத்தியமாகவே மாறி நடித்திருக்கிறார்.

தமிழ்சினிமா போற்றும் பெண்ணினக் கதை.

தமிழ்மகன்

© TamilOnline.com