அசோகமித்திரன்
அறுபதுகளில் மிகப் பிரபலமாக அறியப்பட்டு இன்று வரை தமிழிலக்கிய உலகில் தொடர்ந்து தனக்கான இடத்தைத் தக்க வைத்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அசோகமித்திரன். 'தண்ணீர்', 'பதினெட்டாவது அட்சக்கோடு', 'கரைந்த நிழல்கள்' போன்ற தமிழின் தலை சிறந்த நாவல்களை எழுதியவர்.

சமீபத்தில் 'அசோகமித்திரனின் படைப்புலகம்' எனும் நூலை ஞாநி தொகுத்துள்ளார்.

நிராதரவான பெண்களின் நிலையைப் பற்றிய சித்திரிப்பை இவருடைய 'தண்ணீர்' நாவல் எடுத்துக் காட்டியது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்து - முஸ்லீம் கலவரப் பாதிப்புகளை 'பதினெட்டாவது அட்சக் கோடு' நாவலில் சமூகத் தார்மீகக் கோபத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.

இவருடைய சிறுகதைகள் பலவும் மத்தியத் தர மக்களின் மனநிலைகளை நுட்பமாகச் சித்திரிக்கும் பாங்கிலானவை. தமிழகம் தவிர்த்து அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வை அதிகமாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாகத் தொட்டுக் காட்டியவர்.

நகர நெருக்கடி, அவசரச் சூழல்களில் மனித மனத்தின் ஆற்றாமை, இடப் பெயர்வினால் ஏற்படும் அந்நிய உணர்வு, உறவுகளுக்கிடையிலான முரண்பாடு..... இவைகளைக் கைதேர்ந்த மொழிநடையில் படைப்புகளாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தன் படைப்புகளுக்கான கதைகளை உருவாக்கிக் கொள்பவர். இவரது கதைகளை முதலில் வாசிக்கிற எவருக்கும் ஒரு எளிமை பிடிபடும். ஆனால் அந்த எளிமைக்குப் பின்னால் மிகப் பெரிய உலகம் விரிந்து கிடக்கும். ஆறாம்திணையில் இவர் தொடராக எழுதுகிற 'சென்னைச் சுவடுகள்' பகுதி உலகத் தமிழர்களிடையே பிரசித்தம். பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவும் இவருக்கு உண்டு.

சரவணன்

© TamilOnline.com