போடு பழியை பெர்னாங்கே தலையில்!
"என்னை யாரும் காப்பாத்த முயற்சி செய்யாதீங்க. மீறிச் செய்தால், நீங்க வர்றதுக்குள்ளே நான் இங்கேயிருந்து குதிச்சிடுவேன்" என்று கத்தினார் சுந்தரம். அவர் நின்றுகொண்டிருந்தது ஒரு 60 மாடிக் கட்டடத்தின் உச்சி!

கீழேயிருந்து தீயணைப்புப் படை வீரர் ஒருவர் ஒலிபெருக்கி வழியே "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்? யார் உனக்குத் தொந்தரவு செய்தது? நாங்கள் அவரைப் பிடிக்கிறோம்" என்று கூவினார்.

"அதுவா? அது... பென் பெர்னான்கே" என்று சுந்தரம் சொன்னார். இதைக் கேட்டதும், அவர் ஏதோ துக்கத்தில் இருக்கிறார் என்று இதுவரை நினைத் தவர்கள், சுத்தமாகவே பைத்தியமாகிவிட்டார் என்று முடிவு கட்டினார்கள். "உலகம் முழுவதும் ஏன் பங்குச் சந்தையில் விலைச் சரிவு ஏற்பட்டது? ஜப்பான், இந்தியா, பிரேசில், அமெரிக்கா எல்லா இடத்திலையும் இப்படி ஆனதுக்கு ஃபெடரல் கவர்னர் வட்டி விகிதத்தை ஏற்றினதுதான் காரணம்னு நான் குற்றம் சாட்டுகிறேன்" என்று சொல்லி முடித்தார் சுந்தரம்.

தீயணைப்பு வீரரில் ஒருவரான சாம், "சரிதான், ஆனால் அது சரியும் இல்லை. நம்ம வாழ்க்கையை மறைமுகமாகக் கட்டுப் படுத்தற ஒரு ஆளுன்னா அது ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர்தான். அவருடைய முதல் வேலை, பணவீக்கத்தைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறது. பங்குச் சந்தையையோ இல்லை வேறு சந்தை களையோ அவர் எதுவும் செய்யறது இல்லை. நியாயத்துக்கு பயந்து, அவர் தன் பணத்தை பங்குச் சந்தையில போடறது கிடையாது. அமெரிக்காவின் நாணயக் கொள்கையைத் தான் அவரால எதுவும் செய்யமுடியும்."

"அட! இந்தச் சொற்பொழிவைக் கேக்கறதை விட உயிரை விடறது மேல்னு நெனக்கற வங்களை எனக்குத் தெரியும். ஆனால், இந்த ஆசாமி, தற்கொலையை நிறுத்திட்டு இதைக் கேக்கறானே!" கூட்டத்தில் ஒருவன் கிண்டலடித்தான்.

சாம் விடாமல் தொடர்ந்தார், "பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தறது அவருடைய முக்கிய வேலைகளில ஒண்ணு. அதற்கான வழி ஃபெடரல் நிதிக்கான வட்டி வீதம்தான்.
"உலகமுழுவதும் சந்தைகளின் வீழ்ச்சி மே மாசமே தொடங்கியாச்சு. ஆனால், 2004 ஜூன் 30ஆம் தேதியிலே இருந்து ஒவ்வொரு ஃபெடரல் கூட்டத்திலும் கால் பாயிண்ட் என்கிற ரீதியில வட்டி வீதம் படிப்படியா ஏறத் தொடங்கிச்சு. கிரீன்ஸ்பான் தொடங்கினதை, பெர்னான்கே தொடர்கிறார், அவ்வளவுதான். திருப்தியா? இப்ப கீழே இறங்கி வா" என்று முடித்தார் சாம்.

"மாட்டேன்," கத்தினார் சுந்தரம். "பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தறது என்ன அவ்வளவு முக்கியமா? எப்படி ஃபெடரல் பணவீக்கத்தைக் கவனிக்குதுன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்."

