தமிழில் : அறிவியல் பரவலாக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு
35 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே ஆசிரியர் நெறிப்படுத்தலில் வெளிவந்து பெரும் சாதனையை நிகழ்த்திய யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ் பதிப்பு, பிப்ரவரி 2002 உடன் தனது வருகையை நிறுத்திக்கொண்டு விட்டது. இந்த முடிவு அறிவுத்தேடல் உள்ள தமிழ் வாசகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1946 நவ 4 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்புகளில் ஒன்றாக, 'ஐநா கல்வி அறிவியல் பண்ணாட்டு அமைவனம்' (UNESCO) நிறுவப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கிய இரண்டாம் ஆண்டில், எழுத்தறிவின்மையை ஒழித்து அனைவருக்கும் கல்வி அளிப்பதை ஊக்குவித்தல். உலகெங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்தல், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உலகின் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல், அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பினை அறிந்து கொள்ள உதவுதல், பத்திரிக்கைச் சுதந்திரத்துக்காகப் பாடுபடுதல் போன்ற நோக்கங்களை மக்களிடம் இன்னும் நெருக்கமாக எடுத்துச் செல்வதற்காக யுனெஸ்கோ அமைப்பு 'யுனெஸ்கோ கூரியர்'' என்னும் இதழை1948ல் ஆரம்பித்தது.

வாசகர்களிடையே ''ஒரு விரிவான உலகளாவிய தொடுவானங்களைக் காண உதவும் ஒர் பலகணியாக பணி புரில்'' எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்டு கூரியர் வெளிவரத் தொடங்கியது. அதாவது கூரியர் தமிழ் உட்பட 30 உலக மொழிகளிலும், பார்வையற்றோருக்காக பிரெய்ல் குறியீடுகளிலும் வெளிவந்தது.

யுனெஸ்கோவின் அமைப்பு விதிகளில் எடுத்துரைக்கப்பட்ட "அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த ஒருமைப்பாடு'' அடிப்படையிலான அமைதியை உருவாக்குவதற்கு 'கூரியர்' முயற்சி செய்தது.

இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டுமே யுனெஸ்கோ கூரியர் வெளிவந்து கொண்டிருந்தது. உலகளவில் ஏற்பட்டு வரும் அறிவியல் வளர்ச்சிகளை சிந்தனைகளை தெளிவாகவும் துல்லியமாகவும் தமிழில் தர முடியும் என்பதை தமிழ்ப் பதிப்பான யுனெஸ்கோ கூரியர் நிரூபித்துள்ளது.

தமிழில் 'கூரியர்' இதழ் வெளிவந்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. பல்துறைசார்ந்த நூல்களையும் உலக இதழ்களையும் படிப்பதில் ஆர்வமாக இருந்தவர் அறிஞர் அண்ணா. இவர் ஆங்கிலக் கூரியர் இதழை ஆர்வமுடன் படித்து வந்தவர். இந்த இதழ் தமிழ்ப் பதிப்பாகவும் வரவேண்டுமென அவர் விரும்பினார். தமிழக முதல்வராக அண்ணாதுரை பதவியேற்ற பின்னர், யுனெஸ்கோவின் துணைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷைய்யாவை ஒரு முறை அண்ணா சந்த்தித்தார். இச்சந்திப்பின் போது, அண்ணா கூரியர் இதழை தமிழில் வெளியிட வேண்டும் என்ற விருப்பை ஆதிசேஷைய்யாவிடம் தெரிவித்தார். ஆதிசேஷைய்யாவும் ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.

டாக்டர் ஆதிசேஷையா இந்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அரசின் ஆட்சி மொழியான இந்தி மொழிக்குக் கிடைக்காத வாய்ப்பு தமிழுக்கு கிடைப்பதா என்று மத்திய அரசு தயக்கம் காட்டியது. 'கூரியர்' இதழை இந்தி மொழியிலும் வெளிக்கொண்டுவருவதாக இருந்தால் தமிழ்ப்பதிப்புக்கு அனுமதி அளிப்பதாக இந்திய அரசு நிபந்தனை விதித்தது.

எனவே தமிழ், இந்தி ஆகிய இருமொழிப் பதிப்புகளுக்காகவும் யுனெஸ்கோவுடன் டாக்டர் கலந்து பேசி, இரு மொழிகளிலும் கூரியர் இதழைக் கொண்டுவர அனுமதியைப் பெற்றார். இவ்வாறு யுனெஸ்கோவின் நிதிஉதவி, இந்திய அரசின் நிதி உதவி, ஓரளவு தமிழக அரசின் மானியம் இவற்றுடன் கூரியர் தமிழ்ப் பதிப்பு 1967 ஜூலை முதல் வெளிவரத் தொடங்கியது. இந்திப் பதிப்பு 1968ல்தான் வெளிவரத் தொடங்கியது.

தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக மணவை முஸ்தபா தொடக்கம் முதல் பணியாற்றின் வந்தார். இதழ் அமைப்பு, அச்சு, உள்ளடக்க நேர்த்தி எல்லாவற்றுடனும் குறித்த காலக்கெடுவுக்குள் கொண்டு வந்தார். யுனெஸ்கோ கூரியர் தலைமையகத்தின் மதிப்பூட்டின் படி ஆங்கிலம், ·பிரெஞ்ச், ஸ்பானிஸ் மொழிப் பதிப்புகளுக்கு அடுத்ததாக தமிழ்ப் பதிப்பு நான்காவது இடத்தை பிடித்தது. மணவை முஸ்தபா, 35 ஆண்டுகள் தொடர்ந்து கூரியர் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் 30 உலக மொழி ஆசிரியர்களில் 'பணிமூப்பு ஆசிரியர்' என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும் கூரியரின் அத்தனை மொழிப் பதிப்புகளிலும் ''தமிழரின் வாழும் பண்பாடு'' என்ற சிறப்பிதழ் வெளிவரவும் முக்கிய காரணமானவர்.

இந்த சிறப்பிதழ் மூலம், தமிழ்ப்பண்பாட்டின் உயிர்ப்புத் தன்மை உலக அரங்கில் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டது. ஏனைய மொழிப் பதிப்புகளுக்கு கிடைக்காத கெளரவத்தை தமிழ்ப் பதிப்பு மூலம் முஸ்தபா ஏற்படுத்தினார்.

அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், பண்பாடு, கலை, இலக்கியம், தத்துவம், புகைப்படக்கலை, நேர்காணல் என பல்வேறு துறைகளையும் உலகளாவிய நோக்கில் 'கூரியர்' வெளிப்படுத்தி வந்தது. இவை போன்ற விஷயங்களை தமிழில் தரமுடியும் என்பதை மிகத் தெளிவாகவே நடைமுறைப்படுத்தி காட்டியது. தமிழ் மொழி அறிவியல் மொழியாக ஆற்றலுடனும், வளமுடனும் இயங்க முடியும் என்பதை தமிழுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கும் நிரூபித்துக்காட்டியது. தமிழ் கூரியரின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் மணவை முஸ்தபாவின் அயராத உழைப்பும் தமிழ் ஈடுபாடும் முக்கியமானது.

இந்தி மொழிப் பதிப்புக்கு இந்திய அரசின் பெருமளவு நிதிஉதவி கிடைக்கப் பெற்றது. அத்துடன் பணியாளர்கள் பலமும் பெரிது. இந்நிலையில்கூட இந்திப் பதிப்பு முறையாக வெளிவந்ததில்லை. இதுவரை எத்தனையோ ஆசிரியர்களும் மாறிவிட்டனர். இருப்பினும் இந்திப் பதிப்பின் வருகை மெச்சத்தக்கவகையில் இல்லை.

தற்போது தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களால் 'மாத இதழ்' என்ற நிலையிலிருந்து கூரியர் அரையாண்டு இதழ் எனும் நிலைக்கு மாறுகிறது. அதிலும் ஐநா மொழிகளுக்குள் மட்டுமே வெளிவரும். அதாவது பிரஞ்ச், ஆங்கிலம், ஸ்பானிஸ், ரஷ்ய, சீனா, அராபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளிவரும்.

தமிழ் எத்தகைய பொருண்மையையும் யாருக்கும் எப்படியும் எம்முறையிலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற விளங்கும் மொழி என்பதை கூரியர் மெய்ப்பித்தது. தமிழ்வழி அறிவியல் கல்வி, அறிவியல் ஆய்வு, அறிவியல் உணர்வு, அறிவியல் கருத்துப் பரவலாக்கம் போன்றவற்றை சர்வதேசக் கண்ணோட்டத்தில் 'கூரியர்' வெளிப்படுத்தி வந்தது. தமிழில் பல்வேறு புதிய கலைச் சொல்லாக்க உருவாக்கத்துக்கும் காரணமாக இருந்தது.

இன்று கூரியர் இதழின் நிறுத்தமானது தமிழில் அறிவியல் பரவலாக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

அத்துடன் கூரியர் போன்ற இதழ்களுக்கு தமிழர்களிடையே முறையான வரவேற்பு பரவலாக இல்லை. இந்நிலையில் இந்த இதழின் முக்கியத்துவம் சரிவர உணர முடியாமலேயே போனது.

தமிழர்கள் கூரியர் போன்ற இதழ்களின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தமிழ் வளம் பெற கூரியரின் பங்கு முக்கியம். கூரியர் போன்ற இதழ்கள் தமிழில் வெளிவர தமிழக அரசு உள்ளிட்ட அமைப்புக்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழ், அறிவியல் கண்ணோட்டம் பெற்று வளர அவசியமான பணிகளில் நமது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

மதுசூதனன்

© TamilOnline.com