கந்தர்வ கான ஏழிசை மன்னர் பாகவதர்
எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்தது தஞ்சாவூரில். கிருஷ்ண மூர்த்தி ஆசாரி, மாணிக்கத்தம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாக 1-3-1910-ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

சின்ன வயதில் 'ஸ்பெஷல்' நாடகங்கள் எங்கு நடந்தாலும் தவறாமல் சென்று பார்த்து விட்டு வந்து விடுவார். அதேபோல சங்கீதக் கச்சேரிகளுக்கும் சென்று வருவார்.

அதனால் ஏற்பட்ட இசை ஆர்வம், பொன்னு அய்யங்கார் என்னும் சங்கீத வித்வானிடம் கர்நாடக இசையை முறைப்படிப் பயில அவரை அனுப்பி வைத்தது.

நடிப்பும் தியாகராஜ பாகவதருக்குக் கைவரவே திருச்சி எ·ப்.ஜி. நடேசய்யர், சிறுவன் தியாகராஜனை நாடக நடிகராக்கினார். நாடகங்களில் பாடி, நடித்தார் பாகவதர். நாடக மேடைகளில் எஸ்.டி. சுப்புலட்சுமி, பாகவதர் இணைக்கு நல்ல வரவேற்பு இருந்தது!

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'பவளக் கொடி' என்ற ஸ்பெஷல் நாடகத்தைத் திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் சென்று பார்த்தார். அந்த நாடகமும் அதில் இணைந்து நடித்த பாகவதர்- சுப்புலட்சுமி இணையும் அவருக்குப் பிடித்துப் போகவே, 'பவளக்கொடி' நாடகத்தைப் படமாக்கும் ஆசை கொண்டார்.

எம்.கே. தியாகராஜ பாகவதரின் முதல் படமான 'பவளக்கொடி' 1934-ஆம் ஆண்டு, கே. சுப்ரமண்யம் இயக்கத்தில் வெளி வந்தது. பாகவதருக்கு இணையாக நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமியேதான். இது மீனாட்சி பிலிம்ஸின் தயாரிப்பு. 'பவளக்கொடி'யில் மொத்தம் ஐம்பது பாடல்கள்! அனைத்துமே இசை வெள்ளம்! அன்று தொடங்கிய பாகவதரின் இசைப்பயணம் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்தது. இன்றும் கூட கேட்கக் கேட்க இன்பமளிப்பதாகவே உள்ளன பாகவதரின் பாடல்கள்.

பாகவதரின் அடுத்த படமான 'நவீன சாரங்கதரா' 1935-- இல் வெளி வந்தது. இந்தப் படத்தையும் கே. சுப்ரமண்யமே இயக்கியிருந்தார்.

அப்புறம் தியாகராஜ பாகவதர், சொந்தப் படக் கம்பெனி தொடங்கினார். 'சத்திய சீலன்' என்ற படத்தைத் தயாரித்து 1936-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது 'திருச்சி தியாகராஜா பிலிம்ஸ்' தயாரிப்பு என்ற பேனரில் வெளிவந்தது!

பாகவதரின் நான்காவது படம் 'சிந்தாமணி' (1937). மதுரையைச் சேர்ந்த சில தனவந்தர்கள் கூட்டுச் சேர்ந்து 'ராயல் டாக்கீஸ்' என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து இந்தப் படத்தை வெளியிட்டார்கள்.

மதுரையில் ராயல் டாக்கீஸ் என்ற திரை அரங்கில் 'சிந்தாமணி' வெற்றிகரமாக ஓடி, வெள்ளி விழாக் கண்டது. அதனால் அந்தத் தியேட்டருக்குச் 'சிந்தாமணி தியேட்டர்' என்று புதிய பெயரைச் சூட்டினார்கள்!

'அம்பிகாபதி' (1937) - 'திருநீல கண்டர்' (1939) - 'அசோக்குமார்' (1941) 'சிவ கவி' (1943)முதலிய படங்களுக்குப் பிறகு 1944--ல் வெளிவந்த 'ஹரிதாஸ்' படத்தின் மூலமாகப் பாகவதர் புகழின் உச்சியை எட்டினார். இதுவும் ராயல் டாக்கீஸ் தயாரிப்புதான்!

சென்னை, பிராட்வே திரையரங்கில் மூன்று தீபாவளிகளைக் கண்டது 'ஹரிதாஸ்'. உலக மகா யுத்தத்தின் காரணமாக அந்த ஆண்டு அதிகமான தமிழ்ப் படங்கள் வெளிவரவில்லை. அதனால் 'ஹரிதாஸ்' - வெற்றியின் உச்சத்தை எட்டியது! இந்தப் படத்தின் சாதனையை இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் 12-2-1945 அன்று கைதானார்கள். சிறை வாசத்திற்குப் பின் 25-4-1947 அன்றுதான் பாகவதர் விடுதலையானார்.

