பிப்ரவரி 2002 : வாசகர் கடிதம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒவ்வொரு மாதமும் தென்றலை ஆவலுடன் நாங்கள் நான், நீ என்று போட்டி போட்டு படிப்போம். நான் பல மாதங்களாக கடிதம் எழுத வேண்டும் என்று மனதிற்குள் பல மடல் வடித்து காலம் அதை கிழித்து எறிய விட்டுவிட்டேன்.

சென்ற இதழில் வெளியான 'சமையலறை ராணி' சிறுகதை என் இரத்தத்தை கொதிக்க வைத்தது. இந்த கதையின் மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பெண்கள் சமையல் இயந்திரம், கணவன் அடித்தாலும், உதைத்தாலும், ஓரகத்தி பாடுபடுத்தினாலும் சமையல் தெரியாவிட்டால் தெருவில் நிற்பாய் என்றா? கணவன் மதிக்காததால் தனியே வந்து சுயமாய் சமையல் கலையை பயன்படுத்தி சிற்றுண்டி சாலை வைத்து, மெல்ல மெல்ல உயர்ந்து தொடர் உணவகங்களுக்கு (restaurant chain) முதலாளி ஆனாள் என்று முடிந்தால் என்ன?

எத்தனை மகாத்மா வந்தால் என்ன, எத்துனை பாரதியும், பாரதிதாசனும் வந்து என்ன? ஆண் ஆதிக்க சமூகத்தை திருத்த முடியவில்லை என்று அந்த கதையை பிரசுரம் செய்ததன் மூலம் தாங்கள் தெளிவாக்கிவிட்டீர்கள்.

மீரா சிவக்குமார், கலி·போர்னியா
*****


என்னுடைய கடிதத்தையும், கேள்வியும் புதிரும் சேர்ந்தால் காலம் போகும் என்ற பகுதியையும் ஜனவரி 2002 இதழில் பார்த்தேன். மகிழ்ந்தேன்.

K.S. நடராஜன், பெங்களூர்.

*****


அன்புப்பெண் மக்கள் இருவர் இந்நாட்டில் (ஒரு மகன் Sanjoseயிலும் மற்றவன் Nashville.T.N.யிலும்) வசித்து வருவதால் நான் அடிக்கடி வந்து அவர்களுடன் இருந்து மகிழ்ந்து இந்தியாவில் பெங்களூரில் மற்ற இரு மக்களிடம் செல்வது வழக்கம்.

இம்முறை வந்தபோது 'தென்றல்' படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். பொழுதுபோக்காகத் தமிழில் கவிதை எழுதுவதையும், தையல்வேலை செய்வதையும் கொண்டுள்ள எனக்கு இந்த வயதிலும் என் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்க ஆசை. (இப்போது என் வயது 65) செப்டம்பர் மாதம் இலையுதிர் அ-ழகினைக் காண Nashville-யிலிருந்து அப்பலேச்சியன் மலை மீது சென்ற என் மனதின் உணர்வுகளை கவிதையாக எழுதியதை உங்கள் தென்றல் பத்திரிக்கையில் பார்க்கும் ஆசையுடன், நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

S. சரோஜா ராவ், கலி·போர்னியா
*****


இம்மாத 'தென்றல்' காற்றில் சுகம் மிக அதிகம். குறிப்பாக சிறுகதை, சமையலறை ராணி.

''ஆஹா அடித்தது யோகம்'' என்று இந்நாடு வந்துள்ள அம்மாக்கள், மாமியார்களின் உள்ளத்தை (லேசாக) பிரதிபலித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படிக்கு (தற்சமய) சமையலறை ராணியாக கரண்டியோச்சும்,

இந்திரா காசிநாதன்

*****


புத்தாண்டு பொங்கிவர
புதுமை பல கொண்டு வர
நல்ல பலகுணங்கள்
நம்மை நாடிவர
மக்கள் அனைவரும்
ஒன்றுசேர
ஆண்டுகள் பல
உருண்டோடிவர
வாழ்த்துக்கள் பலப்பல....

கீதா பாஸ்கர்

*****


திங்கள் தோறும் கடல் தாண்டியும் 'தென்றல்' எங்கள் இல்லத்தில் வீசுகிறது. வாழ்க, வாழ்க

டி.எஸ். தியாகராஜன், சென்னை

© TamilOnline.com