மாங்காய் பச்சடி
பண்டிகை தினங்களில் மாங்காய் பச்சடி செய்வதன் காரணம் பதார்த்தங்களின் ருசியை அதிகப்படுத்தும்; அதுமட்டுமல்ல ஜீரணத்தை எளிதாக்கும். மேலும் பல சிறப்புகள் கொண்டது மாங்காய் பச்சடி.

தேவையான பொருட்கள்

சுமாரான சைஸ் உள்ள மாங்காய் - 1
வெல்லம் - 2 அல்லது 3 கரண்டி (மாங்காயின் புளிப்புக்கு தக்கபடி)
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகாய் வற்றல் - 1
கடுகு - 1/2 ஸ்பூன்

செய்முறை

மாங்காய் தோலை நன்றாக சீவவும்.

மாங்காயை வறுவலுக்கு சீவுவதுபோல் மெல்லியதாக (துண்டு துண்டாக போட்டாலும் பரவாயில்லை) துருவி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைடம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும்.

நன்றாக வெந்ததும் தேவையான அளவு வெல்லம் போட்டு நிதானமான சூட்டில் கரைய விடவும்.

வெல்லம் நன்றாக கரைந்ததும் உப்பு போட்டு கிளறவும். சில நேரங்களில் தண்ணீர் அதிகமாக இருந்தால் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்தபின் கீழே இறக்கி வைத்து கடுக, மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளிக்கவும்.

(சில நேரங்களில் வேப்பம்பூ பச்சடியை தனியாக செய்யாமல் வறுத்த வேப்பம்பூவை மாங்காய் பச்சடியில் போடலாம். நன்றாக இருக்கும்.)

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com