விடுதலைக்குப் பின் 'நரேந்திரா பிக்சர்ஸ்' என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து 'ராஜமுக்தி' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். படம் வெளிவந்த ஆண்டு-1948.

இந்தப் படத்திற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியவர் எழுத்தாளர் புதுமைப் பித்தன்.அவருடன் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் அஷ்டாவதானி பானுமதி. ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும் ஏனோ இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

அடுத்து வெளிவந்த பாகவதரின் படங்களான 'அமரகவி' (1952), 'சியாமளா' (1952), 'புது வாழ்வு' (1957), 'சிவகாமி' (1960) - முதலிய படங்களும் தோல்வியையே கண்டன! 'வசூல் சக்கரவர்த்தி பாகவதர்' -என்ற சரித்திரம் 'ஹரிதாஸ்' படத்தோடு முடிந்து போனது துரதிர்ஷ்டம்தான்!

பாகவதரின் மரணத்திற்குப் பின் வெளி வந்த படம் 'சிவகாமி'. 1.11.1959--ல் பாகவதர் மறைந்தார். கந்தர்வ கானம் பாடிய தியாகராஜ பாகவதர் சுந்தரத் தோற்றம் கொண்ட மாறன்! தங்க நிற மேனி. பளபளக்கும் பட்டுச் சட்டை, சரிகை வேட்டியும், அலை அலையாகத் தலையிலிருந்து கழுத்து வரை புரளும் கரிய முடியும், ஜவ்வாது அத்தர் முதலிய வாசனைப் பொருள்களின் கமகமக்கும் வாசனையும், அவரைப் பார்க்கப் பார்க்கத் திகட்டாத பரவச நிலையை மக்களுக்கு அளித்தன!

பட்டி, தொட்டிகளிலெல்லாம் கர்நாடக இசை வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்த பெருமைக்குரியவர் பாகவதர். மக்கள் அவரைக் காண அலை அலையாய்த் திரண்டு வந்தார்கள்!

குளித்தலை கி. பிச்சமூர்த்தி என்ற பாகவதர் பக்தர், பாகவதரைப் பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூர்கிறார்.

'ஒரு சமயம் பாகவதர் வெளியூர்க்கச்சேரி ஒன்றை முடித்து விட்டுக் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சிற்றூர் ஒன்றில் ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நிற்க நேரிட்டது. அந்தச் சமயம் விறகு வண்டி ஒன்றும் அங்கு வந்து நின்றது. நடுத்தர வயதுள்ள வண்டிக்காரன் அவனது கட்டைக் குரலில் 'ஆஹா! என்ன பேரானந்தம்!' என்ற பாகவதரின் அப்போது வந்த படத்தின் பாடல் ஒன்றை ராகம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தான்!

பாட்டைக் கேட்டு விட்டு காரின் உள்ளே இருந்த பாகவதர் தலையை வெளியே நீட்டினார். விறகு வண்டிக்காரனும் காரிலிருந்த பாகவதரை அடையாளம் கண்டுகொண்டான். வண்டியை விட்டு ஓடோடி வந்தான். ஏதோ தெய்வத்தைப் பார்த்தது போல் மெய் மறந்து பாகவதரைப் பார்த்தவாறே நின்றான். பாகவதரும் கையை அசைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிந்துக் கொண்டார்.

'ஐயோ சாமி! நான் அதிர்ஷ்டக்காரன். எவ்வளவோ காலமா உங்களைப் பார்க்க வேணுமுன்னு ஏங்கித் தவிச்சேன்! இன்னைக்குப் பார்க்க முடிஞ்சது! இருங்க சாமி!' -என்று சொல்லிவிட்டு, ஓட்டமாக ஓடி பக்கத்திலே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் சோடா ஒன்று வாங்கி வந்து-

''நீங்க இந்த ஏழை கையால் கொடுக்கும் இதை சாப்பிடாமப் போகக் கூடாது!'' -என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். கார் டிரைவர் வண்டிக்காரனை அணுகி,

''ஐயா, இந்த சோடாவையெல்லாம் குடிக்க மாட்டார்!'' என்று கூறி அவனிடமிருந்து சோடா பாட்டிலைப் பிடுங்கப் போனார்.

ஆனால், பாகவதர் மனம் நெகிழ்ந்து, டிவைரை சும்மா இருக்கச் சொல்லிவிட்டு -

'' இங்கே சோடாவா பெரிது? அவரது மனம்தான் பெரிது; அவரைத் தடுக்காதே!'' -என்று கூறியவாறே காரிலிருந்து இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி மடக் மடக்கென்று குடிக்கலானார்.

அந்தக் காட்சியைக் கண்ட வண்டிக்காரனும் 'பேரானந்தம்' என்ற பாடலை மீண்டும் பாட ஆரம்பித்து விட்டான்!''

எஸ். குரு

© TamilOnline.com