தி.ஜா.ரா.
தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன் திகழ்பவர்கள் ஒரு சிலர். அவர்களுள் தியாகராஜ சாஸ்திரி என்கிற தி. ஜானகிராமன் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தேவங்குடியில் 1921ல் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்றார். தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1954ம் ஆண்டில் அகில இந்திய வானொலி கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகச் சேர்ந்தார். கல்வி ஒலிபரப்பின் பிரதம அதிகாரியாகப் பணியாற்றி 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

1943 தொடக்கம் தி.ஜா.ரா கல்லூரி மலர்களில் எழுதத் தொடங்கி அவரது இறுதிகாலம் வரை எழுதிக் கொண்டே யிருந்தார். சிறுகதை, நாவல், நெடுங்கதை, குறுநாவல்கள், நாடகங்கள், பயண இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல்வேறு படைப்புக் களங்களில் தீவிரமாக முழு மூச்சுடன் ஈடுபட்டவர். தி.ஜா.ராவின் படைப்பாளுமை வாசக மனநிலையில் ஓர் புதிய அனுபவ உணர்வலைகளை ஏற்படுத்துபவை. இதனால் இவரது எழுத்துக்கு வாசகப்பரப்பில் எப்போதும் ஒரு பெரும் மவுசு காணப்பட்டே வந்தது. இன்றுவரை இது தொடர்கிறது.

பத்திரிகைக்காக அதிகம் எழுதியவர்களில் தி.ஜா.ராவும் ஒருவர். இதனால் பத்திரிகை சார்ந்த உலகின் வழியாக செல்வாக்கு மிக்க படைப்பாளராகவும் இவரால் உயர முடிந்தது. பத்திரிக்கைக்கு அதிகம் எழுதிய போதும் தொடர்கதை எழுதுபவர்க்கு நேரிடும் சிக்கல்கள் பெரிதும் அவரைப் பாதிக்கவில்லை. தொடர் கதைகளுக்கே உரிய தொடர்புகள் இவர் படைப்புகளில் காணப்படவில்லை. அவையே முழுநாவல் வெளியீட்டிற்குரிய சிறப்புக் கூறுகளைப் பெற்றுத் திகழ்ந்தன.

பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்து பின்னர் நூலாக வெளிவருதல். நூல் வெளிவந்த பின் தொடராக வெளிவருதல், தொடராக வெளிவந்து நாவல் நூலாக வந்த பின்னரும் செல்வாக்கு குறையாமல் பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னால் தொடராக மீண்டும் வெளிவருதல்.

இவ்வாறான தனிச்சிறப்புக்குரியதாக தி.ஜா.ராவின் படைப்புலகம் இருந்துள்ளது. மனித மனத்தின் முரண்படு போக்குகளை, ஆழ்மன உணர்வின் பல்வேறு இயல்புகளையும் தனது படைப்பு வெளியில் வெளிப்படுத்தி உள்ளவர். உளவியல் அறிஞருக்குரிய நுண்ணிய ஆய்வுத் தேட்டமாகவும் அவரது படைப்புக்கள் இருந்தன. பிராய்டிச சிந்தனையின் தாக்கம் இவரது படைப்புக்களில் அதிகம் வெளிப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் பிராமண சமூகத்தின் வழக்காறுகளையும் தஞ்சையின் சிறப்புப் பெருமைகளையும் காவேரி ஆற்றின் தனித் தன்மையையும் என தனது படைப்புகளில் நன்குவெளிக் கொண்டிருந்தார். கர்நாடக இசை மீதான பயிற்சியும் ஆர்வமும் படைப்புலகில் நன்கு வெளிப்பட்டது. இது இசைப்பிரவாகமாக, படைப்போடு இயைந்து வரவும் தனித்தன்மை கொண்ட ஓர் மொழிநடையை அமைத்துக் கொண்டு வளர்ந்து வரவும் இவரால் முடிந்தது.

தி.ஜா.ரா காவிரிப் பாடகராக நாவல் களத்தில் இசைவேள்வி நடத்திய படைப்பாளி என்ற தனித்தன்மைக்கும் உரித்தானவர். 'மோகமுள்' இதன் சிறப்பை நன்கு புலப்படுத்தும். செம்பருத்தி, உயிர்த்தேன் நளபாகம் போன்றவை முழுக்க முழுக்க தஞ்சை மாவட்டத்தைக் களமாகக் கொண்டவை. அன்பே ஆரமுதே சென்னையை களமாகக் கொண்டது.

இவரது படைப்பாளுமை, படைப்புக்களம், படைப்பு மாந்தர்கள், படைப்பாக்கத் திறன் என விரியும் படைப்பியல் தி.ஜா.ராவின் தனித் தன்மைக்கும் தனிச்சிறப்புக்கும் உரியவை என்பதை இக்கால வாசிப்புச் செயற்பாடும் நிரூபிக்கின்றன.

தி.ஜா.ரா 1982இல் காலமாகியும், இன்னும் அவரது படைப்புக்கள் தனது மவுசை இழக்காது உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

******


தி.ஜா.ரா நாவல்கள்

1. அமிர்தம் 1944
2. மலர் மஞ்சம் 1961
3. மோகமுள் 1964
4. அன்பே ஆரமுதே 1965
5. அம்மா வந்தாள் 1967
6. உயிர்த்தேன் 1967
7. செம்பருத்தி 1968
8. மரப்பசு 1975
9. நளபாகம் 1983

தி.ஜா.ரா சிறுகதை தொகுதிகள்

1. கொட்டுமேளம் 1954
2. சிவப்பு ரிக்ஷா 1956
3. அக்பர் சாஸ்திரி 1963
4. கமலம் 1963
5. சிவஞானம் 1964
6. யாதும் உளரே 1967
7. பிடிகருணை 1974
8. சக்தி வைத்தியம்(சாகித்திய அகாதமி விருது) 1978
9. மனிதாபிமானம் 1980

சரவணன்

© TamilOnline.com