தோப்பில் முகமது மீரான்
நவீனத் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பல படைப்பாளர்கள் வளம் சேர்த்து வருகின்றனர். இலக்கிய வெளிப்பாடு, வாசிப்பு முறையில் தோன்றும் மாற்றங்கள் புதிய வளங்களைக் கோருகின்றன. இதற்குச் சாத்தியமானவர்கள் தனித்துவமாகவும் வித்தியாசமானவர்களாகவும் இருப்பது தவிர்க்க முடியாது. அந்தவகையில் தமிழில் இயங்குபவர் தான் தோப்பில் முகமது மீரான்.

'ஒரு கடலோர கிராமத்தின் கதை', 'துறைமுகம்', 'சாய்வு நாய்காலி', 'கூனன் தோப்பு' போன்ற நாவல்களையும் 'தங்கராசு', 'அன்புக்கு முதுமை இல்லை', 'அனந்த சயனம் காலனி' போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இன்று நாவல், சிறுகதை உலகில் அதிகம் பேசப்படவேண்டிய ஒருவராகவே உள்ளார். தோப்பில் ஒரு வியாபாரி. எழுத்தாளராகப் பிறந்தவர் அல்ல. ஆனால் எழுத்தாளராக இயங்குவதற்கான படைப்பு மனம் கொண்டவர். அதனை மேலும் மேலும் வளர்த்து படைப்பு வெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறார். 'கதையை பொழுது போக்காகத் தான் செய்கிறேன். ஏனென்றால் நான் காசுக்காக எழுதுவதில்லை. எழுதவேண்டும் என்று எனக்கு 'மூட் வரும் போதெல்லாம் எழுதுகிறேன்' என்று ரொம்பவும் இயல்பாகப் பேசும் மனப்பாங்கு கொண்டவர்.

தோப்பில் பெரும்பாலும் தான் வாழ்ந்து அனுபவித்த தேங்காய் பட்டணம் கிராமத்துச் சூழலை மையமாகவே வைத்தே நிறைய கதைகள் எழுதியுள்ளார். தேங்காய் பட்டணம் தான் இவர் பிறந்து வளர்ந்த ஊர். அது குமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கடலோர கிராமம். இந்தக் கடலோரக் கிராமத்தின் கதையை சொன்னதன் மூலம் தான் தமிழில் ஒரு வித்தியாசமான எழுத்தாளராக அறிமுகமானவர்.

இந்தக் கிராமத்தில் மீன் அதிகம் இருந்தால் கிராமத்தில் செழிப்புத் தெரியும். மீன் இல்லாத காலங்களில் பட்டினி முகங்கள் தான். அங்கு வேலை வெட்டி கிடைக்காது. அதனால் சம்பாதிப்பதற்காக ஆண்கள் பெரும்பாலும் சிலோன் போய்விடுவார்கள். பெண்களுக்கு எழுத்து அறிவு இல்லாத சூழல் இருந்தது. இதனால் அங்குள்ளவர்களுக்கு கடிதம் எழுதத் தெரியாது. இதனால் பெரும்பாலானோர் தோப்பில் போன்றவர்களிடம் தான் கடிதம் எழுதித்தரச் சொல்வார்கள்.

இதனை தோப்பில் இவ்வாறு நினைவு கூர்கிறார். "அப்போது அவர்கள் சொல்லும் விடயத்துடன் அவர்களின் மனக்குமுறல்களையும் சேர்த்து எழுதுவேன். அவர்களின் கவலைகள் துன்பங்கள் அனைத்தையும் அதில் உணர்வுபூர்வமாக குறிப்பிடுவேன். இதன் மூலம் மனிதனைப் புரிந்து கொள்ளவும் வாசிக்கவும் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதுதான் என்னை எழுதத் தூண்டியது. இந்த அனுபங்கள் எனக்குக் கிடைத்தது போல் மற்றப் படைப்பாளிகளுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே" என்கிறார் தோப்பில். தான் வாழ்ந்த, கண்ட, அனுபவித்த மனிதர்களின் வாழ்க்கையை எதார்த்தமாக படைத்துக் காட்ட விளைந்தார். அதன் விளைவாகவே "ஒரு கடலோர கிராமத்தின் கதை" பிறந்தது.

