காற்றுக்கென்ன வேலி? தெனாலி - சென்சாரின் ஓரவஞ்சனை
ஒவ்வொரு காலகட்டத்திலும், எது பிரதானமாகப் பேசப்படுகின்றதோ, அதை தமிழ்த்திரையுலகம் தனதாக்கிக் கொள்ளும். இன்றைக்கு ஈழக்குரல்கள் தமிழ்மொழி மூலமாக கேட்கப்படுகின்றதை தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது கோலிவுட் எனப்படும் கோடம்பாக்கம். வெளிவந்த 'தெனாலி' வெளிவராது போராடிக் கொண்டிருக்கும் 'காற்றுக்கென்ன வேலி'யும் ஒரே மாதிரியான பாணியை உடையவை. அவை இரண்டும் ஒரே சமயத்தில் வரக்கூடாது என்ற நோக்கில்தானோ என்னவோ காற்றுக்கென்ன வேலி பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இரண்டு படங்களின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கு என்று ஒரு சிறிய ஒற்றுமை இருக்கின்றதுபோல் தோன்றுகிறது. தெனாலி படநாயகன் சிகிச்சைக்காக வேண்டி இந்தியா (தமிழ்நாடு) வந்ததைப் போன்றே காற்றுக்கென்ன வேலி கதாநாயகியும் சிகிச்சைக்காக வேண்டியே தமிழ்நாடு வருவதாய் எதிர்பாராது அமைந்துவிட்டது.

தமிழ் சினிமாவில் அடிக்கடியோ, எப்போதாவதோ இது போன்ற ஒத்தக் கருத்துக்கள் திரையில் தோன்றுகின்ற சந்தர்ப்பங்கள் நேர்ந்து விடுவது உண்டு. கதை விஷயத்தில் காற்றுக்கும் காது உண்டு.

தெனாலியின் தாய் மானப்பங்கப் படுத்தப்பட்டதைப் போன்றே காற்றுக்கென்ன வேலி படத்து நாயகியின் சிநேகிதி ஒரு டீச்சர் (குஷ்பூ) கதாபாத்திரமும் கொடியவர்களால் கெடுக்கப்பட்ட கதை படத்தில் வருகிறது.

இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதல்ல நம் நோக்கம். ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட பச்சைக்கம்பள வரவேற்பு, வேறு ஒன்றிற்கு கொடுக்கப்படவில்லையே என்பது தான் நம் கேள்வி.

காற்றுக்கென்ன வேலி திரைப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் மறுக்கப்பட்டதற்கான காரணமாக சொல்லப்படுவது அந்தப் படம் முழுவதும் இலங்கை தமிழ் பேசி நடிப்பது, காயம்பட்ட ஒரு போராளிப் பெண் இலங்கை யிலிருந்து இந்தியாவுக்கு வருவது போன்ற ஈழதன்மையை கொண்ட விஷயங்கள், விடுதலைப்புலிகள் புகழைப்பாடுவதாக இருப்பது என்பதே. பதினேழுக்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் இலங்கையில் உண்டு என்ற மறுப்பு தெரிவித்த இயக்குனர் புகழேந்தி கூற்றிற்கு எதிர்க் கூற்றாக சென்சார் போர்டு கூறுவது, ''இலங்கை என்று சொன்னாலே இரண்டு விஷயம்தான் அவை ஒன்று விடுதலைபுலிகள், மற்றொன்று சந்திரிகா குமாரதுங்கா.'' ஆகவே காற்றுக்கென்ன வேலி திரைப்படம் முழுக்க புலிகளின் பெருமையை பறைசாற்றும் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை தடை செய்தாக வேண்டும்'' என்று தேசியக் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர், புடவை வியாபாரி (இவர் தெனாலி திரைப்படத் தணிக்கை குழுவில் அங்கம் வகித்தவர்) ஆகியோரும் விடாப்பிடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் புகழேந்தி கூறுவது, ''நானும் பத்தாண்டுகளாக பத்திரிக்கையாளனாக இருந்தவன். எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. என் திரைப்படம் ஒரு சாதாரண காதல் கதை மட்டுமே. சிகிச்சைக்கு சென்னை வந்த ஈழப் பெண்ணிற்கும், அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதிலிருந்து கதை வேறு திசையில் சென்று விடுகிறது''. தெனாலியில் சிகிச்சை அளிக்கும் டாக்டரின் தங்கையை நாயகன் காதலித்து அதிலிருந்து கதை தன் போக்கிற்கு போகும். ஒரு வகையில் இரண்டு திரைப்படங்களுமே காதலை மையப்படுத்தி அதன் போக்கில் செல்கின்ற படமாக எடுத்துக் கொள்ளலாம். கதை, நாயகன் நாயகிகளின் பின்னணி மட்டும் ஒன்றாக இருந்து போனது தமிழ் ரசிகர்களின் துரதிர்ஷ்டமே.

