மன்னர்மன்னன் எழுதிய 'பாட்டுப்பறவைகள்'
பிரஞ்சுக்காரர் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரிக்கு 94 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மகாகவி பாரதி, அவரைத் தொடர்ந்து வ.வே.சு., அரவிந்த கோஷ், வ.ரா. போன்ற தேசபக்தர்களுக்கும் புதுச்சேரி மக்கள் கொடுத்த ஆதரவையும், இவர்களை காப்பாற்றி அக்காலத் தமிழ் ஆசிரியர் சுப்புரத்தினம், அவரின் சகாக்கள் குயில் சிவா, வேணு நாய்க்கர் போன்றவர்கள் எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளையும், பிரிட்டிஷ் அரசின் துப்பறிவு இலாக்காவினர் ஏற்படுத்திய இடர்பாடுகளையும் ஒருசேர நாம் புரிந்து கொள்ள உதவுகிறது இந்தப் ''பாட்டுப் பறவைகள்'' புத்தகம்.

பாரதி-பாரதிதாசனுக்கு இடையே இருந்த ஆத்மார்ந்த தொடர்புகளை நாம் படிக்கும் போது ஆச்சர்யத்தால் நம் இதயம் குதிக்கிறது. பிற்காலத்தில் இவர்களைப் பற்றி எழுந்த புனைந்துரைகளுக்கு சரியான விளக்கம் கொடுக்கிறார் நூல் ஆசிரியர் மன்னர்மன்னன்.

மிக அழுத்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதற்பகுதியில் உள்ளன. பாரதி வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கத் திட்டமிட்ட பாரதிதாசன், அதற்கான காட்சி அமைப்பு களையும், வசனங்களையும் எழுதினார். அவரின் திரைப்பட முயற்சி வெற்றிபெறவில்லை. பலரின் கைகளில் சிக்கிக் கொண்ட அந்த எழுத்துப் பிரதிகளை இந்த நூலின் இரண்டாம் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.

படிக்கப் படிக்க நெஞ்சு நெக்குருகிப் போகிறது. பாரதியிடம் பாரதிதாசனுக்கு இருந்த அமோக மதிப்பு விளங்குகிறது. இப்பகுதி கிடைப்பதற்கரிய புதையல் என்றே சொல்ல வேண்டும்.

மூன்றாம் பகுதியில் மிக முக்கியமான ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பாரதி பற்றி பாரதிதாசன் எழுதியுள்ள கட்டுரைகள், கவிதைகள், வானொலி உரைகள், பத்திரிகை செய்திகள் திரட்டப்பட்டு சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

பாரதியின் மறைவுக்குப் பின் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு கழிந்த பின்னர் அந்த மகாகவியைப் பற்றி மிகச்சிறப்பான - விரிவான - ஆழமான - ஆதாரபூர்வமான ஒரு நூலை பாரதிதாசனாரின் மகனார் மன்னர்மன்னன் மூலமாக நாம் பெற்றிருக்கிறோம். புதிய நூற்றாண்டின் நல் வராவ இந்தப் புத்தகம் விளங்குகின்றது. தமிழ் மக்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய தரமான புத்தகம் இது.

பாட்டுப் பறவைகள்

ஆசிரியர் : கலைமாமணி மன்னர்மன்னன்
பக்கஙகள் : 374.
விலை : ரூபாய் 150/-
முகவரி : MANNAR MANNAN
H-9, Gandhi Nagar, Pondicherry - 605 009.
INDIA
D/D AC No. 01190032513.
State Bank of India, Thattanchavady,
Pondicherry.

© TamilOnline.com