பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்!
தி.மு.க தலைமையிலான புதிய அரசு ஆளுநர் உரையுடன் தன்னுடைய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கடந்த மே மாதம் 24ம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, 61 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

முதல் நாள் ஆளுநர் உரை துவங்குவதற்கு முன்பு அ.தி.மு.கவின் கொறடா கே. ஏ. செங்கோட்டையன் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க நிறைவேற்றவில்லை என்று குற்றம் கூறி ஒட்டுமொத்த அ.தி.மு.க உறுப்பினர்களுடன் பேரவையிலிருந்து வெளியேறினார்.

இறந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைவுக்கு இரங்கலுடன் மறுநாள் பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அன்று இரங்கல் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் கருணாநிதி பழனிவேல் ராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக திருக்கோயில்களில் முக்கியமானவர்களுக்கு அளிக்கப்படும் பரிவட்டம் கட்டும் முறை இனிமேல் வழங்கப்படாது என்று கூறியது சிறப்பு.

இதனைத் தொடர்ந்து மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது, அ.தி.மு.க. - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் 60 பேரும் ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்வதற்கு அவைத்தலைவர் ஆவுடையப்பன் தடைவிதித்தார். மேலும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலகத்திற்குள் நுழைவதற்கும் காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்த அசாதாரண சூழலில் அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா சட்டப்பேரவை வந்து தன் வாதங்களை எடுத்து வைத்தார். தேர்தலில் வெற்றிப் பெற்றப்பிறகு பத்திரிகையாளர்கள் இடையே பேசிய ஜெயலலிதா கடந்த 1989ல் சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்து கூறியதும், அதன் காரணமாக சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் முக்கிய விவாதங்களில் பங்கேற்பேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்ட போது ஜெயலலிதா எதிர்கட்சி சார்பாக சென்று தன் வாதங்களை எடுத்துரைத்தார். சட்டப்பேரவையில் ஜெயலலிதா பங்கேற்றதையடுத்து அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்களால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அ.தி.மு.க உறுப்பினர்களின் இடைநீக்கத்தை விலக்கி கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சிகளின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை சட்டப்பேரவைக்கு வெளியில் தவறாக ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார் என்று கூறி அவர் மீது உரிமை மீறல் பிரச்சனையை தி.மு.க அமைச்சர் ஆற்காடு வீராசாமி கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டவுடன் மறுநாள் அவர் அவைக்கு வந்து சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆளுநர் உரையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா உரையாற்றுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அவைக்கு வரவில்லை. சட்டப்பேரவைக்குச் சென்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில்
உரையாற்ற தான் ஆயத்தமாக இருந்த நிலையில் அது குறித்து எந்த முறையான தகவலும் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து வரவில்லை என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா ஜனநாயக வரலாற்றில் இது ஒரு 'கறுப்பு தினம்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் தமிழக சட்டசபையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மசோதா மற்றும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக தமிழ் உள்ளிட்ட 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதமாற்ற தடுப்பு சட்டம் மற்றும் டெஸ்மா ரத்து மசோதாக்கள் தமிழக சட்டசபையில் நிறைவேறியது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com