சாட்சி
சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, 'கண்டேன் சீதையை' என்று அனுமன் இராமனிடம் சொன்னதுபோல், "கெடச் சுருச்சு ஆதாரம்" என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அழகிரி சொன்னதைக்கேட்டதும் தங்கராஜன் சாய்வு நாற்காலில் சற்று எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

"அழகிரி நீ சொல்றது மெய்யா. ஆதாரம் இருக்கா. இல்லாட்டி என் பேரு ரிப்பேராயிரும்"

"பொய் சொல்வனா அய்யா. ஆதாரம் இல்லாத ஒங்ககிட்ட வருவனா?"

கைப்பையிலிருந்து சில தாள்களை அழகிரி எடுத்து பயபக்தியுடன் நீட்ட, தங்கராஜன் அதை மேலெழுந்த வாரியாக பார்த்துவிட்டு, திருப்தியுடன் அருகில் இருந்த வக்கீல் வரதராஜனிடம் கொடுத்தார்.

"வரதன், என்ன நினைக்கிறீங்க இதப் பத்தி"

வரதன் அந்தத்தாளில் தன் கண்ணை வேகமாக ஒரு ஓட்டம் விட்டு, புன்னகையுடன், "இது ஓப்பன் அண்ட் ஷட் கேஸ். வசமா மாட்டினாங்க. கிழிச்சுடலாம்" என்றார். "அழகிரி நீ எங்கியோ போயிட்ட. கட்சியில ஒரு பொறுப்பான பதவி ஒன்னைத்தேடிவரும்.அது வரைக்கும் பொறுமையா இரு. அப்ப, நாளைக்கே இத சட்டசபையில கேட்டுருவேன்" என்றார் தங்கராஜன்.

அழகிரி அவர் காலைத்தொட்டு வணங்கினார்.

மறுநாள் சட்டசபையில் கேள்வி நேரம்.

தங்கராஜன், சிங்கம் போல எழுந்து, ஆளும் கட்சியினரை நோக்கி, உரத்த குரலில் "லஞ்சக்கறை படாத ஆட்சி என்று பீத்திக்கொள்கிறீர்களே. இதோ இங்கு அமர்ந்திருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் பொன்னுசாமி தலைக்கு ஒரு லட்சம் என லஞ்சம் வாங்கி இருநூற்று ஐம்பது பேருக்குவேலை வாங்கி கொடுத்திருக்கிறார். அதுவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கிய அரசு வேலை வாய்ப்புகளை , சரியான தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்கவில்லை என்ற பொய்யைச் சொல்லி, தன் நண்பர்கள், உறவினர்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு என்னிடம் வலுவான ஆதாரம் உள்ளது. இந்தக் கோப்பில் தவறான முறையில் வேலை வாங்கியவர் களின் பெயர், விலாசம், கையூட்டு கொடுத்தற்கான சான்றுகள் உள்ளன" என்று ஒரு கோப்பை உயரத்தூக்கிக் காண்பித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைதட்ட சட்ட சபையில் பெரும் அமளி. அவையை அமைதியாக்க அவைத்தலைவருக்கு அரை மணியானது.

ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த கோபத்துடன் எழுந்து, தங்கராஜனிடம், " நீங்கள் ஆட்சி செய்யும்போது செய்யாத பெரிய ஊழலா நாங்கள் செய்துவிட்டோம், பொதுக்கழிப்பறைகளை குளிர்பதனம் செய்வதாய் பன்னிரண்டுகோடி ரூபாய் சுருட்டியது என்னாயிற்று. இரந்துண்போருக்கு இலவசக் கோவணதிட்டம் என்ற பெயரில் இருவது கோடி நீங்கள் சுருட்டவில்லையா? தாய்க்குலத்தைத் தாங்குவோம் என்ற பெயரில், ஏழைப்பெண்டிருக்கு இலவச மார்புக்கச்சை திட்டத்தில் நீங்கள் சுருட்டின இருவத்திநாலு கோடிக்கு என்ன பதில்" என்று கேட்டார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் பொன்னுசாமி அவரைக் கையமர்த்தி, " கடந்த ஆட்சியின் ஊழல்களை அலசும் இடம் இதுவல்ல. இப்பொழுது என் மீது அவர்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன். என் துறையில் ஒவ்வொரு நியமனமும் சட்டதிட்டங்களுக்குட்பட்டு முறை யாகவே நடந்துள்ளது. அரசியல் காழ்ப்பில், தேர்தலில் தோற்ற வயித்தெரிச்சலில், வாய்க்கு வந்தவாறு குற்றம் சாட்டுவது முறையல்ல. அதிலும் ஒரு பழுத்த அரசியல் வாதியும் என் நீண்ட நாள் நண்பருமான

