வாசகருக்காக தென்றல் போகும் ஊர்வலம்
கடந்த டிசம்பர் மாதத் தென்றல் இதழில் ஆசிரியர், "உங்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கல்லூரி/பள்ளி/ஊர் போன்றவை இன்று எப்படியிருக்கின்றன என்று ஒரு பகுதி ஆரம்பிக்க விரும்புகிறோம். எனவே உங்கள் ஊர்/கல்லூரி/பள்ளி பற்றியும் அங்கு உங்களைக் கவர்ந்த, உதவிய, மறக்க முடியாதவர்களைப் பற்றியும் எழுதி அனுப்புங்கள். இன்று அவை/அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று நாங்கள் விசாரித்தறிந்து கட்டுரை/படங்கள் வாயிலாக உங்களுடனும் உங்கள் நண்பர் களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்" என்று தலையங்கப் பக்கத்தில் புதிய பகுதியான 'ஊர்வலம்' பகுதி ஆரம்பிப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

அறிவிப்பின் அடுத்த கட்டமாக சன்னிவேலி லிருந்து தென்றல் வாசகரான சுரேஷ்பாபு, "நானும் என் நண்பனும் திரு.வி.க மேனிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்தோம். அந்தக் காலத்தில் திரை யுலகின் உச்சியிலிருந்த பாரதிராஜாவின் டைரக்ஷன் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசுவோம். இவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என்று சக மாணவர்கள் ஏளனம் செய்வார்கள். அடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நாங்கள் இருவரும் பயின்றோம். ஆனால் நான் வேறு பிரிவு. நண்பர் செல்வம் வேறு பிரிவு. பல வருடங்கள் ஓடின. என் நண்பர் செல்வத்தைத் தேடி அவர் முன்பு தங்கியிருந்த இடத்துக்கு நானும் என் மற்றொரு நண்பன் முரளியும் சென்றோம். அவன் இருந்த விலாசத்தில் இல்லை. அங்கு விசாரித்த போது எனக்கு அந்த வீட்டுக்காரர் இன்ப அதிர்ச்சி தந்தார். செல்வம் டைரக்டர் ஆகி விட்டார் என்று சொன்னார்கள். அந்தச் செல்வம் வேறு யாருமல்ல. வின்சென்ட் செல்வாதான்" என்று கடிதம் எழுதியிருந்தார்.

வாசகர் சுரேஷ்பாபு குறிப்பிட்டிருந்த மறக்க முடியாத இடம்:

திரு.வி.க மேனிலைப் பள்ளி, செனாய் நகர், சென்னை. (6-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆவது வகுப்பு வரை சு.பா இங்கு படித்துள்ளார். காலம் தோராயமாக 1980கள்)

மறக்க முடியாத தன்னுடைய பள்ளிப் பருவத்துத் தோழனாக அவர் குறிப்பிட்டிருந்த நபர்:

இன்று தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனராக வலம் வரும் செல்வம் என்ற 'வின்சென்ட் செல்வா'. (ப்ரியமுடன், வாட்டக்குடி இரணியன் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா விரைவில் விஜய் நடிக்க 'யூத்' என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்)

இனி...! வாசகர் சுரேஷ் பாபுவுக்காக தென்றல் 'ஊர்வலம்' போகிறது...

திரு.வி.க மேனிலைப் பள்ளி பற்றிய சிறு குறிப்பு:

தமிழ்த் தென்றல் திருவாரூர் வி.கலியாண சுந்தரனார் நினைவைப் போற்றும் வகையில் சென்னை மாநகராட்சி தந்த நிலத்தில் 16-6-1955-இல் திரு.வி.க உயர்நிலைப் பள்ளி மற்றும் செனாய்நகர் தொடக்கப் பள்ளி இரண்டும் துவங்கப் பெற்றது. துவக்க விழாவில் பெருந்தலைவர் காமராசர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்தப் பள்ளி டாக்டர். மு.வரதராஜன், டாக்டர். சுந்தரவதனன், டாக்டர். அ.மு.ப போன்றோரின் முன் முயற்சியால் துவங்கப் பட்டது. திரு.வி.க நினைவுக் குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுப் பள்ளி வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பெரும் பாலும் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மத்தியத் தர மற்றும் அடித்தள மக்கள். எனவே அவர்களது குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதன் மூலம் மறுமலர்ச்சியை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1966-ஆம் ஆண்டு மத்திய அரசு அளித்த உதவியையடுத்து பள்ளியின் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது. 1964-ஆம் ஆண்டு கட்டடப் பகுதிகள் கட்டுவதற்காகத் தமிழக அரசு நிதியுதவி அளித்தது. 1967-இல் தமிழக அரசு இப் பள்ளிக்கு நிரந்தர ஒப்புதல் அளித்தது. 1978-இல் இப்பள்ளியை மேனிலைப் பள்ளியாக தமிழக அரசு உயர்த்தியது. இந்தப் பள்ளியின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிநாதமாய் இருந்து உழைத்த மு.வ.வின் நினைவைப் போற்றும் வகையில் பள்ளியிலுள்ள அரங்கம் ஒன்றிற்கு 'மு.வ.அரங்கம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திரு.வி.க மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக தற்போது K.சிவானந்தன் இருந்து வருகிறார். இவர் இப்பள்ளியில் 1979-இல் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தற்போது தலைமையாசிரியராகப் பணி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த பல வருடங்களாக இப்பள்ளி நல்ல வளர்ச்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த நான்கு வருடங்களாகக் கணினிக் கல்வி தொடங்கப்பட்டுச் சிறப்புடன் அதைச் செயல்படுத்தி வருகின்றனர். இப் பள்ளிக்கு 'Nortel' என்ற அமெரிக்க நிறுவன மொன்று கணினிகளை இலவசமாக வழங்கி யுள்ளது. 6-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கம்யூட்டர் கல்வி மற்றும் இண்டர்நெட் உபயோகம் பற்றிக் கற்றுத் தரப்படுகிறது. மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொழில்நுட்பப் பயிற்சிப் பாடப் பிரிவும் மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது. ரூபாய் 7 இலட்சம் செலவில் விளையாட்டுத் திடல்/கழிப்பறை/குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மாணவர்களுக்குப் பெற்றுத் தர ரோட்டரி சங்கம் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

