ஹைக்கூ...
ரோஜாக்களை பறிக்கும் அவசரத்தில்
மிதித்து விடாதீர்கள்
புல்வெளிப் பூக்களை.

பெருமாள் கோயிலில் நாமம்
சிவன் கோயிலில் திருநீறு
மதயானைகள்.

சிரித்துக் கொண்டிருக்கிறோம்
நானும் அவளும்
புகைப்பட ஆல்பம்.

காதலர்கள் காதுக்கு
எட்டுவதே இல்லை.
அலைகளின் அழைப்பு.

திறக்காத கதவையே
சலிக்காமல் தட்டுகிறது.
மரங்கொத்தி பறவை.

தலையாட்டுகிறது மரம்
தளம் போடுகிறது இலை
காற்றின் பாடல்.

எடை இயந்திர ஜோசியம்
பொய் சொன்னது
நீ வராத நாளில்.

ஒரு துண்டு வானம்
கொஞ்சம் நட்சத்திரங்கள்
ஏரியின் நிழல்.

சுகமான வாழ்க்கை
ஆனால் சிறை
மாம்பழத்து வண்டு.

கருட தரிசனம்
நிமிர்ந்தால் விழுந்தது
காக்கை எச்சம்.

ஆராதனைக்கு அவசரமில்லை
இன்னும் மலரட்டும்
பூக்கள்.

படிக்கும் முன்பே
அலை அழித்தது
நண்டு எழுதிய கவிதை.

சொல்லித் தராதே
கிளிக்கு
உன் வார்த்தைகளை.

உதிர்ந்த மலருக்கு உற்சவம்
எறும்புகளின் பிடியில்
உயிரற்ற வண்ணத்துப்பூச்சி.


இரா. சுந்தரமூர்த்தி

© TamilOnline.com