திரு. தங்கராஜன் இதைச் செய்வது மனத்துக்கு வேதனையளிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை அவர் மட்டும் நிரூபிக்கட்டும், நான் என் அரசியல் வாழ்வுக்கே ஒரு முழுக்கு போட்டு விடுகிறேன்" என்று சவால் விட்டார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுவதாக இல்லை. "கையில் சாட்சியம் இருக்கையில் அதற்கு சரியான விளக்கம் தேவை" என்று மேசையைத் தட்டி ஆரவாரம் செய்து கையில் கிடைத்ததை எடுத்து எறிய, ஒரு போர் மூண்டது. அவைத்தலைவர் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

மாலை தினசரிகள் இந்த நிகழ்ச்சியை பெரிதாய் விவரித்தன. "ஒரு வெளி மாநில நீதிபதியை அமர்த்தி இதை விசாரிக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்று தலையங்கம் எழுதின. "படித்துப் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காது ஊசியும் பாசிமணியும் விற்றுப்பிழைக்கும் பின்தங்கிய மக்கள்" என்று சிலரை சிறப்பு பேட்டி கண்டு, குறத்தி வேஷத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகையின் கவர்ச்சிப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

"பதவி கிடைக்குமென படித்து பட்டம் வாங்க குனிந்தவன் நிமிரவே இல்லை" என்று ஒரு கவிதை எழுதப்பட்டது.

மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர் , அமைச்சர் பொன்னுசாமியை உடனே பதவியிலிருந்து விலக்கவேண்டும், இந்த ஊழலை நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார்.

சட்டசபை கூடியபோது மறுபடியும் ஒரு அமளி எழுந்தது. முதலமைச்சர் வேறுவழியில்லாமல் ஒரு சிறப்பு நீதிமன்றம் இதை விசாரிக்க ஆணையிட்டார்.

நீதிமன்றம் ஒரு தனி கட்டிடத்தில் கூடியது. ஓய்வு பெற்ற ஒரு வெளி மாநில நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க அமர்த்தப்பட்டார். கத்தரிக்காய் விலையேற்றம், கந்த சஷ்டி உத்சவம் என்று வெறும் வாயை மென்று கொண்டிருந்த பத்திரிக்கைக் காரர்களுக்கு இந்த வழக்கு தீனிபோட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் விரிவாக எழுதப்பட்டன.

அமைச்சர் தங்கராஜனின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கிய குற்றத்தை விட, சமூகநீதிக்கு புறம்பாக, ஏழை பின்தங்கிய மக்களை வஞ்சித்தது மிகப்பெரிய குற்றம் என்று குறிப்பிட்டார்.

சாட்சிகள் விசாரணையின் முதற்கட்டமாக அழகிரியின் சாட்சியம் அமைந்தது. கையூட்டு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிக்கைகளுக்கு அந்த பட்டியல் கொடுக்கப் படவில்லை. இந்தப் பட்டியல் ஒரு அரசு அதிகாரி உதவியால் தனக்கு கிடைத்தது என்பது தவிர அது யார் என்பதை அழகிரி சொல்ல மறுத்தார். அது தனி நபரின் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்வது போலாகும் என்று வாதாடினார். அந்த அதிகாரி இலங்கை வேந்தன் துதித்த கடவுளின் இரண்டாவது மைந்தனின் பெயருள்ளவர் என்று ஒரு வார பத்திரிக்கை கிசுகிசு எழுதியது. இதனால் முருகன், சுப்ரமணியன், செந்தில்நாதன், குமரன், வேலாயுதன் என்ற பெயர்கள் உள்ள அரசு அதிகாரிகள் சந்தேகிக்கப்பட்டார்கள்.

அரசு தரப்பில் பொதுப்பணித்துறை வேலை நியமன விதிகளை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கி னார்கள். வேலைக்கு மனு செய்தவர்கள் முதலில் ஒரு தேர்வு எழுத வேண்டி இருந்ததை சொன்னார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களே தேர்ந் தெடுக்கப் பட்டதையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியிருந்ததை சுட்டிக்காட்டினார்கள். இராபர்ட் கிளைவ் காலத்திலேயே கிழக்கிந்திய கம்பெனியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தேர்வு விதியை தாங்கள் என்றும் மீறியதில்லை என்றார்கள்.

