தெனாலி - சினிமா விமர்சனம்
நடிப்பு : கமல்ஹாசன், ஜோதிகா, தேவயானி, மீனா, ஜெயராம், மதன்பாப்,
டெல்லி கணேஷ், ரமேஷ்கண்ணா, கிரேன்மனோகர், பி.ஹெச்.அப்துல்ஹமீத்,விஜயகுமாரி.
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம் : கே.எஸ். ரவிகுமார்


பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்த பைத்தியக்கார வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா, அந்தப் பைத்தியம் பிடிச்ச பைத்தியக்கார டாக்டருக்கு வைத்தியம் பார்ப்பது யார்?- பத்தாண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விசு எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். அந்தப் பைத்தியம் பிடித்த பைத்தியக்கார வைத்தியருக்கு, அவரால் பைத்தியம் தெளிந்த பைத்தியக்காரர்தான் நிவாரணம் தருகிறார்.

கமல் பயந்தாங்கொள்ளி. எதையெல்லாம் பார்த்தால் பயம் என்பதை மூன்று பக்க வசனம் அளவுக்கு ஒப்பிக்கிறார், அதுவும் அழகான ஈழத் தமிழில். திரையில் தோன்றிய சில விநாடிகளிலேயே ஈழத்து அகதியோ என்ற நம்பிக்கையில் ஆழ்த்தி, படம் முழுக்க ஒருவித கலவரத்தன்மையோடு அப்பாவியாகத் தோற்றமளிக்கிறார் கமல். இவர் ஒருவரால்தான் இப்படி நடிக்க முடியும் (இப்போதைய சிவாஜி கணேசன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை). படம் முழுக்க ஜெயராமின் பேண்ட்- சட்டையைப் போட்டுக் கொண்டு அவருடைய சதித் திட்டங்களையெல்லாம் தன் மனநோயைப் போக்குவதற்கான மருத்துவ முறையாக எடுத்துக் கொள்ளும்போது சிரித்து, சிரித்து வயிறு புண்ணாவதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

அடுத்து பாராட்டுக்குரியவர் ஜெயராம். கமல்ஹாசனைத் தன் நோயாளியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அதே நேரத்தில் தவிர்க்கவும் முடியாமல் படம் முழுக்க அவர் படும் பாடு... நல்ல டைமிங் சென்ஸ். முகபாவங்களே போதும் இவருக்கு. இரண்டு குழந்தைகளின் தாயாக, மூன்றாவது குழந்தையாகக் கணவனையும் சேர்த்துச் சமாளித்துக் கொண்டிருக்கும் வேடம் தேவயானிக்கு. ஜெயராமின் தங்கையாக ஜோதிகா. கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைத் தவிர பிரமாதமாகச் சொல்லுமளவுக்கு ஒன்றுமில்லை அவருக்கு. சின்னச் சின்ன ஆடைகளில் தோன்றி தயாரிப்பாளரின் ஆடை அலங்காரச் செலவைக் குறைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் முழுக்க நகைச்சுவையாகச் செய்திருந்தாலும் சாப்பாட்டு ராமராக வந்து மதன்பாப் அடிக்கும் கலாட்டா வயிறு முட்ட வைக்கிறது. கிரேன் மனோகர், ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ் அனைவரும் படத்துக்கு (நகை)ச்சுவை கூட்டியிருக்கிறார்கள்.

படத்துக்கு ஈழத்துப் பின்னணி எந்த அளவுக்கு உதவுகிறது என்று புரியவில்லை. ஈழத்து அகதியை இப்படி கோமாளியாக்கியிருப்பது எந்த வகையிலும் யாருக்கும் உதவும் என்றும் தோன்றவில்லை. எதற்காகப் போர் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை என்று கூற வைத்திருப்பதும் வேதனைப்படுத்தும் விஷயம்..

கமல்ஹாசன் பிரமாதமாக ஈழத் தமிழ் பேசியிருக்கிறார். இதனாலேயே இங்குள்ள தமிழர்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்றும் தோன்றுகிறது. சந்தடிசாக்கில் தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் தமிழை வாரியிருப்பதைப் பாராட்டலாம்.

பாடல்களை ‘ஆலங்கட்டி மழை’, ‘தெனாலிக்கு எல்லாம் பயம்தான்’, ‘இஞ்சுருங்கோ’, ‘போர்க்களம் அங்கே’, ‘அத்தினி சித்தினி’, ‘சுவாசமே’ என வரிசைப்படுத்தலாம். ஒளிப்பதிவு, நடன அமைப்பு, அரங்க அமைப்பு போன்றவை ஒரு பிரம்மாண்டமான படத்துக்கான அம்சங்களோடு உள்ளன.

மற்றபடி ‘தெனாலிக்கு எல்லாம் ஜெயம்தான்’.

தமிழ்மகன்

© TamilOnline.com