மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா
'மோகினியாட்டம்' என்ற நாட்டியக் கலைக்குப் புதிய அர்த்தமும் விரிந்த பரிமாணமும் வழங்கிய கலாமண்டலம் கல்யாணிக் குட்டியம்மாவுக்கு மரணத்தின் போது வயது எண்பத்தைந்து. இந்த நீண்ட ஆயுள்காலத்தில் கலையையே வாழ்க்கையாக வாழ்ந்த நிறைவு அவருக்கு உண்டு. ஆனால் அப்படி வாழ்க்கையை மேற்கொள்ள அவர் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. பெண்களுக்குக் கடும் விலக்குகளும், அடக்குமுறைகளும் சுமத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் கல்யாணிக் குட்டி என்ற பெண் தனது வழியையும், பயணத்தையும் தானே தீர்மானித்துக் கொண்டது ஓர் அற்புதம்.

1915 ஆம் ஆண்டில் தென் மலபாரில் பனங்காட்டு கோவிந்த மேனன், ஸ்ரீதேவி தம்பதிகளின் மகளாகப் பிறந்த கல்யாணிக்குட்டி இளமையிலேயே மரபுக்கு எதிரான இயல்புகளுடன் வளர்ந்தார். கவிதை எழுதினார், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். குடும்ப உறுப்பினர்களைப் பார்வையாளர்

களாக்கி நாடகம் நடத்தினார். இவை சின்னச் சலனங்கள் எனினும் அந்த நாள் சமூகத்தில் இவை பெரும் அதிர்ச்சிகளாகவே உணரப்பட்டன. எட்டாம் வகுப்பு வரை பயின்ற பிறகு எழுத்தும், இலக்கியப் படிப்புமாகக் காலம் நகர்த்திய கல்யாணிக்குட்டியின் வாழ்க்கையில் திசை மாற்றம் ஏற்படுத்தியவர் மகாகவி வள்ளத்தோள்.

கேரளக் கலைகளின் புனருத்தாரணத்திற்காக செந்துருத்தியில் 'கலாமண்டலம்' என்ற அமைப்பை உருவாக்கியவர் வள்ளத்தோள். உறவினர் ஒருவருடன் வள்ளத்தோளைச் சந்திக்கச் சென்ற கல்யாணிக்குட்டியின் மனதில் தனக்குப் பிரியப்பட்ட கவிஞரைச் சந்திப்பதும், தனது கவிதைகளை அவரிடம் காண்பிப்பதும்தான் நோக்கம். கல்யாணிக்குட்டியின் கவிதைகளைப் படித்துப் பார்த்த மகாகவி உற்சாகவானாகிவிட்டார்." உனக்குள்ளே கவிதை மட்டுமல்ல, கலையின் துடிப்புகளும் இருக்கின்றன. கலாமண்டலத்தில் சேர்ந்து நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார் வள்ளத்தோள். வள்ளத்தோளின் இந்த ஆலோசனை பிற்காலத்தில் மோகினியாட்டக் கலைக்கு அர்ப்பண உணர்வுள்ள ஒரு கலை ஆளுமையைப் பெற்றுத் தந்தது.

மகாகவி பற்ற வைத்த பொறி கல்யாணிக்குட்டியின் மனதில் பெரும் சுடராகப் பரவியது. ஆனால், மோகினியாட்டத்துக்கு அந்தக் காலத்தில் 'தேவிடிச்சி ஆட்டம்' என்ற அகெளரவம் தான் நிலவி வந்தது. எனவே தகப்பனார் மறுத்தார். கல்யாணிக்குக்குட்டி பின் வாங்க மாட்டாள் என்று தெரிந்ததும் அவர் கேட்ட கேள்வி 'உனக்கு நாட்டியம் வேண்டுமா? குடும்ப வாழ்க்கை வேண்டுமா?' கல்யாணிக்குட்டியிடம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பதில் இருந்தது. 'நாட்டியமே என் வாழ்க்கை'. ஆனால், மகள் 'ஆட்டக்காரி' ஆவதைத் தகப்பனார் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

கல்யாணிக்குட்டியின் தினங்கள் வெந்து நகர்ந்தபோது மீண்டும் மகாகவி வள்ளத்தோளின் வார்த்தைகள் தான் மழையாகப் பொழிந்தன. வள்ளத்தோள், கோவிந்த மேனனுக்குக் கடிதம் எழுதினார். ''கல்யாணிக்குட்டியை நீங்கள் வீட்டை விட்டு விரட்டினாலும் அவள் அநாதையாக மாட்டாள். இனி அவளையும் சேர்த்து எனக்கு ஒன்பது குழந்தைகள்" .

அதன் பிறகு கல்யாணிக்குட்டியம்மாவுக்குத் திரும்பிப் பார்க்க நேரமில்லை. விருப்பப்பட்ட வழியும், மனதுக்கு இசைந்த பயணமும் வாய்த்த பின் கலையின் பிரதேசங்களை விரைவாகக் கடந்தார். 'மோகினியாட்டத்தின் அன்னை' என்ற கெளரவ பூமிக்கு வந்து சேர்ந்தார்.

1938 ஆம் ஆண்டில் கலாமண்டலத்தில் சேர்ந்தார். அதுவரை 'கேரள நாட்டியங்கள்' என்ற பொதுப் பெயரில் தான் கதகளியும், மோகினியாட்டமும் கலாமண்டலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன. கதகளி கற்பித்து வந்த கிருஷ்ணன் நாயரிடம் மாணவியாகச் சேர்ந்தார் கல்யாணிக்குட்டி. குரு-சிஷ்யையாகத் தொடங்கிய உறவு காதலாக நிறைவடைந்து 1940 ஆம் ஆண்டில் மகாகவி வள்ளத்தோளின் ஆசியுடன் திருமணமாக முடிந்தது.