எங்கள் ஊரில் பழம் பெருமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று உண்டு. அதைச் சுற்றி நிறைய கதைகள் உள்ளன. தங்ஙள், நாட்டுக்கார், லெப்பைகள், நாவிதர்கள் என்ற நான்கு தரப்பு மக்கள் இந்த கிராமத்தில் இருக்கிறார்கள். இவர்களைச் சுற்றியும் நிறைய கதைகள் உண்டு. தங்ஙள் தான் முஸ்லிம்களில் மேல் தட்டு வர்க்கம். இவர்கள் நாட்டுகார் மேல் தங்கள் ஆதிகத்தைச் செலுத்துவார்கள். நாட்டுகார் லெப்பைகளையும் நாவிதர்களையும் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வைத்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு சுவர். இந்தச் சமுதாயத்தின் மத்தியில் தான் தோப்பில் வாழ்ந்து வந்தார். மேல்தட்டு மக்களின் மனோநிலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையும் இவரை வெகுவாகப் பாதித்தது. "தங்ஙள் செய்த கொடுமை முதலாளித்துவ அடிமை மனப்பாங்கு மேல் எனக்குக் கோபம். இதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எப்படி எதிர்ப்பது எனக்குத் தெரிந்த மொழியில் அவ்வளவையும் பதிவு செய்தேன்".

"நான் பதிவு செய்ததை வாசித்துக் காட்டினால் கேட்க ஆள் கிடையாது. ஏனெனில் நான் படித்தது எழுதியது எல்லாம் மலையாள மொழியில் தான். ஆனால் தாய்மொழி தமிழ்தான். அதனாலேயே நான் எழுதியதில் உயிர் இல்லாது போல் எனக்குப்பட்டது."

அதனால் நான் வீட்டில் எப்படிப் பேசுவேனோ அப்படியே முழுக் கதையையும் சொல்லிப் பார்த்தேன். அதில் உயிரோட்டம் இருப்பதுபோல் தெரிந்தது. விசியத்தை நண்பர்களிடம் சொன்னேன். நான் சொல்லச் சொல்ல நண்பர்கள் தமிழில் எழுதினார்கள். அப்படி எழுதியது தான் "ஒரு கடலோர கிராமத்தின் கதை" நண்பர்கள் எழுதித்தராமல் இருந்திருந்தால் இப்படியொரு நாவல் வந்திருக்காது. துறைமுகம் நாவலும் அப்படித்தான் உருவெடுத்தது என்கிறார் தோப்பில்.

இந்த இரண்டு நாவல்களும் தமிழ் நாவல் வரலாற்றில் புதிய களம் புதிய மனிதர்கள் நடமாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ்ப்படைப்புலகில் தோப்பில் முகமது மீரான் என்ற பெயரும் தவிர்க்க முடியாத பெயராயிற்று. அவரது கூனன் தோப்பு மற்றும் சிறுகதைகள் யாவும் அவர் குறித்த தேடலை முன்நோக்கி நகர்த்தின. கூனன் தோப்பு நாவலை இவரே தமிழில் எழுதியுள்ளார். 1966-67களில் இது எழுதப்பட்டதாக தெரிகிறது. ஆனால், கூனன் தோப்பு வெளிவந்தது 1988 இல். முஸ்லிம் மீனவர்கள் வகுப்புக் கலவரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். இந் நாவல் வெளிவந்தபோது உள்ளுரில் பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நாவல் எழுதப்பட்ட காலம் முந்தியதாயினும் தமிழில் முதலில் வெளிவந்தது "கடலோர கிராமத்தின் கதை" தான். தோப்பில் எழுதிய நாவல்கள் பேசப்பட்டளவிற்கு சிறுகதைகள் அதிகம் கவனத்தைப் பெறவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறுகதையும் நாவல் வடிவத்துக்கு தாவக் கூடிய பண்புகளை கொண்டிருப்பவையாகவும் உள்ளன. இருப்பினும் தோப்பில் என்ற கதை சொல்லி வித்தியாசமான கதையாடல் மரபுகளை நோக்கி திசை திருப்பும் தன்மைகளைப் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு தேர்ந்த வாசகர் தோப்பில் படைப்புகளுடன் பரிச்சயம் கொள்வது இயல்பானது தவிர்க்க முடியாதது.

தோப்பில் 1942 களில் பிறந்து தான் பெற்ற அனுபவத்தை, கேட்ட கதைகளை இன்னும் பலநிலைகளில் பலகாலங்களில் சொல்ல "காலம்" உண்டு. இன்னும் பல வெளிவரமுடியும்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com