Bay Area Roundup - செல்வி ரூபா மஹாதேவனின் கர்நாடக இசை கச்சேரி
கலிபோர்னியாவின் இசைப்பிரியர்கள் சமீபத்தில் நடைபெற்ற செல்வி ரூபா மஹாதேவனின் கர்நாடக சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தனர். ப்ரீமான்ட் (FREMINT) டில் ஓவோனி கல்லூரியின் ஜேக்ஸன் அரங்கம் சங்கீத ரசிகப் பெருமக்களால் நிரம்பி வழிந்தது.

திருமதி விஜயா, திரு. மஹாதேவன் தம்பதியரின் மகளான ரூபா, திருமதி ஆஷா ரமேஷின் மாணவி யாவார். திருமதி ஆஷா, சங்கீத மேதைகளான திரு டி.கே. ஜெயராமன் மற்றும் நங்கநல்லூர் திரு.வி. ராமநாதன் இவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சங்கீதப் பிரிவில் விரிவுரையாளராக உள்ள இவர், ஸேன் ஹோஸேவில் சங்கீதப் பள்ளி அமைத்துள்ளார்.

செல்வி ரூபா தனது 8 வது வயதிலேயே கர்நாடக இசையை முதலில் திருமதி ஜெயஸ்ரீ வரதராஜனி டமும், பிறகு 7 ஆண்டுகள் திருமதி ஆஷா ரமேஷிடமும் முறைப்படி பயின்றவர். இது தவிர இவர் தேர்ந்த பரத நாட்டிய கலைஞரும் ஆவார். 1997 ம் ஆண்டு அரங்கேற்றம் நடைபெற்றது.

முதற்கண், திரு மஹாதேவன் சபையோரை வரவேற்று பேசி, இளம் பாடகியையும், பக்கவாத்திய கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார்.

கச்சேரியை தொடங்குமுன், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சமீபத்தில் இந்நாட்டில் நடந்த பயங்கரவாதிகளின் நாசவேலையில் உயிர் இழந்வர்களின் நினைவாக, அனைவரும் சில நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

செல்வி ரூபா 'ஸாமி நின்னே' என்ற ஸ்ரீராக வர்ணத் துடன் தனது இசை நிகழ்ச்சியை தொடங்கினார்.

பிறகு ஷண்முகப்பிரியா ராக ஆலாபனையில் தனது வித்வத்தையும், மனோதர்மத்தையும் வெகு வாவக மாக எடுத்துக்காட்டினார். இந்த ராகத்தில் ரூபக தாளத்தில் அமைந்த 'சித்தி வினாயகம்' என்ற முத்துஸ்வாமி தீஷிதர் பாடலையும், அதன் பின் வந்த ஸ்வர கோர்வையையும் தாளம் தப்பாமல் இரண்டு காலகட்டத்திலும், வெகு மதுரமாக பாடி, சபை யோரின் உற்சாகமான பாராட்டுதலை பெற்றார்.

பிறகு பாபநாசம் சிவனின் 'கற்பக மனோஹரா' என்ற மலயமாருத ராக பாடலை அடுத்து, அவர் எடுத்துக் கொண்ட கனராகமான சங்காரபரணம், கச்சேரியின் உச்ச சிகரமாக அமைந்தது. ராக ஆலாபனையில் ராகத்தின் சாரத்தை வெகு அருமையாக பிழிந்தெடுத்து, ஆதிதாளத்தில் அமைந்த 'ஸ்வர ராக சுதா' என்ற தியாகராஜரின் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதையடுத்து ரூபா 'கண்ணா வா மணிவண்ணாவா' என்ற அம்புஜம் க்ருஷ்ணாவின் பாடலை ராகமாலிகை (காபி, சாமா, வஸந்தா, நீலாம்பரி, சுருட்டி)யில் பாடினார்.

'பாரையா ரங்கா' என்ற ஸ்ரீக்ருஷ்ணரின் மீதான, புரந்தரதாஸர் பாடல் ராகமாலிகையில் (பாகேஸ்வரி, தேஷ், சுபபந்துவராளி) தேனாக இனித்தது. அன்னமாச்சார்யாவின் ஆபோதி ராக தெலுங்கு கீர்த்தனைக்குப் பிறகு செல்லி ரூபா அவரது குரு திருமதி ஆஷா இயற்றிய கந்த்ரகெளன்ஸ ராக, ஆதிதாள, தில்லானாவுடன் கச்சேரியை மங்களமாக நிறைவு செய்தார்.

வயலின் கலைஞரான திருமதி சாந்தி நாராயண னும், மிருதங்கம் வாசித்த திரு. நாராயணன் அவர்களும் வெகு நன்றாக இளம்பாடகிக்கு அனுச ரணையாக வாசித்து கச்சேரிக்கு மெரு கூட்டினார்கள்.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com