பையனைப் பருந்து தூக்கிப் போனது!
ஓர் ஊரில் செந்தூரன் என்ற வியாபாரி இருந்தார். அவர் நல்லவர். யாரையும் அப்படியே நம்பி விடுவார். அவர் மனசுக்கு ஏற்றபடி வியாபாரம் நல்லபடியாக ஓடியது. அதற்குக் காரணம், அவர் தந்தையார் உயிர்வாழ்ந்த போது அவருக்கு ஆசிர்வதித்து அளித்த ராசியான தராசுதான் என்று அனைவரும் சொல்வார்கள்.

அவரது கடைக்கு எதிரில் கடை போட்டி ருக்கும் மந்தாரன் செந்தூரனின் நண்பர்தான். ஆனால் கெட்ட எண்ணம் உடையவர். அவர் மனம் போலவே மந்தாரன் கடையில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

செந்தூரனின் அப்பா அவருக்கு அளித்த அந்த ராசியான தராசு மட்டும் நம் கைக்கு வந்து விட்டால், நமக்கு நல்லகாலம் பிறக்கும் என்று நம்பினார். அதை எப்படித் திருடுவது என்று சதாகாலமும் நினைத்து வந்தார். ஆனால் அது இப்படி லேசில் கிடைக்கும் என்று அவர் கற்பனை செய்ததே இல்லை.

ஒருநாள் கடையைப் பூட்டிவிட்டுக் கையில் தராசுடன் செந்தூரன் மந்தாரனிடம் வந்தார். ''நண்பர் ஒரு நேர்த்திக்கடன் ஒரு மாதம் கடையைப் பூட்டிவிட்டுக் காசிக்குப் போகிறேன். ராசியான தராசு மூலையில் முடங்கி இருப்பது ஆகாது. அதனால், நான் வரும்வரை இதை நீ பயன்படுத்திக் கொண்டிரு! இதனால் உனக்குச் சிரமம் இல்லையே?'' என்று கேட்டார் செந்தூரன்.

''நண்பனுக்காக இதுகூடச் செய்ய மாட் டேனா?'' என்று அதை வாங்கிக் கொண்டார் மந்தாரன். செந்தூரன் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் முதல் மந்தாரனின் கடையில் அமோக வியாபாரம். செந்தூரன் கடையின் வாடிக்கையாளர்களும் சேர்ந்து கொண்டதால் கூட்டம் அலைமோதியது. எல்லாம் ராசியான தராசின் மகிமை என்று மந்தாரன் நினைத்தார். இதை அப்படியே அமுக்கிவிட வேண்டியதுதான் என்று தந்திரமாக ஒரு திட்டம் போட்டு வைத்தார்.

ஒருமாதம் ஓடிப்போனது செந்தூரன் திரும்பி வந்தார். கடையைத் திறப்பதற்கு முன் மந்தார னிடம் வந்து தன் தராசைத் திரும்பத் தருமாறு கேட்டார். மந்தாரன் பாவலாவாக அழுதார்.

''நண்பா! நான் என்னத்தைச் சொல்ல! கடை யில் எலித் தொல்லை! ஒரே இரவில் எலிகள் எல்லாம் உன் தாரசைத் தின்று ஏப்பம் விட்டன. கயிறுகூட மிஞ்சவில்லை! நீ வேறு தராசு வாங்கிகொள்! நீ நம்பவில்லை என்றால் என் பையனிடம் கூடக் கேட்டுப்பார்!'' என்று புலம்பி அருகில் அமர்ந்துள்ள அவரது ஐந்து வயது மகனைக் காட்டினார் மந்தாரன்.

மகன் பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தான்.

செந்தூரனுக்கு அவர் பொய்சொல்வது புரிந்தது. தன் ராசியான தராசின் மேல் மந்தாரனுக்கு ஒரு கண் என்பதும் செந்தூரனுக் குத் தெரியும். அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தந்திரமாக ஒரு திட்டம் போட்டார்.

''சரி என் கெட்டநேரம். எலி என் ராசியான தராசைத் தின்றுவிட்டது! போகட்டும். நான் இன்னும் என் வீட்டுக்குள் நுழையவில்லை. காசியிலிருந்து திரும்பினால் தனியாக வீட்டுக் குள் நுழையகூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நல்லவர் ஒருவர் துணையோடு தான் உள்ளே நுழைவது உத்தமம். அதனால் கள்ளமறியாத உன் பையனை என்னுடன் அனுப்பு. வீட்டுக்குள் போய்விட்டு, கடைக்குத் திரும்பும் போது கூட்டி வருகிறேன்'' என்று செந்தூரன் பவ்யமாகக் கேட்டார்.

''அதற்கென்ன? தாராளமாகக் கூட்டிக் கொண்டுபோ'' என்று மந்தாரன் தன் பையனைச் செந்தூரனோடு அனுப்பி வைத்தார். பையனோடு வீட்டுக்குப் போன செந்தூரன் தனியாகத் திரும்பி வந்தார்.

''எங்கே என் பையன்?'' என்று மந்தாரன் கேட்டார். உடனே செந்தூரன் பொய்யாய் ஒப்பாரி வைத்தார். 'ஐயோ நண்பா! நான் எப்படிச் சொல்வேன். வீட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தேன். ஒரு பருந்து பாய்ந்து வந்து உன் பையனைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது! பரவாயில்லை. நீ இன்னொரு பிள்ளையைப் பெற்றுக்கொள்!'' என்று புலம்பி அழுதார்.

மந்தாரன் விடவில்லை. ''நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? இதை விடமாட்டேன்'' என்று கத்திவிட்டு ஊரின் நீதிபதியிடம் போய் முறையிட்டார்.

நீதிபதி செந்தூரனை விசாரித்தார். 'உங்களிடம் ஒப்படைத்த பையனைப் பருந்து தூக்கிக் கொண்டு போனதாகச் சொல்கிறீர்களே. இதை யாராவது நம்புவார்களா? என்று நீதிபதி கேட்டார்.

''மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்களே! என் தந்தையார் எனக்கு ஆசிர்வதித்து ஒரு தராசு கொடுத்தார். அது ராசியான தராசு. அதை என் நண்பர் மந்தாரனிடம் கொடுத்துவிட்டுக் காசிக் குச் சென்றேன். திரும்பிவந்து கேட்டால் அதை எலி தின்றுவிட்டது என்று சொல்கிறார். இரும்புத் தராசை எலி தின்கிறபோது, பையனைப் பருந்து தூக்கிக்கொண்டு போ காதா?'' என்று செந்தூரன் கேட்டார்.

நீதிபதிக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மந்தாரன் கடையில் சோதனை போட்டார்கள். செந்தூரனின் தராசு அங்கே இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

தராசைப் பெற்றதும் செந்தூரன் பக்கத்து வீட்டில் பத்திரமாக விட்டுவந்த மந்தாரனின் மகனைத் திரும்ப ஒப்படைத்தார். பொய்யான தந்திரத்திற்கு அதே மாதிரி தந்திரம்தான் தீர்ப்பு என்பதைச் செந்தூரன் செயல் நமக்கு உணர்த்துகிறது.

© TamilOnline.com