அயரச் செய்த அபலேச்சியன் அழகு!
மழையின் வருகையில் மகிழ்ந்ததுண்டு
நதியின் அணைப்பினில் பயன் பெற்றதுண்டு
கடலின் அழகினில் மயங்கியதுண்டு
மலையின் வலிமையை வியந்ததுமுண்டு!

பூவின் மணம்தனை முகர்ந்ததுமுண்டு,
இலையின் ருசியை ரசித்ததுமுண்டு,
காயின் சுலையை புசித்ததுமுண்டு,
மரங்களின் நிழலினில் களித்ததுமுண்டு!

இயற்கையின் பசுமையின் வண்ணக்கலவையில்,
இதுவரை மகிழ்ந்து பயன் பெற்ற மனதினில்
அபலேச்சியன் எனும் மலையைப் பார்த்தபின்
பூசுமையின் அழகினும் உலர்ந்திட்ட இலைகளில்,
பலவித வண்ணங்கள் இருப்பதைப் பார்த்தேன்!

மாந்துளிர் வண்ணமும் மஞ்சள் வண்ணமும்,
தேன்துளிர் வண்ணமும் வானவில் போன்று
பலவித மலர்களைக் கோர்த்தது போலவும்,
காற்றினில் அசைந்தலை ஒலித்தபோதெந்தன்,
உள்ளக்களிப்பினை எவ்விதம் சொல்வேன்!

உலர்ந்திட்ட இலைகளில் இத்தனை அழகினை,
இனைத்தெம்மை மகிழ்ந்திடச்செய்திடும் - அந்த
இறைவனின் திறமையை எடுத்துச் சொல்ல
வையக மாந்தரின் வார்த்தைகள் போதா!

S. சரோஜா ராவ்

© TamilOnline.com