சிநேகிதியே...விமர்சனம்
நடிப்பு : ஜோதிகா, ஷர்பானி முகர்ஜி, தபு, சுகுமாரி, லட்சுமி, மனோரமா, வடிவுக்கரசி
இசை : வித்யாசாகர்
கதை, திரைக்கதை, இயக்கம் : ப்ரியதர்ஷன்

பெண்கள் கல்லூரி விடுதி, பெண்கள் கல்லூரி, பெண் பேராசிரியர்கள், அம்மா- அத்தை, மகளிர் காவல் நிலையம்... திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள். ஆண் வாடையே இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதே ப்ரியதர்ஷனின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது.

பெண் பாத்திரங்கள் மட்டும் இடம் பெற்ற திரைப்படம் என்று சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து வேறு பெருமை எதுவுமில்லை. படத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்கள் பிரச்சனைகளும், சம்பவங்களும் பெண்களுக்கானதல்ல. சொல்லப் போனால் ஆண்கள் விடுதியில் நடக்கிற கதையாக மாற்றிக் கொண்டாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

கல்லூரிகளில் தோழிகளாக உலா வரும் பறவைகள் திருமண பந்தங்களுக்குப் பிறகு தங்கள் நட்பைத் தொடர முடியவில்லை என்று இரு மாணவிகள் நிஜமாகவே வருந்துகிறார்கள். காலமெல்லாம் தாங்கள் பிரியாமல் இருக்க அவர்கள் போடும் திட்டங்கள் படத்தின் நகைச்சுவைப் பஞ்சத்துக்குத் தீனி போடுவதாக மாறி விடுகின்றன.

படம் முழுக்க வியாபித்திருக்கிறது ஜோதிகாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பு. இளமைத் துள்ளல் என்ற வார்த்தையின் அடையாளம். முகபாவங்களில் நளினம். ராணி முகர்ஜியின் தங்கை என்ற அறிமுகத்தோடு வந்திருக்கும் ஷர்பானி முகர்ஜி, ஜோதிகாவிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஷர்பானியின் கோடிக்கணக்கான சொத்துக்குப் பாதுகாவலராக லட்சுமி, ஜோதிகாவின் செல்ல அம்மாவாக மனோரமா, காவல் துறை அதிகாரியாகத் தபு நடித்திருக்கிறார்கள். பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளைக் கண்டு புழுங்கும் தபு, படத்தின் பிற்கதையில் பரிதாபத்தை அள்ளிச் செல்கிறார்.

ஹாஸ்டலில் நடக்கும் பிறந்த நாள் விழா, துரத்தல் காட்சிகளில் ஜீவாவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. வித்யாசாகர் இசையில் 'தேவதை அம்சம் நீயோ' பாடல் முதலிடம் பிடிக்கிறது.

நட்பின் பெருமையைச் சொல்ல மோசமான திரில்லர் கதையின் பின்னணியைத் தேர்ந்தெடுத்தது ரசகுல்லாவை மிளகு ரசத்தில் ஊற வைத்தது போல சங்கடப்படுத்துகிறது.

தமிழ்மகன்

© TamilOnline.com