மகா மலிவு விலை கார்: கோவையில் சாதனை
தலைப்பில் உள்ள வார்த்தைகள் 'அதிசயம் ஆனால் உண்மை'. கோவையைச் சேர்ந்த எட்டி கரண்ட் கண்ட்ரோல்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற நிறுவனம், ஆட்டோ வாங்கக் கூடிய விலையில் புதிய காரையே வாங்கிவிடக் கூடிய அதிசயத்தைச் சாதித்துள்ளது.

'எட்டி ஏஞ்சல்' என்ற இந்த 'மகா மலிவு விலை'க் காரின் விலை ரூ. 95,000 மட்டுமே.

ஏற்கெனவே 'லவ் பேர்ட்' என்னும் மின்சாரக் காரைத் தயாரித்துப் புகழ்பெற்ற நிறுவனம், இந்த எட்டி கரண்ட் கண்ட்ரோல்ஸ். நாற்பதுக்கும் மேற்பட்ட இவ்வகைக் கார்கள் நாடு முழுக்க மிருகக் காட்சிச் சாலைகள், பொழுதுபோக்குப் பூங்காக்களில் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை வண்டலூர் பூங்காவில்கூட மூன்று 'லவ் பேர்ட்' மின்சாரக் கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

கோவையில் ஏற்கெனவே மலிவு விலைக் 'கார்' தயாரிப்பு முயற்சிகள் நடந்துள்ளன. 'டால்பின்' என்றொரு கார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே கோவையில் தயாரிக்கப்பட்டது. மாருதி 800 போன்றே , அதைவிடச் சற்றே 'ஒல்லி'யான இந்தக் கார், விற்பனை செய்யப்பட்டு சாலைகளிலும் ஓடியது. ஆனால் ஏனோ அதன்பின் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை.

இதேபோல், புகழ்பெற்ற சர்வதேச மோட்டார்ப் பந்தய வீரர் அமரர் கரிவரதன் முயற்சியில், மாருதி'யை விட விலை மலிவான கார் ஒன்று திட்டமிடப்பட்டு, தயாரிப்பில் இருந்தது. அவரது மறைவு, இம்முயற்சியைத் தடைப்படுத்திவிட்டது.

இப்போது முன்னூற்று எண்பது கிலோ எடை மட்டுமேயுள்ள 'எட்டி ஏஞ்சல்' காரை நான்கு பேர் அமர்ந்து செல்லக் கூடியதாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது எட்டி கரண்ட் கண்ட்ரோல் நிறுவனம். இந்தியாவிலேயே முதன்முறையாகத் தயாரிக்கப்பட்ட மின்சாரக் காரான 'லவ் பேர்ட்'டின் , கட்டமைப்பை (chassis) பயன்படுத்தியே இந்த 'எட்டி ஏஞ்சல்' பெட்ரோல் கார் வெளிவந்துள்ளது.

எரிபொருள் சிக்கனம், குறைந்த விலை ஆகியவற்றால் இது மிகவும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு முப்பது கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் தொழில்நுட்பத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்திய உதிரிப் பாகங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். அதிலும் அறுபது சதவிகித உதிரிப் பாகங்களை, இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. தொடக்கத்தில் இருபதாயிரம் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்களைத் தயாரிக்கும் நோக்கத்தில் இருக்கிறார்கள்.

கோவையின் தயாரிப்பான புதிய கார் 'எட்டி ஏஞ்சலின்' வடிவ மற்றும் இயக்க அளவுகள் விவரம்:

1. உந்துசக்தி : 200 சிசி நான்கு ஸ்டிரோக்
பெட்ரோல் இஞ்சின்
550 ஆர்பிஎம்

2. பரிமாணங்கள் : நீளம் - 2480 மி.மீட்டர்
அகலம் - 1290 மி.மீட்டர்
உயரம் - 1720 மி.மீட்டர்
சக்கரச் சுற்றளவு (Wheel Base) - 1595 மி.மீட்டர் (4 பேர் அமர்ந்து)
மொத்த எடை - 680 கிலோ

3. மாற்றுத் தொடர் விசை : கிளட்ச் - எண்ணெய்யில் மூழ்கிய பிளேட் (Transmission)
கியர் பாக்ஸ் - நான்கு நிலை வேகம் மற்றும் பின்னோக்கி

4. ஸ்டீரிங் - வகை : ரேக் மற்றும் பினியன் சுழலும் வட்டக் குறுக்களவு - 6.02 எம்.

5. வேகம் : மணிக்கு 60 கி.மீ.

ஏற்கெனவே இவர்களது தயாரிப்பான 'லவ்பேர்ட்' மின்சாரக் கார் (இருவர் அமரக் கூடியது), 'வி ஆர் டி ஈ' நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு, சாலைப் போக்குவரத்துக்கு ஏற்ற வண்டியாகச் சான்றளிக்கப்பட்டுள்து. பல மாநிலப் போக்குவரத்து அலுவலகங்கள் இதற்கான உரிமம் வழங்கியுள்ளன.

'எட்டி ஏஞ்சல் காரின் வடிவம் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் கதவு இல்லாத கார் என்பது கதவு இல்லாத வீடு போல உள்ளதே?' என்று, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.டி. ஜோஸ்-இடம் கேட்டோம்.

''இருநூறு சிசி வண்டிக்கு, எடையைக் கூட்டுவது, அதன் செயல் திறனைக் குறைக்கும். தேவைப்பட்டால், கதவையும் பொருத்தித் தரலாம். எதிர்காலத்தில் இதையும் கவனத்தில் கொண்டு, முழுச் செயல் திறனுடனும் குறைந்து விடாத 'மைலேஜ்' உடனும் கூடியதாக இக் காரை மாற்றம் செய்து வழங்குவோம்.

''இந்தக் காருக்கு ஏற்கெனவே முன் பதிவுகள் தொடங்கிவிட்டன. ஏற்றுமதிக்கான திட்டமும் வைத்துள்ளோம். இன்னும் ஆறே மாதத்தில் முழு அளவில் விற்பனை மேற்கொள்ளப்பட்டு, சாலைகளில் இந்தக் கார் ஓடுவதை நீங்கள் காண்பீர்கள்'' என்றார் ஜோஸ்.

என். விஸ்வநாத்

© TamilOnline.com