******


தலைமையாசிரியர் சிவானந்தன் விடு தூது!

இந்த மாணவர்களை நல்லபடியாக உருவாக்க வேண்டுமென்று, என்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதன்படி அவர்களும் எனக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருகின்றனர்.

எனக்குச் சுரேஷ் பாபு உடனடியாக நியாபகத்திற்கு வரவில்லை. ஆனால் ஒருமுறை பார்த்தால், பெயர் சொல்லி அழைத்து விடுவேன். அதிலும் எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் மறக்க முடியுமா?

சுரேஷ்பாபு மாதிரி இங்கு படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவர்கள் இங்கு வருகைதந்து இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவர்களுக்கும் 'நாமும் இதுமாதிரி முன்னேற வேண்டும்' என்கிற எண்ணம் உருவாகும்.

ஒருமுறை பள்ளி முடிந்து நான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுக்கான உடைகளுடன் பள்ளியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். நான் அவரிடம், என்ன ஏதென்று விசாரிக்கையில், அவர் முப்பந்தைந்து வருடங்களுக்கு முன் இங்கு படித்த பழைய மாணவர் என்று தெரிய வந்தது. அவர் பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நின்று நிதானித்து ரசித்துச் சென்றார்.

அந்த வயதானவரால் ஏதும் நிதியுதவி செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் வாழ்த்தியது இன்னும் மனசில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது...

******


வின்சென்ட் செல்வா விடு தூது!

நானும் சுரேஷ¤ம் 6-ஆவதிலிருந்து 12-ஆவது வரை ஒன்றாகப் படித்தோம். அப்போது 'பதினாறு வயதினிலே' படம் வெளியான நேரம். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு நான், சுரேஷ், ஓசூர் முரளி மூன்று பேரும் அந்தப் படத்தில் டைரக்டஷன் நுணுக்கங்கள் பற்றியெல்லாம் விவாதிப்போம். அதே மாதிரி பாரதிராஜா படம் ஒன்றைக்கூட விட்டு வைக்க மாட்டோம்.

இப்படி எந்நேரமும் சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் எங்களை மற்ற மாணவர்கள் 'பைத்தியம்' என்று சொல்லிக் கிண்டலடிப்பார்கள். பள்ளிப் படிப்பு முடித்ததும் நான் ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் திரைப்படக் கல்லூரியில் சேர நினைத்தேன். ஆனால் அப்போது என்னால் சேர முடியவில்லை. அதனால் பச்சையப்பன் கல்லூரி யில் பி.எஸ்.ஸி பிஸிக்ஸ் படிக்கச் சேர்ந்தேன். அப்போது சுரேஷ் அதே கல்லூரியில் பி.காம் பிரிவில் சேர்ந்து படித்தார்.

சுரேஷ¤டைய கடிதத்தை நீங்கள் கொடுத்துப்படித்தவுடன் மிகவும் நெகிழ்ச்சியடைந்து விட்டேன். சினிமாவில் வர வேண்டும் என்ற எங்கள் கனவில் ஒருத்தனு டைய கனவு பலித்து விட்டது. என் ஆரம்பக் கால சினிமா ஆர்வத்தைத் தூண்டியவர்களுள் சுரேஷ¤ம் ஒருத்தன். விளையாட்டாய்ப் பேச ஆரம்பித்து இன்று அதுவே உண்மை யானதில் எனக்குப் பெரிய சந்தோஷம்.

அமெரிக்காவுக்கு ஏதாவது ஷ¥ட்டிங் விசயமாகச் சென்றால், கண்டிப்பாக சுரேஷை போய்ச் சந்திப்பேன்.

சரவணன்

© TamilOnline.com