கூட்டத்தில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் இப்போது பேசத் தொடங்கினார் "அசட்டுப் பயலே! இரண்டாவது உலகப் போர் சமயத்துல ஒரு ரொட்டியின் விலை 0.15 டாலர், ஒரு கார் 1,000 டாலர், ஒரு வீடு சுமார் 5,000 டாலர். போன அறுபது வருஷத்தில விலைவாசி ஆகாசத்துக்கு ஏறிடுச்சுன்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும். நம்ம ஒவ்வொருவர் வாழ்க்கை யையும் பணவீக்கம் பாதிக்குது; சோஷியல் செக்யூரிட்டி நிர்வாகம் எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்யுது என்பதைத் தீர்மானிக்கிறது பணவீக்கம்தான். இந்த நிதி ஒதுக்கீடு 50 மில்லியன் பேருக்கு நன்மை செய்யுது."

அங்கே நின்றிருந்த சுந்தரத்தின் மனைவி, "விவாகரத்து வழக்கில் மனைவிக்கு எவ்வளவு ஜீவனாம்சம் கொடுப்பது என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பது பணவீக்கத்தின் அடிப் படையில்தான்" என்று கூறினார்.

சாகிற ஆசையைச் சுத்தமாக விட்டுவிட்ட சுந்தரம், தன் மனைவி ஏன் இந்தச் சமயத்தில் விவாகரத்தைப் பற்றிப் பேசுகிறாள் என்று யோசித்தார். எலவேட்டரைப் பிடித்துக் கீழே இறங்கிவந்தார். தற்கொலைக்கு முயன்றதாகக் குற்றம் சாட்டும் வாரண்ட் ஒன்றை அங்கே யிருந்த பொலீஸ் ஒருவர் அவனிடம் கொடுத்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நீதி மன்றத்தில் நின்றுகொண்டிருந்தார் சுந்தரம். நீதிபதி அதிகக் கடூரமில்லாத பார்வையோடு கேட்டார், "உன் தற்கொலை முயற்சியிலிருந்து ஏதாவது பாடம் கற்றாயா?"

"நிறைய. சாதாரண மனிதனாகட்டும், பெரிய வர்த்தக நிறுவனமாகட்டும், அவற்றின் அன்றாட வாழ்க்கையைப் பணவீக்கம் பெரிய அளவில் பாதிக்கிறது. ஃபெடரல் வங்கி பல வழிகளில் அதைக் கண்காணிக்கிறது. அதில் ஒரு முக்கிய வழி CPI" உற்சாகமாகச் சொன்னார் சுந்தரம்.

அவரைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அரசு வக்கீல் குறுக்கிட்டார், "CPIன்னா என்ன?"

"கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்டெக்ஸ். இந்த நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை மாதாமாதம் தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் (பீரோ ஆஃப் லேபர் ஸ்டாடிஸ்டிக்ஸ்) வெளியிடுகிறது. நிதிச் சந்தைகளில் இருப்பவர்கள் இதைக் கூர்ந்து கவனிப்பார்கள். வெவ்வேறு துறை பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் விலை மாற்றங்களை இது தொடர்ந்து கவனிக்கிறது. அந்தத் துறையின் முக்கியத் துவத்தைப் பொறுத்து அதற்குக் குறியீட்டெண் வழங்கப்படுகிறது. உதாரணமா, வீட்டுவசதித் துறைக்கு 42 சதவீதம் கொடுத்தால், போக்குவரத்துக்கு 17 சதவீதம் தான் கொடுக்கப்படுகிறது. உன்னுடைய மாசச் செலவைப் பார்த்தால், வீட்டுக்கான மார்ட்கேஜ் செலவுதான் பெரிதாக இருக்கும்.
"இதைக் கணக்கிட்டுத் தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் வெளியிடும். 2005-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தக் குறியீட்டெண் 1500ன்னு வெச்சுக்குவோம். வருஷ முடிவில் அது 1530. அப்போ, ஒரு வருஷத்தில் 2 சதவீதம் ஏறியிருக்கிறது. அதுவே ஆண்டு முடிவில் 1590 ஆனால், அது 6 சதவீத ஏற்றமாகும்.

