பொறுத்தார் பூமியும் ஆள்வார்கள்...
அன்புள்ள சிநேகிதியே...

நானும் என் மனைவியும் என் மகள் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்தில் திரும்பி போகும் எண்ணம் வந்து 8 மாதம் ஆகிவிட்டது.

எங்களுக்கு ஒரே மகள். நான் டெல்லியில் அரசு உயர்அதிகாரியாக பணியாற்றி சமீபத்தில்தான் ஓய்வு பெற்றவன். என் மனைவி பள்ளி ஆசிரியை. இன்னும் பணியில் இருக்கிறாள்.

எங்கள் மாப்பிள்ளை மிகவும் நெருங்கிய நண்பரின் மகன். வெகுநாள் பழக்கம். அவன் என்ஜினியரிங் முடிக்க என் மகள் காலேஜ் முடித்துக் கொண்டிருந்தாள். உடனே திருமணம். எல்லா பொருத்தமும் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக, விமரிசையாகத்தான் திருமணத்தை நடத்தி வைத்தோம்.

என் நண்பர், அவர் மனைவி எல்லோருமே நல்லவர்கள். அவருக்கு நல்ல பிசினஸ். பிள்ளையை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்பி வைத்து இவளையும் தங்கள் செலவில் டிக்கெட் வாங்கிகூட அனுப்பினார்கள்.

என் பெண் மிகவும் புத்திசாலி. அழகு, ஆனால் வெகுளி. நிறைய பேசும் டைப் இல்லை. ஏதோ சந்தோஷமாக இருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாள் முதல் பிரசவத்துக்கு என் மனைவி லீவு போட்டு வந்திருந்தாள். அவள் திரும்பி வந்து விவரங்களை சொன்னபோது எனக்கு திக்கென்று இருந்தது. அவனுக்கு பொறுப்பு ஒன்றும் இல்லையாம். எப்போது பார்த்தாலும் சிடுசிடுவென்று இருக்கிறானாம். ஒருநாள் என் மனைவி எதிரிலேயே "உன்னால் தான் என் வாழ்கையே ஸ்பாயில் ஆகிவிட்டது" என்று கத்தினானாம். லீவும் முடிந்து அங்கே இருக்க மனது ஒப்பாமல், மிகவும் வருத்தத்துடன் என் மனைவி திரும்பிவிட்டாள்.

என் மகளிடம் விசாரித்த போது "ஒன்றுமில்லையப்பா... சரியாக போய்விடும்... நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று மழுப்பிவிட்டாள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆகவே, இங்கே கிளம்பி வந்துவிட்டோ ம். மறுபடியும் அவள் 'பிரெக்னன்ட்' ஆகி இருப்பதைக்கூட எங்களிடம் சொல்லவில்லை. மாப்பிள்ளை எங்களிடம் சரியாக பேசுவதில்லை. Rude என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு அன்னியோன்னியம் இல்லை. எங்கள் எதிரில் எதுவும் டிராமா இல்லாவிட்டாலும் அவர்கள் அறையில் அவன் ஏதோ இவளிடம் கத்திக் கொண்டிருப்பது அடிக்கடி கேட்கும். என் மனைவியின் கண்களில் கண்ணீர்.

ஒருநாள் அவனிடம் ''உங்களுக்கு என்ன கோபம்? எதனால் கோபம் என் பெண்ணிடம் என்று புரியவைத்தால் நாங்கள் ஏதாவது செய்ய முடியும். எப்படியும் இந்தக் குழந்தை பிறந்த பிறகு 2 மாதம் டெல்லிக்கு அழைத்துப் போய் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம் என்று சொன்னேன்". அதற்கு அவன் ''ம்... தாராளமாக இரண்டு மாதம் என்ன இரண்டு வருடம் கூட...'' என்று தனக்குள் பேசிக் கொண்டே காரில் ஏறி போய்விட்டான்.

