எச்சம்
ஈச்சம் பழம் விற்கும்
கிழவிகள் காணாத
மரத்தடி வெறுமையாய்-

கடைக்குப் போனால்
ஒரு கை கடலை அல்லது
அரை அச்சு வெல்லம் தந்து
துளி சிரிப்பும் தந்தனுப்பும்
செட்டியாரும் காணாமல்-

பாட்டிக்குத் திவசம் முடித்து
கொல்லையில்
கூப்பிட்ட குரலுக்கு
கும்பலாய் வந்து
கவளம் பொறுக்கக்
காக்கைகளும் வாராமல்-

சாமத்தில் நல்ல சேதி
சொல்லி தெரு வழி போகும்
குடு குடுப்பைக்காரனும்
இல்லாமல்-

பள்ளிக்கு
அழைத்துப் போக வாசலில்
புளியம் பிஞ்சுகளோடு
பொறுமையாய்க் காத்திருக்கும்
சினேகிதர்கள் காணாமல்-

வெறுமையாய்
அடுத்த வீட்டுக்காரனின்
பெயர் மறந்து போகும்
அவலம் தொலைக்கப்
பெயர் குறிக்க
டைரி தேடும் பொழுதுகள்

நிஜமாய்ப்
போனதற்காய்ப் புலம்புதல்
தகாதென கேலிகள்
எழும்போது,

போனதை நினைத்தல்ல
புலம்பல்
வருவதை நினைத்தெனச்
சொல்லவும் மனசின்றி

நான்

© TamilOnline.com