மின்னலே - திரைப்பட விமர்சனம்
நடிப்பு : மாதவன், அப்பாஸ், ரீமாசென், நாகேஷ், விவேக், கிட்டி, பாத்திமா பாபு, ஹார்லிக்ஸ் அங்கிள், சர்·ப் ஆன்டி.
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
இயக்கம் : கெளதம்


இன்னொருத்தருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்று தெரிந்த பின்பும் காதலித்துக் கை பிடிக்கிற அட்வென்சர் காதலனின் கதை.

இன்னொருத்தருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக ரீமா சென். நிச்சயித்த மாப்பிள்ளையாக அப்பாஸ்.

அட்வென்சர் காதலானாக மாதவன்.

மின்னல் வெளிச்சத்தில் முதன் முதலாக ரீமாவைப் பார்த்து 'மணந்தால் ரீமா இல்லையென்றால் பூமா (அதாவது பூமி)' என்ற முடிவுக்கு வருகிறார் மாதவன். படத்துக்கும் மின்னலே என்று ஒரு தலைப்பு கிடைத்தமாதிரியும் ஆனது.

கல்லூரியில் படிக்கிற காலத்தில் இருந்தே அப்பாஸ¤ம், மாதவனும் எலியும் பூனையுமாக... சாரி இரண்டு சண்டைக்காரப் பூனைகளாக இருந்தார்கள் என்பது விறுவிறுப்பான ஆரம்பத்துக்கும் திரைக்கதையின் சுவாரஸ்யங்களுக்கும் துணை செய்கிறது.

படித்து பெரிய பதவியில் இருக்கும் பெண், தான் மணக்கப் போகிறவரைப் பார்க்காமலேயே திருமணத்துக்குச் சம்மதித்து விட்டார் என்பது இந்தக் காலத்திலும் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு(!). ஆனால் அதே பெண் சென்னையில் தனியாக ஒரு வீடு எடுத்துக் கொண்டு ஒரு வேலைக்காரியைக்கூட துணைக்கு வைத்துக் கொள்ளாமல் இஷ்டம் போல வாழ்வது இடிக்கிறது.

அப்பாஸ் அமெரிக்காவில் இருந்து போன் செய்து, தான் மணக்கப் போகும் ரீமாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மாதவன் அண்ட் கோ டெலிபோன் கனெக்ஷனைக் கட் செய்துவிட்டு ஆள் மாறாட்டம் செய்கிறது.

அப்பாஸ் அமெரிக்காவில் இருந்து சென்னை வர இருக்கும் ஐந்து நாள்கள் 'சைக்கிள் கேப்'பில் ரீமாவிடம் தான் தான் அமெரிக்க மாப்பிள்ளையென்று நம்பவைத்து மனதிலும் இடம் பிடித்து விடுகிறார் மாதவன்.

அப்பாஸ் அங்கே கம்ப்யூட்டர் இன்ஜினியராகத்தான் வேலைபார்க்கிறார். ரீமாவும் கம்ப்யூட்டர் சகிதம்தான் காட்சியளிக்கிறார். ஈ-மெயில், மெசஞ்சர் போன்ற வசதிகளையெல்லாம் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. உடையில், உணவில், உச்சரிப்பில் காட்டும் நவீனத்துவம் வாழ்க்கை இயல்பில் இடம்பெறாதது லாஜிக் மிஸ்ஸிங்.

பொய் சொல்லிக் காதலித்தவன் என்று தூற்றிவிட்டு அப்பாஸை மணக்கத் தயாராகும் ரீமா க்ளைமாக்ஸில் ஒரு நிமிடம் கண்ணை மூடிப் பார்த்து மாதவனையே தேர்ந்தெடுப்பதும் கடைசி நிமிடத் திருப்ப சுவாரஸ்யமின்றி வேறில்லை.

மாதவன் காலேஜ் ரவுடி. அவருக்காக வைத்திருக்கும் காட்சிகளின் மூலம் அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள். ஆவேசமாக அப்பாஸ் வந்து கர்ஜிக்கும் (!) போது ,''ஐயோ எனக்கு பயமா இருக்குப்பா'' என்று மாதவனை தெனாவட்டாக அஞ்ச வைத்திருப்பது போன்றவற்றில் வீரத்தைச் சமாளித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவருக்குள் அதிகம் தொனிப்பது காதலன் பாத்திரம்தான். அப்பாஸ் கவுரமான காதல் தியாகியாக நடித்திருக்கிறார்.

ரீமா சுமாராக மின்னியிருக்கிறார்.

விவேக் ஒரு படத்தின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டார். 50 சதவீத எம்.ஆர்.ராதா, 5 சதவீத கவுண்டமணி, 40 சதவீத என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட கலவையோடு மீதமிருக்கும் விவேக்கும் சேர்ந்து கலக்குவது போல இருக்கிறது. ''லாரியில எதுக்குடா எலுமிச்சை பழத்தைக் கட்டித் தொங்க விட்றீங்க?...

லாரியில இருக்கிற 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத லாரி இந்த எலுமிச்சைப் பழத்திலயாடா ஓடப்போகுது?'' என்னும் போது தியேட்டர் குலுங்குகிறது.

வசனத்தில், ஒளிப்பதிவில், காட்சி அமைப்பில், படத் தொகுப்பில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். லொகேஷன்,

ஆடை அலங்காரம், ஆர்ட் டைரக்ஷன் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இசை?... இன்னொரு ரஹ்மான். அனைவரையும் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர்தான் இந்த வெற்றிக்குக் காரணம். வசீகரா பாடலை இச்சையூட்டும் பாடலாக்கியிருப்பது ஆடியோவில் கேட்டு மகிழ்ந்தவர்களை ஆடிப்போக வைத்திருக்கும். பாடலை எழுதிய தாமரை, பாடிய

பாம்பே ஜெய ஸ்ரீ போன்றவர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மனதைவிட்டுச் சட்டென்று மறைந்து விடாத மின்னல்.

தமிழ்மகன்

© TamilOnline.com