தங்கராஜன் சார்பில், வேலைக்கு மனு செய்த வர்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்வில் கேள்விகள் சமூகத்தில் பின்தங்கியவர்கள்/தாழ்த்தப்பட்டவர்கள் விடையளிக்க முடியாது கடினமாக இருந்ததை ஓய்வு பெற்ற ஒரு கல்வி அதிகாரி விளக்கினார். எடுத்துக் காட்டாக, பாதம் அல்வாவில் எவ்வளவு விழுக்காடு நெய் உள்ளது என்ற கேள்விக்கு, அல்வாவே பார்த்திராத வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் எளிய மக்கள் எப்படி விடையளிக்க முடியும் என்று வினவினார்.

உணவுக்கலப்படம் மிகுந்த இன்னாளில் ஒரு நெய்க்கடைக்காரர் கூட தான் விற்கும் நெய்யில் எவ்வளவு விழுக்காடு நெய் என்று சொல்லவியலாதே என்று பலத்த சிரிப்பிக்கிடையே குறிப்பிட்டார். விடை தெரிந்தவர் கூட நூறு கேள்விகளுக்கு எப்படி அரை மணி நேரத்தில் விடை எழுத இயலும் என்று வியந்தார். இதனால் தேர்வு முடிந்தபின் கையூட்டு கொடுத்தவர்களுடைய தனியாக தயாரிக்கப்பட்ட விடைத்தாள் செருகப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார்.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ஊட்டியில் சொந்த பங்களா இருப்பதை "ஏழு கோடி சொத்துள்ள எழுத்தர் ஏகாம்பரம்" என்று பத்திரிக்கைகள் போட்டோவுடன் வெளியிட்டன.

ஒரு பணக்கார மேற்குடியினருக்கு எப்படி இந்த வேலையை கொடுத்தீர்கள் என்று சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டார்கள். அமைச்சர் பொன்னுசாமி, "ஊட்டியில் வாழ்பவர் மலைவாழ் மக்கள் தாமே. மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கிய வேலைதானே இது. இது கூட தெரியாமல் முட்டாள்தனமாக கேள்விகள் கேட்காதீர்கள்" என்று எச்சரித்தார்.

தேர்வுக்கு போய் வேலை கிடைக்காத சிலர் தங்களிடம் ஒரு லட்சம் கையூட்டு கொடுக்க வசதி உள்ளதா என்று ஒரு அரசு ஊழியர் கேட்டதை நினைவு கூர்ந்தார்கள். தங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்க்கும் வகையில் ஆளும் கட்சியினர் நீதி மன்றத்தின் எதிரே ஒரு பந்தல் போட்டு மதிய உணவுக்குப்பின் இரண்டு மணி நேரம் ஒரு அடையாள உண்ணாவிரதம் இருந்து, பிறகு டிபன் காப்பி அருந்தி, எதிர்க்கட்சியை திட்டித் தீர்த்து தீர்மானம் போட்டார்கள். பதிலுக்கு எதிர்க் கட்சியினர், "மானங்கெட்ட அரசே, பதவி விலகு" என்று கோஷம் போட்டு ஒரு பேரணி நடத்தினார்கள். அமைச்சர் பொன்னுசாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

வழக்கு மும்மரமாக ஒரு மாதம் நடந்தது. வழிமொழியக்கூட ஆளில்லாத ஒத்தை ஆள் கட்சித்தலைவர், இந்த ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஆள தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அரசு கவிழும் என்ற பதட்ட நிலை ஏற்பட்டது. வழக்கு முடியும் தருவாயில் அந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கே அழகிரியின் முக்கியமான சாட்சியத்தால் சாத்தியமானது என்பதால், அரசின் தரப்பில் அழகிரியை மறுபடியும் ஒரு குறுக்கு விசாரணை செய்ய விரும்பி, நீதிபதியிடம்