எனக்கு உண்மையிலேயே கோபம் வந்து என் பெண்ணிடம், ''காரணம் சொல்லாமல் கழுத்தை அறுக்கிறான். என்னுடைய தப்பு. உனக்கு உடனே கல்யாணம் செய்து கொடுத்தது. நீ மேல்படிப்புக்கு கெஞ்சினாய்... இப்போதும் மோசமில்லை. நீ கிளம்பி வந்துவிடு. இந்த சிடுமூஞ்சியுடன் எதற்கு வாழ்க்கை. உனக்கும், குழந்தைகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். உன்னை மேலே படிக்க வைக்கிறேன்..'' என்று கெஞ்சி பார்த்தேன். அவள் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் அவளுக்கு குழந்தை பிறக்க உள்ளது. மனதில் எத்தனை வேதனைகளை சுமந்து கொண்டு, இன்னொரு குழந்தை வேண்டுமா என்றுகூட கேட்டுவிட்டேன். பெற்ற மனது துடிக்கிறது. ஒரே பெண் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அன்புள்ள சிநேகிதியே... / நண்பரே...

நீங்கள் எழுதிய கடிதத்தில் உங்கள் மருமகனைப் பற்றி எனக்கு எந்த குறிப்பான தடமும் கிடைக்கவில்லை. அழகான, புத்திசாலியான, பொறுமையான மனைவியிடம் இப்படி 'வள்'ளினால் ஒன்று

* He has taken her for granted

* இல்லை... அவருடைய தொழில் ரீதியான டென்ஷன், அவரது இறுக்கத்தை (Stress) குறைக்க மனைவியை punch bag ஆக உபோயகப்படுத்தி கொண்டிருக்கலாம்.

* இல்லாவிட்டால் ஏதோ ஒரு காரணத்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு இப்படி நடந்து கொள்ளலாம்.

* இல்லை, ஒருவர் சம்பளத்தில் (உங்கள் மகள் வேலைக்கு போவதாக நீங்கள் குறிப்பிடவில்லை) குடும்பத்தை, விருந்தினரை சமாளிக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கலாம்.

* இல்லை. அவருடைய எதிர்பார்ப்புக்களை, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தெரியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டு இருக்கலாம்.

ஒன்று நிச்சயமாக புரிகிறது. கணவன், மனைவிக்குள் வெளிப்படையான, முறையான கருத்துபரிமாற்றங்கள் தேவை. அது இங்கே இருப்பதாக தோன்றவில்லை.

இரண்டாவது உங்கள் பெண் வெகுளி என்று நீங்கள் சொல்வதால், அவளிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருக்கிறது. அவள் புத்திசாலி என்று சொல்வதால், அவளின் 'பொறுமை' ஒரு நாள் தீர்ந்து, மிகவும் தைரியமாக, ஆக்கபூர்வமாக தன்னுடைய சுதந்திரத்துக்கு வழிகளை ஆராய்வாள், பொறுத்தார் பூமியும் ஆள்வார்கள். பூகம்பத்தையும் ஏற்படுத்துவார்கள்.

இதுவரை உங்கள் மருமகன் அவளை அடித்தோ, கொடுமைப்படுத்தியோ பார்க்கவில்லையென்றால் கொஞ்சம் விட்டுக் கொடுத்து பாருங்கள். ஒரு வேலை உயர்வு அவருக்கு முகத்தில் சிரிப்பை வரவழைக்கலாம். பிறக்கப் போகும் மகனோ, மகளோ மனதை மாற்றலாம். கொஞ்சம் நேரம் கொடுத்து பாருங்கள். உங்களால் ஆனதை செய்துவிட்டீர்கள். உங்கள் மகளின் எண்ணப் போக்கில் அவளை விடுங்கள். உங்களிடம்கூட அவள் பிரச்சினையை பகிர்ந்து கொள்ளவில்லையென்றால், தானே முடிவெடுக்கும் மனோபலமும், நம்பிக்கையும் அவளுக்கு நிறைய இருக்கிறது.

உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள். இப்போது பந்து உங்கள் மகள் கையில். வழி கிடைக்கும் சீக்கிரம்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com