நல்வாழ்வு திரும்பும் என்ற நம்பக்கையில்...
வணக்கம்...

தென்றலின் ஆசிரியர் பக்கத்தை எழுதும் பொறுப்பை எனக்கு அளித்ததற்கு எனது நன்றி. இப்பக்கம் தென்றல் படிக்கும் அனைத்து தரப்பினரது எண்ணத்தையும், நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகள் நம்மிடம் ஏற்படுத்தும் பாதிப்பையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இயன்றவரை நல்லெண்ணத்தையும் நன்மையையும் தோற்றுவிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறையாதரவும் நன்மக்கள் ஆசியும் வேண்டுகிறேன்.

மீண்டும், தமிழ் மக்கள் இலங்கைலிருந்து தமிழ் நாட்டை நாடி வரும் இவ்வேளையில், எனது முதல் சிந்தனை அதுவே. அரசியலாளர்கள் ஒரு பக்கம், நாட்டையாள்பவர்கள் ஒரு பக்கம், சமாதான தூதுவர்கள் ஒரு பக்கம், போராளிகள் ஒரு பக்கம் என இருக்கும் அனைவரது எண்ணத்திலும் பொதுவான ஒரே நோக்கம், மக்களுக்கு நன்மை விளைவிப்பதே. அவரவர் செல்லும் பாதைகளும், தேடும் வழிகளுமே வேறுபடுகின்றன. இப்படி ஒரே நோக்கத்தில் இருப்பவர்கள் மக்கள் நலத்தை முன்னிருத்தி, இணைந்து பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்காக விட்டுக் கொடுத்து விரைவில் அமைதியை உருவாக்க முடியும். அறவழியில் இலங்கையில் நல்வாழ்வு திரும்பும் என்ற நம்பிக்கையை கைவிடாமல் இருப்போம்.

சான் ஹோசே மேயரும் நகரத்தின் நிதி திட்டத் துணைவரும் இணைந்து நகரத் துப்புரவுத் துறையில் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளனர். மேயர் ரான் கன்சாலெஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழும்பியிருக்கிறது. நிரூபிக்கப்படும் வரை தான் குற்றமற்றவர் என்கிறார் ரான். மக்களின் நன்மையை நாடுவதில் தன் வழி தனி வழி என்றிருக்கும் அவர் உண்மையில் செய்தது என்ன என்பது வரும் நாட்களில் விரிகுடா அரசியலில் அனல் பறக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. ஊழல் புகார்கள் கால தேச பரிமாணங்களை கடந்தவை; இருந்தும் அமெரிக்காவின் நீதி துறை தன் கடைமையை செவ்வனே செய்யும் என்ற நம்பிக்கையில் மக்கள் எதிர்காலத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

அடுத்த சந்திப்புவரை நலம் விழையும்,
சிவகுமார்
ஜூலை 2006

© TamilOnline.com