மணிக்கட்டி வைணவர்கள்
சைவர்களை நீறுபூத்த நெருப்பு என்று சொன்னால் நம்முடைய வைணவர்களை எரியும் நெருப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்நானம் என்றிருப்பது போல் வைணவர்களுக்கு முத்திரை ஸ்நானம் என்று இருக்கிறது. இதைப் பெற்று விட்டால் அவர் கட்சிக் கார்டு பெற்ற கம்யூனிஸ்டு அங்கத்தினர் மாதிரி! இதுக்கு மிக நல்ல உதாரணம் என்னுடைய தகப்பனார் . கிருஷ்ணசாமி நாயக்கராக இருந்த அவர், முத்திரை ஸ்நானம் பெற்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணராமாநுஜன் ஆனார். தன்னுடைய இளைய பாரியாளின் (எனது சிற்றன்னை) பெயராகிய மாரியம்மாளை மணவாளம்மாள் என்று மாற்றினார். எங்கள் ஒன்பது சகோதரர்களின் பெயர்களும் பழுத்த வைஷ்ணவப் பெயர்கள். ஆண்களின் பெயர் முடிவில் ராமாநுஜம் என்று முடிவடையும்.

சிவனுடைய பெயரை யாரும் எங்கள் வீட்டில் மறந்தும் உச்சரிக்க மாட்டோம். அசந்து மறந்து சொல்லி விட்டால் சாட்டை அடி விழும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாள்களின் பெயர்கள்கூட சிவப் பெயர் கிடையாது. இதில் எங்கள் அப்பா ரொம்ப ஜாக்கிரதை! நாங்கள் மணிக்கட்டி வைணவர்களின் பரம்பரை! மணிக்கட்டி வைணவர்களின் ரெண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்க விட்டிருக்கும். எங்காவது எவனாவது சிவனுடைய பெயரை அசந்து மறந்து சொல்லித் தொலைத்து விட்டால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்குவோம். இந்த மணிகள் ஒலித்து, சிவநாமத்தைக் காதினுள் நுழைய விடாம ல் விரட்டி அடித்துவிடும்!

இப்படியாக உள்ள மணிக்கட்டி வைணவரைக் கேலி செய்தும் கதைகள் உள்ளன. (சைவர்களைக் கேலி செய்து வைணவர்களும் நிறையக் கதைகள் உண்டு பண்ணியிருக்கிறார்கள். இப்படி ஏசல் கதைகளும் ஏசல் பாடல்களும் பரஸ்பரம் ஏராளம்.)

ஒரு சத்திரத்தில் மூணு சிவப் பண்டாரங்கள் வந்து தங்கியிருந்தார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதில் இரண்டு பண்டாரங்களுக்குள் பலத்த 'அடிதடி' நடந்தேறி விட்டது. மூணாவது பண்டாரம் இதைப் பார்த்து பலத்த கூக்குரலிட்டார். சத்திரத்தின் கார்பாரி ஓடி வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஊர் நாட்டாண்மை நாயக்கரிடம் நிறுத்தினார். கிராமத்தின் நாட்டாண்மையும் விவகாரியுமான அவர், ஒரு மணிக் கட்டி வைணவர் என்பதை அவரது காதுகளில் தொங்கும் மணிகளே சொன்னது.

சத்திரத்து அதிகாரியான கார்பாரி அந்தப் பண்டாரங்களைக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தியதோடு விலகிக் கொண்டார். நடந்ததைப் பார்த்தவர் மூணாவது பண்டாரம்தான். அவர்தான் கண் கண்ட சாட்சி. என்ன நடந்தது என்று விவரித்தார் அவர்!

அந்த மூணாவது சிவப் பண்டாரம் மூச்சுக் காற்றை வெளியே விடும்போதும் சிவ, மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் சிவ! அப்படி ஒரு சிவயோக சிவப்பண்டாரம் அல்லது பண்டார சிவம் ! அவர் தன்னுடைய சாட்சியத்தை ஆரம்பித்தார்.

முதல் பண்டாரத்தைச் சுட்டிக்காட்டி, ''இச் சிவம் அச்சிவத்தை சிவ." - அதாவது, இவர் - இந்தப் பண்டாரம் - அந்தப் பண்டாரத்தை ஓர் அடி வைத்தார் முதலில். பதிலுக்கு அவர் என்ன செய்தாராம் ! ''அச் சிவம் இச் சிவத்தை சிவ சிவ." - இரண்டாகப் பதிலுக்குத் திருப்பித் தந்தார். மேலும் என்ன நடந்தது?

''இச்சிவம் அச்சிவத்தை சிவ சிவ சிவ.." அவ்வளவுதான். அதுக்குப் பிறகு நடந்ததை இப்படி வேகமாக விவரித்து முடித்தார். ''இச் சிவம் அச் சிவம் இச் சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ ...."

பாவம், மணிக்கட்டி வைணவர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது. தலையை எப்படிக் குலுக்கியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.

மிகவும் பொருள் பொதிந்த இந்த வேடிக்கைக் கதை இரண்டு உண்மைகளை உலகுக்குச் சொல்லுகிறது.

1. விவகாரம் சொல்லுகிறவன் மனசு ஒரு விஷயத்தில் போய்த் தீவிரமாக ஒட்டிக் கொண்டுவிட்டால் மனந்திறந்து நடப்பை விவரிக்க முடியாது.

2. விவகாரம் கேட்கும் நீதிபதியின் அறிவு இன்னொன்றைப் போய் பலமாகப் பற்றி நிற்பதால், உண்மையை வாங்கிக் கொள்ள முடியாமல் காதுகள் இரண்டும் அடைபட்டுப் போய்விடுகின்றன.

ஆக, இருவரின் நிலையும் நடப்புக்கு - யதார்த்தத்துக்குப் புறம்பான செயல்; நகைப்புக்கிடமானது என்கிறது கதை.

அந்தப் பண்டார சிவம், இந்த மணிக்கட்டி வைணவரின் காதுகளில் தொங்கும் மணிகளைப் பார்த்த பிறகே, தனது சாட்சியத்தை அப்படிச் சொல்ல வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியிருக்கலாம்! ஒரு விஷயத்தின் மேலுள்ள அதி தீவிரப்பற்று - ஒருவனைத் தனது சக மனித சமூகத்திலிருந்தே பிரித்து விடுகிறது. அந்த விஷயம் நியாயமாக இருந்தாலும்கூட கேலி செய்யப்படும். 'கோமணங் கட்டாத ஊரில் கோமணங்கட்டினவன் பைத்தியக்காரன்' என்கிற கதை இப்படித் தான் வந்தது.

'ஊரோட ஒக்கோட... அதோட நாமோட...' என்று சொல்லித் தருகிறது சொலவடை; அதாவது - 'உலகத்தோடு ஒட்ட ஒழுகு' என்கிறது.

மேதைகள், ஞானிகள், பைத்தியக்காரர்கள் - இவர்களைச் சமூகம் எப்போதும் எள்ளி நகையாடியே வந்திருக்கிறது.

நன்றி : கரிசல் காட்டுக்கடுதாசி
வெளியீடு : அன்னம் (பி) லிட்.,

கி.ராஜநாராயணன்

© TamilOnline.com