குருவும், மகா கலைஞருமான தனது வாழ்க்கைத் துணையிடமிருந்து பெற்ற அறிவும், சுய உழைப்பில் திரட்டிய ஞானமும் முழுமையான அர்ப்பண உணர்வும் கல்யாணிக்குட்டியம்மாவை 'மோகினியாட்டக்' கலையின் உயிர்ப்புள்ள உதாரணமாக்கியது. கலாமண்டலத்திலிருந்து விலகிய பின் தம்பதிகள் உருவாக்கிய கேரள கலாலயம் (1952-53) முதலில் ஆலவாயிலும், பிறகு திருப்பூணித்துறையிலும் இயங்கியது. கேரள நாட்டிய வடிவங்களின் அதிகாரப்பூர்வ நிறுவனம் என்ற கெளரவம் கேரளத்தின் கலாலயத்துக்கு இன்றும் நிலவுகிறது. கிருஷ்ணன் நாயர் - கல்யாணிக்குட்டியம்மாவின் மக்களும் (ஐந்து ஆண், இரண்டு பெண்கள்) இதே கலைத்துறையில் புகழ் பெற்றவர்கள்.

தனது கலை வாழ்க்கை போராடிப் பெற்ற உரிமை என்பதால் கல்யாணிக்குட்டியம்மா அதைப் பேணவும், புதிய எல்லைகளில் கொண்டு சேர்க்கவும் ஓயாமல் உழைத்தார். அந்த உழைப்பின் பலனாக அநேக மரியாதைகள் அவரைத் தேடி வந்தன. 1972 ஆம் ஆண்டில் மத்திய சங்கீத நாடக அகாதெமி ·பெலோஷிப், 74 -ல் கேரள, மத்திய சாகித்ய அகாதெமிகளின் விருதுகள், அதே ஆண்டில் மத்திய அகாதெமியின் 'குரு' அந்தஸ்து, 80 -ல் கலாமண்டலத்தின் 'கீர்த்தி சங்கு', 82 -ல் 'நாட்டிய பிரவீணா' விருது - இவற்றின் உச்சமாக மத்தியப் பிரதேச அரசின் 'காளிதாஸ் சம்மான்'.

நாட்டியக் கலைஞர், ஆசிரியர், ஆய்வாளர் என்ற மூன்று நிலைகளிலும் கல்யாணிக்குட்டியம்மா மோகினியாட்டக் கலைக்குத் தனது நிகரற்ற பங்களிப்புகளைக் செய்துள்ளார். 'மோகினியாட்ட சங்க்ரஹம்' 'மோகினியாட்ட வரலாறும் ஆட்டமுறைகளும்' என்ற இரண்டு நூல்கள் இந்தக் கலையின் அடிப்படை இலக்கணமாகக் கருதப் படவேண்டியவை.

கல்யாணிக்குட்டியம்மா 'மோகினியாட்டம்' கற்கத் தொடங்கிய, காலப்பகுதியில் அது கலையாக சமூக அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. 'தேவிடிச்சி ஆட்டமாக'த்தான் காணப்பட்டு வந்தது. குடும்பப் பெண்களுக்கு அது தீண்டத்தகாத திறமையாகவும் இருந்தது. தனது பிரவேசம், உழைப்பு, ஞானம் ஆகியவை மூலம் மோகினியாட்டத்துக்கு சமூக அங்கீகாரம் பெற்றுத் தந்தது கல்யாணிக்குட்டியம்மாவின் சாதனை. கதகளி நடன முத்திரைகளால் உருப்பெறுவது. புரிந்து கொள்ளப் பயிற்சியும் கலை பற்றிய பொது விவரமும் அவசியம். அதற்கு மாறாக எளிய அபிநயங்கள் மூலம் பார்வையாளரை ஈர்க்கும் ஒத்தியை மோகினியாட்டத்தில் பரவலாக்கினார் கல்யாணிக்குட்டியம்மா. இதையே அவரது ஆகப் பெரிய சாதனையாகச் சொல்ல வேண்டும். வாழ்க்கை, கலை என்ற இரு கோணங்களிலுமே கல்யாணிக்குட்டியம்மாவை, பரதக் கலைக்குப் புனர்வாழ்வளித்த ருக்மணிதேவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தனது வாழ்நாள் முழுவதும் கலையை வாழ்வின் சாரமாக வாழ்ந்தவர் கல்யாணிக்குட்டியம்மா. கலையின் வெவ்வேறு துறைகளிலும் ஈடுபட்டவர் ஆவர். ஓரிரு நாடகம், திரைப்படங்களில் நடித்துமிருக்கிறார். இளமை நாள்களில் கவிதையில் ஏற்பட்ட நாட்டம் இறுதி வரையும் அவரிடம் தொடர்ந்தது. ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

மோகினியாட்டத்தைக் கேரளத்தின் தனிச் சிறப்பான கலையாக அறிமுகப்படுத்த முயன்றவர் கல்யாணிக்குட்டியம்மா. காலத்தின் மாறுதல்களுக்கேற்ப அந்தக் கலையில் எளிமையும், நுட்பமும் ஏற்படுத்தியவர். அந்த இயல்புகள் உயிர்ப்போடு தொடரப் பட்டால் காலத்தின் நிர்த்தாட்சண்யத்தை மீறி மோகினியாட்டம் வாழும். கூடவே கலாமண்டலம் கல்யாணிக் குட்டியம்மா என்ற பெயரும் நிலைக்கும்.

சுகுமாரன்

© TamilOnline.com