அடக்க முடியாத தவிப்பு
சமீபத்தில் எனது தோழி தன் தந்தைக்கு மருத்துவராக என்னை அவசரமாக தொலை பேசியில் அழைத்தாள். அமெரிக்காவில் மகளின் மகப்பேறுக்காக வந்திருந்த அவளின் தந்தை, இங்கு வந்தது முதல் அடிக்கடி சிறு நீர் கழிப்பதாக கூறினாள். இனி வருவது எனது அலுவலகத்தில் நடந்த உரையாடல்

மருத்துவர்: எத்தனை நாட்களாக இந்த உபாதை?
நோயாளி: கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி வருகிறது. குறிப்பாக இரவு வேளைகளில் தூங்க முடிவதில்லை.
மருத்துவர்: எரிச்சல் ஏதும் இருக்கிறதா?
நோயாளி: 3-4 நாட்களாக எரிச்சல் இருக்கிறது.
மருத்துவர்: காய்ச்சல், வாந்தி ஏதும் இருக்கிறதா?
நோயாளி: இன்று மட்டும் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. வாந்தி இல்லை. ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை.
மருத்துவர்: இதைத் தவிர வேறு ஏதும் உபாதை உங்களுக்கு உள்ளதா?
நோயாளி: 5 வருடங்களாக நீரிழிவு நோயிற்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன். இரத்த அழுத்தம் அதிகமாகவும் உள்ளது. 2 வருடங்களுக்கு முன் இருதய மாற்று (Bypass) அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன்.

உடல் பரிசோதனைக்குப் பின், சிறு நீரையும் அலுவலகத்தில் பரிசோதித்ததில், சிறு நீரில் இரத்தம், புரதம், மற்றும் வெள்ளை அணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சிறு நீரில் நுண்ணுயிர் தாக்கம் இருப்பதைக் குறிக்கிறது. urinary tract infection என்று அதற்கான நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கப்பட்டது.

அடுத்த வாரம் அவரை சந்தித்த போது, எரிச்சலும், காய்ச்சலும் அறவே நீங்கிவிட்டதாக சொன்னார். ஆனால், அடிக்கடி சிறு நீர் கழிப்பது மட்டும் தொடர்ந்து இருப்பது தெரியவந்தது. இது prostate gland வீக்கத்தினால் ஏற்படுவது. இதனை' Benign prostatic hypertrophy' என்று மருத்துவ மொழியில் கூறுவர்.

இந்த நோய் யாரைத் தாக்கும்?
வயதில் முதிர்ந்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். 60 வயதுக்கு மேலானோருக்கு 'prostate' வீக்கம் ஏற்படுவது இயற்கை. ஒரு சிலருக்கு 50 வயதிலேயும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது போல் ஆண்களுக்கு இது ஏற்படுவதாய் ஒப்பிடலாம். சமீபத்திய கணக்கெடுப்பு படி 50 வயதுக்கு மேற்ப்பட்டோ ரில் 50% விகிதத்தினருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோ ரில் 90% சதவிகித ஆண்களுக்கும் இந்த நோய் ஏற்படுவதாக தெரிகிறது. ஆனால், வீக்கத்தின் அளவைப் பொறுத்து இந்த நோய் ஏற்படுத்தும் அறிகுறிகள் வேறுபடலாம்.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?
ஆண்களின் சிறு நீர் குழாயைச் சுற்றி prostate gland அமைந்திருக்கிறது. ஆகையால் இதில் வீக்கம் ஏற்படும் போது, சிறு நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது போன்ற உணர்வு உண்டாகலாம். சிறு நீர் குழாயின் சுற்றளவு குறையும் அளவுக்கு வீக்கம் ஏற்பட்டால், அடிக்கடி சிறு நீர் போக வேண்டி வரலாம். குறிப்பாக இரவு வேளைகளில் அடிக்கடி போக நேரிடலாம். அடக்க முடியாத அவசரம் ஏற்படலாம். இதனால் சிறு நீர் தன்னையும் அறியாமல் கழிக்கும் நிலை உருவாகலாம். மேலும், சிறு நீர் குழாயில் நுண்ணுயிர் கிருமிகள் தங்குவதால் urinary tract infection ஏற்படலாம்.

இந்த நோயிற்கு தீர்வு என்ன?
இந்த நோயை மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தலாம். 'Alpha Blocker' என்று சொல்லப்படும் மருந்து வகைகள் மூலம் அடிக்கடி சிறு நீர் கழிக்காமல் இருக்க செய்யலாம். ஆனால் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சிசனம் வழியாக இந்த 'prostate' சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விடலாம். இதனால் ஆபத்துகள் குறைவு. நோயும் முற்றிலும் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த நோயினால் புற்று நோய் ஏற்படுமா?
இல்லை. prostate சுரப்பியின் புற்று நோய், BPH நோயினால் ஏற்படுவதில்லை.

PSA என்றால் என்ன?
PSA என்று சொல்லப்படும் பரிசோதனை இரத்தத்தில் செய்யப்படுகிறது. இது 'prostate' சுரப்பியில் இருந்து வெளியிடப்படும் harmone அளவை கணிக்க உதவுகிறது. நாற்பது வயது முதல், ஆண்கள் இந்த பரிசோதனையை வருடா வருடம் செய்து கொள்ள வேண்டும்.

PSA அளவு எப்போது அதிகரிக்கும்? அதன் பின் விளைவுகள் என்ன?
இந்த PSA அளவு மேற்கூறிய Benign prostatic hypertrophy என்ற நோயினால் அதிகமாக இருக்கலாம். urinary tract infection அல்லது prostatitis என்று சொல்லப்படும் infection மூலமாகவும் அதிகரிக்கலாம். ஆனால் குறிப்பாக prostate சுரப்பியில் புற்று நோய் ஏற்பட்டால் அதிகரிக்கிறது. இதனால் PSA அளவு அதிகமானால் prostate biopsy தேவைப்படும். இதை 'urologist' என்ற நிபுணர் செய்யவேண்டி வரலாம். இந்த பரிசோதனை ஆண்டு தோறும் செய்வதா வேண்டாமா என்பது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும்.

பல காரணங்களால் அதிகரிப்பதனாலும், அளவு அதிகமானால் biopsy தேவைப்படுவதனாலும் மருத்துவ உலகில் பலத்த சர்ச்சைக்குள்ளாகிறது. ஆகையால் உங்கள் முதன்மை மருத்துவரை ஆலோசித்து, தகுந்த விவரங்களை அறிந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு www.urologyhealth.org என்ற வலைதளத்தை அணுகவும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com