ஒகேனக்கல்
வேகம், தாகம், துள்ளல், ஓட்டம் என்று தண்ணீர் தன் அழகையெல்லாம் அள்ளிக் கொட்டி விளையாடும் இடம்தான் ஒகேனக்கல்.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தண்ணீரால் மட்டுமே அழகு பெற்ற ஊராக உள்ளது ஒகேனக்கல். ஊருக்குள் நுழையும் போதே தண்ணீரின் பேரிரைச்சல் காது களை நிறைத்து விடும். தண்ணீர் பாயும் சத்தம், அருவியாய் விழும் சத்தம், துள்ளிக் குதித்து ஆடும் சத்தம் என்று எல்லாம் கலந்த பேரோசை. அதைக் கேட்டால் சத்தம், ரசித்தால் சங்கீதம்.

தமிழக-கர்நாடக எல்லையில் தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரியிலிருந்து 46 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஒகேனக்கல். செல்லும் பாதையோ புதர்கள் அடர்ந்த மலைப்பாதை. குறுக்கே ஓடும் சிற்றோடைகள் என ரம்மியமான சூழலாக உள்ளது.

காவிரி

இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்று, குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஓடும் வற்றாத ஜீவ நதி காவிரி. தமிழ்நாட்டின் தானிய உற்பத்திக்குக் பெரும் உதவி புரியும் நதி. கர்நாடக மாநிலம் குடகு மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடித் தமிழ்நாட்டுக்குள் வருகிறது. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் காவிரி நுழையும் இடமே ஒகேனக்கல்.

ஆழங்காண முடியாத, அகன்ற ஆறாக ஓடி வருகிறது காவிரி. இதன் ஒரு கரை தமிழ்நாடு என்றால் மறுகரை கர்நாடக மாநிலம். மலைப்பாதையில் விழுந்தடித்து ஓடி வரும் காட்டு வெள்ளப் பெருக்கு ஒகேனக்கல் பகுதியில் மலையிலிருந்து பெரும் அருவியாய்க் கீழே விழுகிறது. அது விழும், எழும் சத்தமே திகிலூட்டுவதாக உள்ளது. சுமார் 60 அடி உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் வேகம் மிகக் கடுமையானது.

பல்வேறு பகுதிகளிலும் அருவி கொட்டுவது கண்கொள்ளாக் காட்சி. தண்ணீர் விழும் வேகத்தில் எழும் திவலைகள் பெரும் புகை மூட்டத்தை உருவாக்குகிறது. எரிவது தண்ணீரா, மலையா? என்று திகைக்கும் படியாக உள்ளது அந்த மூட்டம்.

ஒகேனக்கல் என்று இப் பகுதிக்குப் பெயர் வரக் காரணமே இந்தத் தண்ணீர்ப் புகைதான். கன்னட மொழியில் ஒகேனக்கல் என்றால் புகையும் பாறை என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஒகே (Hoge) என்றால் புகை என்றும், கல் (Kal) என்றால் பாறை என்றும் பொருள். இதுவே ஒகேனக்கல் என்றாகியுள்ளது. 'நெருப்பின்றி புகையாது' என்ற பழமொழியைப் பொய்யாக்கும் விதமாக அமைந்துவிட்டது ஒகேனக்கல்.

நீரின் வேகம்

இங்கு நீரின் வேகம் அதிகம் என்பதால் பல்வேறு இடங்களில் 'இங்கு குளிக்கக் கூடாது; ஆபத்தான இடம்' என்ற எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நிறைய அருவிகள் விழுந்து கொண்டிருக்கிறது என்றாலும் குளிப்பதற்கு என்று தனியிடம் ஒதுக்கப்பட்டு இரும்புக் குழாய்க் கைப்பிடிகள் அமைத்து வைத்துள்ளனர். அங்கு குளிக்க ஏதுவாகத் தண்ணீரின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், அதன் வேகமே கழுத்தெலும்புகளை, முதுகு எலும்புகளை முறித்துவிடும் போல்தானிருக்கிறது. கவனமாகவே குளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு இடங்களில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அருவிக்குளியல் அனுபவம் அற்புதமானது. அங்கேயே உள்ளுர்வாசிகள் பலர் கையில் எண்ணெய்க் குப்பியுடன் மசாஜ் செய்து விடக் காத்திருக்கிறார்கள். உடல் அசதி தீர மசாஜ் செய்து கொண்டும் குளிக்கலாம். உடலில் தேய்க்கப்படும் எண்ணெய் அருவி விழும் வேகத்தில் அரப்பின்றியே போய் விடுகிறது.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனிப் குளியல் பகுதிகள் வைத்துள்ளனர். அகன்ற பெரு வெளியில் ஓடி வரும் தண்ணீர் மேல் நீண்ட நடைபாதைப் பாலம் அமைத்து அருவி வரை செல்ல வழி வைத்துள்ளனர்.

எங்கும் பசுமைச்சூழல். கரைகளிலும், ஆற்றின் நடுவில் உள்ள திட்டுகளிலும், பாறை இடுக்குகளிலும் பெரும் மரங்கள் வானளாவ வளர்ந்து நிற்கின்றன. கரையோர மரங்களில் பெரிய பெரிய வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன. திடீரென ஒரே சமயத்தில் அவை படபடத்துப் பறக்கும் காட்சி திகிலூட்டுகிறது.

ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குச் செல்ல தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு மறுபுறம் சென்றால்தான் 'சினி பால்ஸ்' எனப்படும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகளைக் காண முடியும். பாறைகளில் நடந்து கடந்து, குகைகளில் நுழைந்து ஓடி வரும் நீரின் அழகு அற்புதமான ஒன்றுதான்.

