வேப்பம்பூ பச்சடி
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடியதும் மேலும் பல மருத்துவ குணங்கள் உள்ளதுமான வேப்பம் பூ பச்சடிக்கு

தேவையான பொருட்கள்

புது வேப்பம் பூ - 2 பிடி (புதிய பூ இந்நாட்டில் கிடைப்பதில்லை என்பதால் பழைய பூ ஆனாலும் பரவாயில்லை)
தூள் செய்த வெல்லம் - 1 கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சிட்கை அளவு
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

செய்முறை

வாணலியை அடுப்பில் போட்டு நன்கு காய்ந்ததும் அடுப்பை நிதானமாக எரியவிட்டு பொன்னிறத்துக்கும் சற்று அதிகமாக (எண்ணெய் விடாமல்) வேப்பம்பூவை வறுக்கவும்.

வறுத்த வேப்பம்பூவை சப்பாத்தி கல்லில் வைத்து குழவியால் நன்றாக பொடி செய்யவும்.

பொடியானதும் மாவுசல்லடை அல்லது டீ வடிகட்டியால் சலிக்கவும்.

புளியை கெட்டியாக கரைத்து பாத்திரத்தில் விட்டு உப்பு சேர்த்து நிதானமாக அடுப்பை எரிய விட்டு 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

புளி வாசனை போகும் வரை கொதித்ததும் வெல்லப்பொடியை போட்டு, நன்றாக கரைந்ததும் கீழே இறக்கவும்.

இப்போது பச்சடி தயார்.

(பச்சடி கெட்டியாக இல்லாமல் நீர்த்து இருந்தால் சிறிதளவு அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடலாம்)

இந்த பச்சடியில் பொடி செய்து வைத்து இருக்கும் வேப்பம்பூவை போட்டு கிளறி கடுகு, மிளகாய் தாளிக்கவும்.

இந்த பச்சடி சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு உகந்தது.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com