ஜனரஞ்சக, கிளுகிளுப்பூட்டும் தெனாலிக்கு சென்சாரால் கிடைத்த வரவேற்பு காற்றுக்கென்ன வேலிக்கு கிடைக்காது போனது ஆச்சர்யமே. இன்னும் சொல்லப் போனால் காற்றுக்கென்ன வேலிக்கு மறுக்கப்பட்டதற்கான காரணம் ''படம் முழுக்க இலங்கைத் தமிழில் பேசுகின்றனர். ஆகவே இந்தப் படம் ஒரு புலி சாயல் கொண்ட படமே'' என்ற வாதம் தெனாலிக்குப் பொருந்தாது போனதற்கு சில எள்ளி நகையாடக் கூடிய எலித் தனமான விஷயங்களே? என்று எண்ணத் தோன்றுகிறது.

தெனாலி ஒரு ஈழத்தமிழனின் அப்பாவித் தனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கதை என்று எடுத்துக் கொண்டாலும் தமிழ் சினிமாவுக்கே உரிய வக்கிரத் தனத்தையும் இப்படம் சுவீகரித்துள்ளது.

தெனாலியில் இன்னொரு அநாகரீக வரைமுறை மீறலும் நடந்தேறியிருக்கின்றது. தன்சிறு பிராயத்தில் கண்முன்னே தனது தாயையும் தந்தையையும் கொடூரமாக சீரழித்தவர்களின் கொடுஞ் செயலைக் கண்டு, மனம் பதைத்து, வெகுண்டு, சினந்து, பின் சுருங்கி சிறுத்துப் போய் வாலிப வயதை எட்டியது வரையிலும் அதன் கொடூர பீடிப்பிலிருந்து மீண்டுவர முடியாது, மனம் பேதலித்து பித்து பிடித்த மனநோயாளியாக உருவான தெனாலியை படம் முழுக்க ஒரு கோமாளியாக சித்தரிப்பதில் தமிழ் சினிமாவின் கோமாளித்தனமும், ஈனத்தனமும் சமஅளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதநேயக் கண்கொண்டு பார்க்க வேண்டிய ஒரு விஷயம், மூர்க்கத்தனத்துடன் கொடூரத்துடன் கேலிக்கண் கொண்டு பார்க்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது போன்ற சிறுவயது கொடூரத்தனத்திற்கு ஆளான நம் சகோதர ஈழத்தமிழனுக்கு நாம் காட்டும் அரவணைப்பு? இதுதானா? இப்படியெல்லாம் இழிவுபடுத்தித்தான் நாம் நம் பொழுதைக் கழிக்க வேண்டுமா என்ன? இதற்காகவா சினிமா இருக்கிறது. அந்த அப்பாவி ஈழத்தமிழனை இரண்டு டாக்டர்களும் ஒரு ஜந்துவைப் போல கையாள்வதை தமிழகத்தில் ஈழ ஆதரவு குரல் கொடுப்பவர்கள் இன்னும் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒரு போராட்ட சமூகத்தை சார்ந்தவனுக்கு கொலைக் கொடூரத்தால் நேர்ந்த ஒரு நோயிற்கு, மருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நம் ஈழ ஆதரவு இந்திய பிரஜைகள் அங்கீகரிக்க முன்வருவார்களா..? தமிழ்நாட்டு கலைஞன் எதிலெல்லாம் சுகம் காண்கிறான் பாருங்கள்.

குருதிபுனல் கமலஹாசனை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ளமுடியாது. இப்படத்தில் தெனாலியையும் டாக்டரையும் மறைமுகமாக ஈழத்தமிழனுக்கும், இந்தியாவு க்கும் உள்ள உறவாக உருவகப்படுத்தி உள்ளார்.

காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை ஒரு கண் கொண்டு பார்த்து நிராகரித்த சென்சார் எந்த கண் கொண்டு தெனாலியை பார்த்தது என்று தெரியவில்லை. ஆடம்பரத்திலும் படாடோபத்திலும் மறைந்துள்ள அழுக்கு கண்புலனாகாது போகும் என்பது உண்மை தானோ...? தெனாலியில் இருப்பது பிரச்சனைக்குள்ளான சர்ச்சைக்குள்ளான விஷயம் அல்ல என்று நம்புகின்ற சென்சார் காற்றுக்கென்ன வேலி படத்தையும் அதற்கு இணையாகப் பார்த்து முன்னரே ஒப்புதல் சான்றிதழ் கொடுத்திருக்கலாமே!

வசந்த் பாரதி

© TamilOnline.com