Cult - திரைப்படம்
நம் தோட்டத்து ரோஜாப் பூ

திகில்படங்கள் மூலம் உலகைக் கலக்கிய ஹாலிவுட்டின் ஆல்·ப்ரட் ஹிட்ச்காக், கோலிவுட்டின் S.பாலச்சந்தர், இவர்களுடன் அந்த சகாப்தம் முடிந்துவிட்டதாக கருதமுடியாதபடி, நம் தோட்டத்தில் விளைந்த ரோஜாக்களாக, பல டைரக்டர்கள் வெற்றிகரமாக, பல மர்மப்படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். கிராமீயப் படங்களுக்கு பெயர்போன பாரதிராஜாவாகட்டும், பல வெற்றிப்படங்களை கொடுத்த திரைக்கதை மன்னன், பாக்கியராஜாகட்டும், அவர்கள் பங்குக்கு, நல்ல மர்மப்படங்களைக் கொடுத்துள்ளதை தமிழ்த் திரை ரசிகர்கள் அறிவார்கள்.

மர்மப்படம் என்று சொல்லமுடியாவிட்டாலும், 'பாரா ஸைக்காலஜி' என்று சொல்லக்கூடிய வேறுவிதமான திகில் கதையைச் சொல்லி, திடீரென அகில உலகப்புகழ் பெற்றார், பாண்டிச்சேரியில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்து, ஹாலிவுட்டின் சரித்திர எடுகளில், மிகவும் விரைவாக இடம் பிடித்துவிட்ட 'நைட் ஷ்யாமளன்'. இந்த வரிசையில் சேரவிருக்கும், மற்றொருவர்தான், ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர், 'ஹரி மகேஷ்'.

இவர் தயாரித்து, இயக்கி, நடித்த 'CULT' என்னும் ஆங்கிலத் திரைப்படம், மிகவும், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப் படமாக இருந்தாலும், ஹரி மகேஷ் என்னும் இளைஞரின், அயராத உழைப்பை, திரைப்படக் கலைமேல் அவருக்கிருக்கும் காதலை எடுத்துக்காட்டும் படம்.

இவரது படம், கடந்த ஜூன் மாதம், ஸான் ஹோஸே நகரில் திரையிடப்பட்டது. சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த இந்த இளைஞரின் முழுநேரத் தொழில் என்னவோ, ஸிஸ்கோ (CISCO) என்னும், உலகிலேயே மிகப்பெரிய 'நெட்வொர்க்கிங்' கம்பெனியில் இஞ்சினியர் வேலைதான்.. முழுக்க முழுக்க, தானாக வந்து, உதவிசெய்தவர்களையும், குறைந்தபட்ச தொழில் வல்லுநர்களையும் வைத்துக் கொண்டு, 20,000 டாலர்களில் தயாரிக்கப்பட்டது.

Sony டிஜிட்டல் வீடியோல் எடுக்கப்பட்ட இந்த படம், ஹரி மகேஷால், 'அடோபே ப்ரிமியர்' (Adobe Premier) என்னும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேரை (Software) வைத்து, தன்னுடைய வீட்டிலேயே எடிட் செய்யப்பட்டது.

'கல்ட்' (CULT) கதைச்சுருக்கம் இதுதான். 'ஸிலிக்கன் வேலியின்' (Silcon Valley) உயர் தொழில்நுட்ப கம்பெனி ஒன்றில் வேலை செய்யும், உயர் அதிகாரி ஒருவர் தன் வாழ்க்கையின், பொருளைத்தேடி, ஒருமாதிரியான மதவழக்கங்களை போதனை செய்யும் ஒரு குழுவில் சேர்ந்துவிடுகிறார். எதைத்தேடி வந்தாரோ, அது கிடைக்காமல், பழிதீர்த்தலையும், கொலையயும்தான் பார்க்கிறார். இந்த கதையின், திரைக்கதை வடிவத்தை, பாலோ ஆல்ட்டோ நகரைச்சேர்ந்த ரெபக்கா ஸாண்டர்ஸ் என்னும் பெண்மணி அமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தைப் பார்க்கும் போது, இப்படம் ஒரு புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்ட படமாகவே தெரியவில்லை. நடிகர்கள் எல்லோரும் சுமார் ரகம்தான் என்றாலும், நடித்தவர்கள், படத் தயாரிப்பில் உதவியவர்கள் எல்லோருமே, உணவுக்கும், தங்கள் பெயரைத் திரையில் பார்க்கும் ஆர்வத்துக்காக மட்டுமே உழைத்திருக்கிறார்கள் என்பது, மிகப்பெரிய விஷயம்தான்.

இதையெல்லாம்விடப் பெரிய விஷயம் என்னவென்றால், இந்தப்படம், நியூயார்க் நகரில் சமீபத்தில் நடைபெற்ற, உலகத்திரைப்பட விழாவில், திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி, 'மேடிசன் ஸ்குயர் கார்டனில் (Madison Square Garden) திரையிடப்பட்டது. இது ஹரி மகேஷ¤க்கு, கிடைத்திருக்கும், மிகப்பெரிய அங்கீகாரம். தவிர இவரது பட போஸ்டரை, விழாக் கமிட்டி வெளியிட்ட ஸ¥வனிரில், முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருந்தது, மிகப் பெரிய கௌரவம்.

தவிரவும், 'மிராமாக்ஸ்' (Miramax) என்னும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், இவரது படத்தின்மேல் ஆர்வம் கொண்டிருப்பதை தெரிவித்திருக்கிறது. ஹாலிவுட் படங்களான Abyss, Spy who loved me, Splash போன்ற படங்களில் ஓளிப்பதிவாளராக இருந்த ஜேக் கிட்டிங்ஸ் என்பவர் ஹரிமகேஷின் அடுத்தப் படதயாரிப்பில், வேலைசெய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்சமயம், ஹரி தன்னுடைய அடுத்த பட தயாரிப்பில் மும்முரமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டார்! கதை ரெடி, இயக்குநர் ரெடி, காமிரா ரெடி... படத்தயாரிப்புக்கான பணம்தான் தேவை! இந்த இளைஞர், அதையும் தேடிவிடுவார், கூடிய விரைவில்.. இவருக்கு வெற்றி உறுதி! இவர் பெயர் பெரிய அளவில் பேசப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. நம் வீட்டுத் தோட்டத்து ரோஜாவின், வாசத்துக்குக் காத்திருப்போமா?

அஷோக்

© TamilOnline.com