கவிதை - அமைதி
அமைதி
என் பெயர் இயற்கை

நான் சிரிக்கிறேன்
என்னையே வென்றதாய் என்றென்றும்
இறுமாந்திருக்கும் இயந்திரவாதிகளை
எண்ணியே - அல்ல எள்ளியே
ஆம், நான் சிரிக்கிறேன்.

நான் கோபிக்கிறேன்
எண்ணிலா உயிர்களுக்காய் உலகிருந்தும்
தமக்கே உரிமையெனும் மனிதகுலத்தோரை
கண்டு - பின் வெகுண்டு
ஆம், நான் கோபிக்கிறேன்.

நான் வெறுக்கிறேன்
பொன்முட்டை தினம் இட்டும் எந்தென்
அகப்பையை அகழ்ந்தெடுக்கும் அதிகார வர்க்கத்தை
தூற்றியே - பறைசாற்றியே
ஆம் நான் வெறுக்கிறேன்.

நான் அழுகிறேன்
பெருமையுடன் திறனைந்தைக் கொண்டிருந்தும்
நஞ்சினை அதில் சேர்க்கும் வேதியல் வினையோரைக்
காட்டியே - பழியேற்றியே
ஆம் நான் அழுகிறேன்.

நான் வியக்கிறேன்
எண் கணிம எல்லையினை வென்றிருந்தும்
என் எல்லை அறியாத மாந்தர்தம் மடமையை
சுட்டியே - வாய் பொத்தியே
ஆம் நான் வியக்கிறேன்.

நான் காதலிக்கிறேன்
அதிலாப உலகெதிர்த்து அறிவார்ந்து
அன்போடு எனைக்காக்கும் பசுமைவாத அன்பர்களை
வளமோடு - என் உளமார
ஆம் நான் காதலிக்கிறேன்.

நான் வீருகொண்டெழுகிறேன்
சாரத்தைப் பிழிந்தெடுத்துத் தானருந்தி
தூரத்தே கழிவுதனை வீசிவரும் இழிசெயலைத்
தாக்கவே - மானம் காக்கவே
ஆம் நான் வீருகொண்டெழுகிறேன்.

நான் இரங்குகிறேன்
விதைநெல்லும் விளைநிலமும் வீணாகி
சிதைந்து வரும் வேளையிலே வரும் தலைமுறையைக்
கருதியே - மனம் உருகியே
ஆம் நான் இரங்குகிறேன்.

நான் அமைதியடைகிறேன்
விரைவிலே அறிவுடையோர் வினை பயின்று
என் நலம் காத்து தன்னலம் காப்பர், என
நம்பியே - அதை நாடியே
ஆம் நான் அமைதியடைகிறேன்.

என் பெயர் இயற்கை
நான் அமைதியடைகிறேன்
அமைதி! அமைதி!! அமைதி!!!

நாகராஜன்

© TamilOnline.com