வழக்கு சொற்கள் - தடைபடாமல் தமிழ் வளர
தமிழ் தடைபடாமல் வளர வேண்டுமெனில், தமிழைப் புழங்கி - பலமுறை பயன்படுத்தி நடைமுறையில் நீண்ட காலம் பழகிக் கொள்ள வேண்டும். புழக்கத்திலிருக்கும் பொருள் பழுதுபடாது; மூலையில் போட்ட இரும்பும் துருப்பிடித்து விடும். சிலர் 'தடைப்பட்டது' என்றே ஒற்று மிகுத்து, எழுதுகிறார்கள். அங்கு என்னவோ தடைபடுவது, ஓரினச் சொற்களையும் தொடர்பினச் சொற்களையும் சொல்லிப் பார்க்கும்போது தெளிவுபடும்.

(கல்) உடைபடுதல், (தயிர்) கடைபடுதல், (இசை) தடைபடுதல் என்னும்போது 'படு' என்பது துணை வினையாகும். அணைக்கட்டு உடைபடும்; உடைப்படாது. இது போலவே எடுபடு, விடுபடு, உரிபடு என்பனவும் வரும். 'அவள் எடுபட்டவள்' என்பார்கள். நிலையில் திரிந்தவள், பிறர்க்குக் கைக்கூலி ஆனவள் என்று பொருள். எழுதும்போது இடச் சுருக்கம் காலச் சுருக்கம் கருதிச் சில விடுபடலாம். பலாத்தோல் எளிதில் உரிபடாது.

'கடைப்பட்ட நாயேனை' என 'நாயன்மார் உருகும்போது' அது கடைபடுதலன்று. தலை, இடை, கடை என்று பெயரடியாகப் பிறக்கும் எச்சங்கள் தலைப்பட்ட, இடைப்பட்ட, கடைப்பட்ட என்றாகும். தலைக்காவிரி, இடைக்காடு, கடைக்காடு காண்க. கடைப்பட்ட காலம் வேறு; கடைபட்ட தயிர் வேறு. வினையுடன் சேரும் துணைவினையாதலின் தடைபடுதலில் 'ப்' மிகவில்லை.

தடைபடுதலும் தடைப்படுத்தலும்

வளர்ச்சி தடைபடுகிறது; முன்னேற்றம் தடைப்படுத்தப்படுகிறது. இங்ஙனம் செயப்பாட்டு வினையில் 'ப்' மிகுகிறது. அவன் போக்கைத் தடைப்படுத்தாதீர்கள்; அவள் படிப்பைத் தடைப்படுத்தாதீர்கள். எதையும் நிலைப்படுத்துவது போல், விலைப்படுத்துவது போல் இதையும் சரிப்படுத்த வேண்டியுள்ளது.

அணைதல் அணைத்தல்; இணைதல் இணைத்தல் போல தடைபடுதல் பிற வினையில் தடைப்படுத்துதல் ஆகிறது. நாட்டு முன்னேற்றம் தடைபடாமல் காப்போம்; யாரும் தடைப்படுத்த வந்தால் அதைக் கடந்து முன்னேறுவோம்.

திருவளர் செல்வி

பலர் சரியாக எழுத வேண்டுமென எண்ணியே, தவறாக எழுதி விடுகிறார்கள். இதுவும் ஒரு மிகைத் திருத்தம். திருவளர்ச் செல்வன் முருகனுக்கும் திருவளர்ச்செல்வி வள்ளியம்மைக்கும் திருமணம் என்று அழைப்பு விடுக்கிறார்கள். இது போலவே திருநிறைச்செல்வன் எழுதி விடுகின்றார்கள். வளர் செல்வி, நிறைசெல்வன் என்பன வினைத் தொகைகள்; ஒற்று மிகுந்தால் வளர்ச்சி தடைபடும். என்றும் வளர்கிற செல்வியை வளர்செல்வி என்றுதான் கூற வேண்டும். வளர்ச்செல்வி எனல் கூடாது.

காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. ஓடுகாலி, பாடுபொருள், புனைகதை, வளர் தமிழ் என வரும்போது ஓடுகின்ற, ஓடும், ஓடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன. இவற்றில் வல்லினம் வருமொழி முதலில் வந்தாலும் ஒற்று மிகாது. வளர்செல்வியே வளர்கின்ற செல்வியாவாள். 'எறிபந்து', 'அலைகடல்', 'நிகழ்காலம்', 'வரைபடம்', - இங்கு வினையின் முதல்நிலை மட்டும் அடைமொழியாக நின்று அவற்றின் இயல்பைக் காட்டுதல் காணலாம்.

செல்வம் சிறக்கும் செல்வியாக என்றென்றும் திகழ வேண்டுமென்பதாலேயே 'வளர்செல்வி', 'நிறைசெல்வி' என்றெல்லாம் போடுகிறோம். இடையில் ஒற்றெழுத்தைப் போட்டால் எக் காலத்துக்கும் ஏற்பட வேண்டிய வளர்ச்சிக்கு இடையில் முட்டுக்கட்டை போட்டதாகும். எனவே, இங்கெல்லாம் ஒற்றின்றியே, முறையாகப் போட்டுத் திருமண அழைப்பை அச்சடித்துப் புதுமண மக்களை வாழ வைப்போமாக!

வாசிப்பவர் வள்ளிநாயகம்

வானொலியில் 'செய்திகள் வாசிப்பது வள்ளிநாயகம்' என்று நாள்தோறும் கேட்கிறோம். 'வாசிப்பது செய்தி' என்றால் முறையாகும். அதை 'வாசிப்பவர் வள்ளிநாயகம்' ஆதலே சிறப்பு. 'வாசிப்பது' தொழிற்பெயர். வினையாலணையும் பெயராக வரும் தொடர்களைக் காட்டிச் சிலர் விவாதிப்பது முறையன்று. எதற்கும் சுற்றி வளைத்துச் சமாதானம் தேடி விடலாம். செயல் நிகழ்ச்சியைக் குறிப்பதால் 'வாசிப்பவர் வள்ளிநாயகம்' என்றால்தான் பெருமிதமாக இருக்கும். சுற்றித் திரிவது மாடு, சுற்றித் திரிபவர் மனிதர். கொச்சை வழக்கில் வேண்டுமானால் 'எங்க பிள்ளை பேச்சைக் கேக்காது சுத்தித் திரியுது' என்று பேசலாம். வானொலி பல்லாயிரவர் கேட்கும்' திருந்திய நடை பயில்வதற்குரிய இடம் என்பதை மறத்தலாகாது.

உள்ளிட்ட, உள்பட

'உள்ளிட்ட' 'உள்பட' - எது சரி? 'உள்ளிட்ட' என்பதுதான் சரி. தங்கள் கருத்து உள்ளிட்ட எதனையும் திருந்திய வழக்கா என்றும் சிந்திக்க வேண்டும். 'உள்பட' என்பது பேச்சு வழக்கு. 'உடைந்த கல் உள்பட எண்ணிச் சொல்'; உடைந்தவை உள்ளிட்ட அனைத்தையும் எண்ண வேண்டும்! இவை ஆளப்படும் வாக்கியச் சூழல் வேறு வேறாகும்.

'ஆஸ்பத்திரியைச் சேர்ந்த என்றுதானே எழுத வேண்டும்; சார்ந்த என்று எழுதலாமா?' சார்ந்த என்பது இடச்சார்பைக் குறிக்கும்; சேர்ந்த என்றால் அதனுடன் தொடர்புடைய, உறவுடைய என்றாகும். 'ஆஸ்பத்திரியைச் சார்ந்த அஞ்சலகம்' என்பதற்கும் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த அஞ்சலகம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. சேர்ந்த என்றால் மருத்துவமனைக்கு உரிமையுடைய என்றாகிவிடும். 'ஆஸ்பத்திரியைச் சார்ந்த திடலில் போட்டி நடக்கிறது' எனலாம். 'இது ஆஸ்பத்திரியைச் சேர்ந்த மருந்தகம்' எனல் வேண்டும். இங்கு நல்ல தமிழ் வழக்கைச் சார்ந்த செய்திகள் கூறப்பட்டன; இப் பணியில் சேர்ந்து நீங்களும் ஒத்துழைக்கலாமல்லவா?

