| அம்புலியின் அழகைக் கண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளே!
 ஆதவனைக் கண்ட உடன்
 அடங்கி நீ போவதேன்?
 
 மதியின் வருகை நோக்கிப்
 பாடும் பறவைகளே!
 கதிரின் ஒளியில் நீ
 வாய் மூடுவதேன்?
 
 படிக்க நானும் அமர்ந்து
 விட்டால் இயற்கையே!
 பாழாய்ப் போன தூக்கம்
 உடன் வருவதேன்?
 
 மெய் தனக்கு கொடுத்த
 உயிரை - கடவுள்!
 மீண்டும் தாவென்று நீ
 கேட்பாயே அதேன்?
 
 பாடம் நடத்தி பிச்சை
 போடும் ஆசிரியரே!
 பரிட்சையின் பெயரில் மீண்டும்
 அதைக் கேட்பதேன்?
 
 உயிர் பொருள் கொடுத்து
 வளர்த்த தந்தையே!
 உம் பெயரை இனிஷியலாய்
 சேர்க்க எதிர்பார்ப்பதேன்?
 
 உதிரம் தன்னை பாலாய்
 ஊட்டும் அன்னையே!
 கைமாறு பெறாமல் நீ
 மட்டும் மடிவதேன்?
 
 சித்ரா முரளி
 |