"விலைவாசி ஏன் ஏறுது? பணவரத்து அதிகரித்ததனாலேதான். கிடைக்கும் பொருள்கள் மற்றும் சேவைகளைவிடப் பணம் அதிகமாக இருந்தால், அது விலைவாசியை உயர்த்திவிடும்; கூடவே பணவீக்கமும் மேலே போகும்" என்று சொல்லி முடித்தார் சுந்தரம்.

"இந்த வழக்கு எவ்வளவு விசித்திரமானதோ, உன் தற்கொலைக்கான காரணமும் அவ்வளவே விசித்திரமானதுதான். தண்ட னையைக் குறைப்பதில் எனக்குச் சம்மதம் தான். அதுக்கு முன்னால ஒரு கேள்வி, 'தேவையும் வரத்தும்' கூட விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம்தானே?" என்றார் நீதிபதி.

"ஆமாம் யுவர் ஆனர். வாங்குகிறவர்களின் தேவை, பொருள்களின் வரத்தைவிட அதிகமாகிப் போனாலும் விலை ஏறத்தான் செய்யும். உதாரணமா, உலகமுழுவதும் கச்சா எண்ணெய்க்கான தேவை ஏறிப்போய், அது கிடைப்பது குறைந்துபோனால், எண்ணெய் உற்பத்தி செய்வோர் விலையை ஏற்றி, அதிக லாபம் பார்க்க முயல்வார்கள். சமீபத்தில் நடந்தது அதுதான்.

"பணவீக்கம் ஏறினால், எல்லாவகைக் கம்பெனிகளுக்கும் லாபம் அதிகரிக்கிறது. அரசாங்கத்துக்கு அவை அதிக வரி செலுத்துகின்றன; கம்பெனிப் பங்குகளின் விலைகளும் ஏறுகின்றன."

ஒரு சிறிய அபராதம் விதித்து, ஓர் எச்சரிக்கையோடு நீதிபதி சுந்தரத்தை விடுவித்துவிட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே சுந்தரத்தின் மனைவியைப் பார்த்த நீதிபதி, "சந்தோஷம்தானே?" என்று கேட்டார்.

"ஆமாம் யுவர் ஆனர். ஆனால், ரெண்டு விஷயம்: ஒண்ணு, பொருள்கள் விலை ஏறிவிடுவதால் பணவீக்கம் சாதாரண மனிதனை ரொம்பச் சங்கடப் படுத்துகிறது என்று புரிகிறது. ஒரு பீப்பாய் எண்ணெய் 200 டாலர் ஆகிவிட்டால் எக்ஸானும் BPயும் அதிக லாபம் பெறலாம். ஆனால், நாம அவசியமானால் மட்டுமே வெளியே போவோம். மற்றப் பயணத்தைத் தவிர்த்து விடுவோம், அல்லவா?"

"ரொம்பச் சரி" என்றார் ஜட்ஜ். "அதனால்தான் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க ஃபெடரல் ரிசர்வ் முயற்சிக்கிறது. விலைவாசி ஏறினாலும், கூரையைப் பிய்த்துக்கொண்டு போகாமல், அதாவது 1 அல்லது 2 சதவீதத்துக்கு மேலே பணவீக்கம் போகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆங்... இரண்டாவதாகச் சொல்ல வந்தது என்ன?"

"அதுவா... சுந்தரம் மேலேயிருந்து குதிச்சாக் கூட அது இந்த விலைவாசி குதிக்கற அளவுக்கு மோசமா இருந்திருக்காது" என்று பாதி விளையாட்டாகவும் பாதி கிண்டலாகவும் சொன்னாள்.

சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய: www.wisepen.com


ஆங்கிலத்தில்: சிவா மற்றும் ப்ரியா

தமிழ்வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com