ஆகிய.... முதலிய.....

இவற்றைச் சரியாகப் பயன்படுத்துமிடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு சொற்களும் முற்காலத்திலும் பயன்பட்டன. அன்றைய பொருள் வேறு. அந்தப் பொருள்களிலிருந்து, இன்றைய நிலைக்கு இவை வளர்ந்து மாறியுள்ளதை எண்ணிப் பார்த்தால், வளருந் தமிழ் என்றால் என்ன என்பது நன்கு விளங்கும்.

முன்பு ஆகிய என்றால் உண்டாகிய, அதுவாகிய என்று பொருள். 'அன்னியன் ஆகிய வெள்ளையன்', பூமியாகிய கோளம்' என வருவன பழைய முறை. 'உயிர் முதல் ஆகிய மொழியும்' (தொல். 144): '-லர் பலர் ஆகிய காரணம் (திருக். 270): கொடியன் ஆகிய குன்றுகெழுநாடன்' (குறு. 252) என்பன எல்லாம் முன்னைய வழக்காறு.

இடைக்காலத்தில் உரையாசிரியர்கள் 'ஆகிய' என்பதைப் பண்புத்தொகை உருபாகக் காட்டினர். செந்தாமரை - செம்மை ஆகிய தாமரை; கருங்குதிரை- கருமை ஆகிய குதிரை. குதிரையோடு சேர்ந்தேயிருப்பது கருமை நிறம். பனைமரம், சாரைப்பாம்பிலும் அவ்வாறுதான். பனை- சிறப்புப் பெயர்; மரம் பொதுப்பெயர். இவையிரண்டும் ஒரு பொருளையே குறிப்பதால் பனை ஆகிய மரம் என்று இதனையும் விரிப்பர். பனை+மரம்--ரண்டும் பெயராக இருப்பதால் 'இரு பெயரொட்டு' என்று பெயர்.

ஆங்கில மொழி நடைப் பழக்கத்திற்குப் பிறகுதான் ஆகிய, முதலிய இரண்டும் ஒரு வகை எண்ணிடைச் சொல்லாகப் பயன்படுகின்றன. மா, பலா, வாழை ஆகிய மூன்றும் முக்கனிகள் எனப்படும். முன்பு என்ற, என்னும் என்பன ஆகிய என்பதற்குப் பதிலாகப் பயன்பட்டன. தொல்காப்பியர் 'அ - உ எ ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்து' என்று கூறுகிறார். இப்பொழுது இருந்தால் 'ஆகிய ஐந்தும் குற்றெழுத்து' என்றே எழுதியிருப்பார். வரையறை தெரிந்து எண்ணி முடிக்கத் தக்கவற்றுக்கே 'ஆகிய' சேர்க்க வேண்டும். மற்றவற்றுக்கு முதலிய போடலாம். ''பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மை பகர்வது வைச சித்தாந்தம்''; தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை முதலிய மாநகரங்கள் உள்ளன.

முற்காலத்தில் 'முதலிய' என்பது 'முதலாகக் கொண்ட' என்ற பொருளில் வழங்கியது. வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு (தொல். 144); 'நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்' (சிலப். 28-80); 'சுவை முதலிய புலன்களை நுகரும்' (மணி-27-196). இங்கெல்லாம் 'முதலாகக் கொண்ட' என்பது பொருள். சுவை முதலிய புலன்கள் என்றால் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்கள் என்பது பொருள். இவற்றுள் 'வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வேற்றுமை உருபு' என்னும்போது, பிறவற்றை உள்ளடக்கும் எண்ணிக்கையில்லை. நீலன் முதலிய, சுவை முதலிய என்னும்போது, முதலாகக் கொண்ட என்பதிலிருந்தே என்னும் பொருட்கூறும் வளர்ந்திருப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். சொற்களின் பொருள் வளர்ச்சியை உய்த்துணரலாம்.