பெரும் குன்றுகளுக்கிடையே நீர்வீழ்ச்சியின் வெள்ளம் தலைதெறிக்கப் புதுப்புனலாய், நுரை பொங்கப் பொங்க ஓடுவதைப் பார்க்கும்போது ஏற்படும் பரவசம் அடடா எனச் சொல்ல வைக்கிறது. பசுமை படர்ந்த குளுமையான சூழல், வெள்ளத்தின் வீரியம் மிக்க ஆட்டம்-பாட்டம் எல்லாம் ஒரே மகிழ்ச்சிச் சூழலில் மனத்தைத் திருப்பிக் கவலைகளை மறக்கடித்து விடுகிறது. மன இறுக்கம் தளர்ந்து, புது உற்சாக உணர்வு பீறிட்டு விடுகிறது.

'பரிசல்' பயணம்

மலைகளின் நடுவே ஓடும் வெள்ளப்பெருக்கில் செய்யும் 'பரிசல்' பயணமிருக்கிறதே அது ஓர் அரிய சுகானுபவம். தூரத்தில் மலை மீது நின்று ரசித்த நீர்வீழ்ச்சியின் அருகே, பரிசலில் செல்லும்போது நீர்வீழ்ச்சியைக் கீழிருந்து பார்க்கும் இன்னொரு அனுபவம் கிட்டி விடுகிறது.

ஆயினும், அருவியின் அருகே செல்லச் செல்ல குதிக்கும் நீரின் வேகத்தில் 'பரிசல்' கவிழாமலிருக்க 'பரிசலை' அதன் ஓட்டுனர் சுழற்றி விடுவார். அப்போது ஏதோ நீரின் குகைக்குள் சிக்கிவிட்ட சிலிர்ப்பு ஏற்படுகிறது. இங்கு நீரின் ஆழம் 100 அடியிருக்கும் என்று பரிசல்காரர் சொல்லும்போதே முதுகுத் தண்டில் பயம் சில்லிடுகிறது.

ஆனால், மலை முகட்டிலிருந்து ஒரு உள்ளுர் சிறுவன் தடாலென ஆற்றில் குதித்துக் காட்டுவது, அபாயகரமான விளையாட்டோ என்று தோன்றுகிறது. குதித்துவிட்டு நீந்தி வரும் சிறுவன் தாம் செய்து காட்டிய சாகசத்துக்காகப் 'பரிசல்' பயணிகளிடம் தவறாமல் கட்டணம் வசூலித்து விடுகிறான்.

நாளெல்லாம் தண்ணீரோடு கழித்தாலும் நேரம் போவதே தெரிவதில்லை. அருவிக் குளியல் அலுப்பதேயில்லை. சிலர் உள்ளுர் மக்களின் உதவியுடன் ஆபத்தான இடங்களில் கூட ஆனந்தமாகக் குளிக்கத்தான் செய்கிறார்கள். எனினும், தண்ணீரின் இழுப்பில் காணாமல் போனவர்கள் பற்றி வரும் தகவல்கள் எச்சரிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆற்றின் கரைகளில் உடனே மீன் பிடித்து, அதை உடனே சுட்டு வறுத்து புதுமை மாறாமல் தருகின்றனர். பல வகை மீன்களும் மசாலாவில் ஊறி, எண்ணை கொதிக்கும் வாசனை நாவில் எச்சில் ஊற வைக்கும்.

ஒகேனக்கலின் இன்னொரு சிறப்பு இங்குள்ள நீர்வீழ்ச்சிகளுக்குப் பருவ காலம் எதுவும் கிடையாது. ஆண்டு முழுவதும் முழுவேகத்தோடு ஓடுகின்றன என்பதால் யார் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். வெள்ளப்பெருக்கின் எழிலோடு வனத்துறையினர் மேலும் பொழுது போக்கிற்காகச் சிறிய அளவில் வனவிலங்கு பூங்காவும், ஒரு முதலைப் பண்ணையும் வைத்துள்ளனர்.

திருவிழா நாட்கள்

முழு நிலவு நாள்களில் ஒகேனக்கல் சென்றால் நிலவு ஒளியின் வெளிச்சத்தில் நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிக்கலாம் என்பதால் ஒவ்வொரு முழு நிலவு நாளன்றுமே ஒகேனக்கல் விழாக்கோலம் பூணுகிறது.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைகளில் காவிரியில் குளிப்பது புனிதமானது என்கிற சாத்திரமிருப்பதால் அந்நாளில் இந்தியா முழுவதுமிருந்து பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து நீராடுகின்றனர். 'ஆடிப் பதினெட்டாம் பெருக்கு' என்பதை காவிரித் தாயை, வருண தேவதையை, நதிப் பெண்ணை வழிபடும் நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புதுப்புனல் ஓடி வரும் ஒகேனக்கலில் மக்கள் பெருந்திரளாகக் கூடி வழிபாடு நடத்துகின்றனர்.

போக்குவரத்து வசதி

சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ஒகேனக்கல் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் பெங்களுர் 130 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகில் உள்ள நகரங்கள் பென்னகரம் 18 கி.மீ தூரத்திலும், கிருஷ்ணகிரி 70 கி.மீ. தூரத்திலும், சேலம் 98 கி.மீ தூரத்திலும் உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் தருமபுரி தான். எல்லா இடங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

தங்கும் வசதி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதிகள், இளைஞர் விடுதிகள் உள்ளன.

தொலைபேசி எண்: 04342 - 56447, 56448

தனியார் விடுதிகளும் உள்ளன.

தொகுப்பு: இரா. சுந்தரமூர்த்தி

© TamilOnline.com