நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு சிலை வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டு, சிலை வைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தது. குறிப்பாக முதல்வர் கலைஞர் சிலைக்கான இடத்தை நேரில் சென்று பார்த்து ஒப்புதல் அளித்தப்பின், அந்த இடத்தில் சிலை நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப்பட்டு, சிலை திறப்பதற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் விடுதலை போராட்டத் தியாகியான சீனிவாசன் என்பவர், காந்திசிலை அருகே சிவாஜிகணேசன் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். குறிப்பிட்ட அந்த இடத்தில் சிவாஜிசிலை வைத்தால் அருகில் உள்ள காந்திசிலை மறைக்கப்படுவதாகவும், அதனால் சிவாஜி சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி பிரபா, ஸ்ரீதேவன் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்விழக்கின் தீர்ப்பு வரும் வரை சிவாஜி சிலை திறப்பு விழாவை ஒத்திவைக்கும் படி அரசுக்கு யோசனை தெரிவித்தது. மேலும் தற்போது சிவாஜிகணேசன் சிலையை நிறுவியுள்ள இடம் திருப்திகரமாக இல்லை என்றும், மாற்று இடத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இரண்டு, மூன்று இடங்களுக்கு நேரிடையாகச் சென்ற பார்வையிட்டும் எந்த இடமும் திருப்தியளிக்காததால் தற்போது உள்ள இடத்திலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்தார். அரசின் இந்த முடிவை கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கிற்கான விசாரணையின் முடிவில் சிவாஜி சிலை தற்போது உள்ள இடத்திலேயே இருக்கலாம் என்று கூறியதை அடுத்து சிவாஜியின் 8 அடி உயர சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

திறப்புவிழாவிற்கு திரைப்பட நடிகர், நடிகைகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com