ஆங்கிலத்தில் etc என்பது etcetera என்பதன் சுருக்கம். பொருள் And so on, And others என்பது. ஆங்கில மரபுப்படி ஒன்றுக்கு மேற்பட்டவற்றை எழுதியே etc, போடுவர். தமிழ்ச் சொல் வழக்கு ஒன்றைக்கூறி 'முதலிய' எனத் தொடங்கியதைப் பார்த்தோம். எனினும் இன்று ஆங்கில மரபு, தமிழ் மரபு ஆகிய இரண்டும் ஒற்றுமைப்பட்டு கட்டுரை, கதை முதலியவற்றில் இடம் பெறுதலால் இதைத் தமிழுக்குப் புது வரவென்றும் கூறலாம் அல்லவா?

என்று, என்ற

இவை கால உணர்வோடு முறையே வினையெச்சமாகவும் பெயரெச்சமாகவும் அன்றும் -ன்றும் வழங்கி வருகின்றன. 'என்று கூறி' (நற். 79), என்று இகழ்ந்தனன்' (குறு. 43), 'என்ற தப்பற்கு' (குறு. 79). 'அஞ்சல் என்ற இறை' (நற். 43). தலைமை அமைச்சர் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். கைத்தறித் துணிக்குத் தள்ளுபடியை நீடிப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. தேர்தலில் நிற்பது என்ற முடிவில் மாற்றமில்லை. சிறு தொழில்கள் வளர வேண்டும் என்ற ஆளுநர் அதற்கான திட்டங்களை அறிவித்தார். என்று சொன்னார் என்பதன் செறிவான வடிவம் 'என்றார்' ஆகிறது. என்றதும், என்றலும், என்றதற்குப் பிறகு - இவ்வாறு இவ் வடிவம் பல்குகிறது. எனவே என், என என்னும் சொற்கள் பல்கி வளர்ந்த வழக்குகள் இவை என்ற என் விளக்கத்தை ஏற்பீர்கள் என்று கருதுகிறேன்.

என்பது, என்பவர்

இவையும் சுட்டி விளக்க வருவனவே. 'முளவுமா என்பது முள்ளம் பன்றி' என்பது, என்பன, என்பவன், என்பவள், என்பவர் எனத் திணை பால் வேறுபாட்டுடன் கூறலாம். முன் தெரியாத ஒன்றைத் தெரியப்படுத்தும்போது இது பயன்படும். நாம் அறியாத ஒன்றை, பிறர் அறிந்திராத ஒன்றைக் கூறி விளக்கும்போதும் இது தேவைப்படும். 'நாராயண குரு என்பவர் ஒரு ஞானி' என அவரை அறியாத தமிழருக்கு விளக்கலாம். 'பலராம் என்பவனைப் போலீசார் பிடித்தனர்' எனலாம்; ஏனென்றால் பலராம் யார் என்று பலருக்குத் தெரியாது. 'காந்தி அடிகள் என்பவர்' என்று தொடங்கக்கூடாது; அவர் உலகம் அறிந்தவர். அவ்வாறு சொன்னால், சொல்பவனின் அறியாமையை அது காட்டும். 'இந்தியா நம் நாடு' என்று பாடத்தைத் தொடங்கினால் போதும்; இந்தியா என்பது எனத் தொடங்குவது தவறு. இதுகாறும் என்ன சொல்லப்பட்டது என்பது உங்களுக்கு விளங்கியிருக்குமல்லவா?.

© TamilOnline.com