ரவை அல்வா
வீட்டில் எப்போதும் ரவை, சர்க்கரை, பிரட் போன்றவை கையிருப்பில் இருக்கும். அவற்றை வைத்துக் கொண்டே அமர்க்களமாக சமையல் செய்யலாம். மிகவும் சுலபமாக ரவை அல்வா மற்றும் ரொட்டி உப்புமா மணக்க மணக்கத் தயார் செய்யலாமா? சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள்

தேங்காய் - 1
ரவை - 250 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 50 கிராம்
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் - 4

செய்முறை

தேங்காயை உடைத்துத் துருவி, மிக்ஸியில் போட்டு அரைத்துப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முந்திரிப்பருப்பை உடைத்து நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் கசகசாவையும் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.

ரவையை நன்றாகச் சலித்து எடுத்து, வாணலியில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

ரவை சிவந்து வரும்போது தயாரித்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை அதில் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

ரவை நன்றாக வெந்தவுடன் சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

சர்க்கரை இளகி அல்வா பதமாக வந்ததும் இறக்கி ஒரு தட்டில் பரப்பிக் கசகசாவையும், வறுத்த முந்திரிப் பருப்பையும் தூவி, ஆறியபின் துண்டு செய்து எடுத்து வைக்கவும்.

புதுவிதமான சுவையுடன் இருக்கும் பக்குவம் இது.

© TamilOnline.com