கோரினார்கள். நீதிபதி அழகிரியை உடனே மறுவிசாரணைக்கு அழைத்தார். ஆனால் அழகிரியால் வர இயலவில்லை. உடல் நலமின்றி ஒரு மருத்துவ மனையில் இருந்த அவருக்கு "இடியொபதிக் செஸ்ட் பெயின்" (காரணம் தெரியாத மார் வலி) இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். அமைச்சர் தங்கராஜனுக்கு அழகிரி எழுதிய கடிதம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கடிதத்தில் , அழகிரி, பதவி உயர்வு கிடைக்காத ஒரு அதிகாரி காழ்ப்பு உணர்வில் தனக்குத் தப்பான தகவல்களைத் தந்துவிட்டார் என்றும், தான் அதை நம்பி வீணாக ஊழல் குற்றச் சாட்டை தொடுக்க நேர்ந்தது என்றும், தன் சாட்சியத்தை தான் திரும்பப் பெறுவதாகவும், தன்னை நீதிமன்றமும் மக்களும் மன்னித்து விடும்படியும் எழுதி இருந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சி தன் சாட்சியத்தைத் திரும்பப் பெற்றதால், பதிவு செய்த குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும், தகவல் சரியாக இருந்தாலும் ஆதாரம் முறையற்ற வழியில் பெற்றதாக இருந்தால் அதை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்ற சட்ட விதியை (1954ம் வருடத்திய சாட்சிகள் சட்டம், பிரிவு 44, உட்பிரிவு 21 ஐ) சுட்டிக்காட்டியும் நீ£திபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

மறுநாள் ஆளும் கட்சியினர் தங்கள் வெற்றியைப் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். "எங்க தங்கராசா, இப்ப நீ எங்கே ராசா, வந்த வழியில போங்க ராசா" என்று கூக்குரலிட்டார்கள். தலைவர் தங்கராஜனின் அறிக்கையும் பத்திரிக்கைகளில் வெளியானது. "அரசியல் நீரோட்டத்தில் நான் அமைச்சர் பொன்னுசாமியுடன் கல் தோன்றி மண் தோன்றாக்காலம் முதல் இன்றுவரை பலகாலம் ஒன்றாக நீ£ந்தியவன். தவறான ஆதாரத்தை நம்பி அவருக்கு சிரமம் உண்டாக்கியதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆயினும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியின் குறைகளை , அவலங்களை, ஊழல்களைக் களை யெடுப்பதில் என்றும் விழிப்புடன் இருப்பேன் என்று மக்களுக்கு உறுதி கூறுகிறேன்"

(அடடா, வழக்கு முடிவதற்கு இரண்டு நாள் முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்ல மறந்துவிட்டேனே.)

ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையொன்றில் தனியே இரண்டு முண்டாசு அணிந்த நபர்கள் அமர்ந்திருந்தார்கள். வேறு யாருமில்லை. தங்கராஜனும் பொன்னுசாமியும்தான். அருகிலுள்ள மேசை மேல் ஒரு சூட்கேஸ் இருந்தது.

"என்ன தங்கராஜு, இப்படி அவசரபட்டுட்ட. ஒனக்கு சேர வேண்டியத தாராமலா போயிருவம். ஏதோ கலெக்ஷன் இன்னும் முழுக்க வரலே. அதான் டிலே. நீ பாட்டுக்கு சூட்டு, கேசுன்னு பறக்கடிச்சுட்ட. இந்த சூட்கேசுல ஒம்பங்கு இருக்கு. சரிபாத்துக்க"

அதைச்சரிபார்த்து, தங்கராஜன் புன்னகையுடன், "சரியா இருக்கு பொன்னுசாமி. நேரம்மாச்சேன்னு சந்தேகமா இருந்துது. எங்க ஆட்சியில எப்பனாச்சும் இத மாதிரி லேட் பண்ணினமா? சூட்டோட சூடா கைல வெக்கலே? ஆமா,தெரியாமத்தான் கேக்கறேன். ஏன் இப்படி அல்பத்தனமா ஆளுக்கு லச்ச ரூவாவாங்கறீங்க. வெலவாசி ஏறிடுச்சில்ல. அஞ்சு லச்சம் கேட்டா என்னா? சட்டு புட்டுனு ஆட்சில இருக்கரச்சேயே கணிசமா தேத்திக்க வாணாம்?"

"நீ சொல்றது சரி. தலைமை சரியில்ல. பயந்து சாகாரானுவ. இந்தக் கேசை எப்படி முடிப்பே" என்றார் பொன்னுசாமி.

"உனக்கேன் கவலை. நாளக்கி பாரு. உங்க வக்கீல விட்டு அழகிரிய மறுபடியும் குறுக்கு விசாரணைக்குன்னு கூப்பிட சொல்லு. பாக்கிய நானு கவனிச்சுக்கரேன்"

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com