நடிகைகள் தொடர் தற்கொலை! ஏன்?
நடிகைகள் தற்கொலை செய்து கொள்வ தென்பது தொடர்கதையாகிக் கொண்டிருக் கிறது. கொலையா? தற்கொலையா? எனும் சந்தேகங்கள் வலுத்து, கடைசியில் 'காதல் தோல்வியில் தற்கொலை' என்று செய்திகள் வெளியாகின்றன.

சமீப காலத்துக்கு முன்பு நடிகை பிரதியுஷா மரணமடைந்த போதும் இத்தகைய சந்தேகங் கள் வலுத்து, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. பிரதியுஷாவின் மரணச் செய்திக்குள் இருக்கும் மர்மத்திரை அகலும் முன், இப்போது மீண்டும் ஒரு தற்கொலை!

தமிழ்ச் சினிமாவுலகின் முன்னணி நடிகையான சிம்ரனின் தங்கையும் நடிகையுமான மோனல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கம் போல இவரது மரணத்தின் போதும் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் இது தற்கொலைதான் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

விஜயஸ்ரீ, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, லக்ஷ்மிஸ்ரீ, சில்க் ஸ்மிதா, கல்பனா, குமாரி பத்மினி, கோழி கூவுது விஜி, பிரதியுஷா... இந்த வரிசையில் இப்போது மோனல்.

வளர்ந்து வரும் நடிகையான மோனலின் தற்கொலை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 21 வயதே யான மோனலுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்று எல்லோரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர் (ஓரளவுக்குப் பதில் தெரிந்தும்!). மோனலின் சாவுக்கும் வழக்கம் போல, மற்ற தற்கொலை செய்து கொண்ட நடிகைகளைப் போலவே காதல் தோல்விதான் என்று சிலரும் சொல்லியிருக்கிறார்கள்.

காதல் தோல்வி என்பது வெளிப்படையாகச் சொல்லப்படும் விஷயம் என்றாலும், சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான மனம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களுக்கிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. அவர்கள் கேமரா வெளிச்சத்துக்கு வரும் போது தைரியமானவர் களாகவும், வெளிச்சத்தைத் தாண்டி மிதமிஞ்சிய கோழைகளாகவும் இருக்கிறார்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மிகப் பெரும்பாலான நடிகைகள் கூட தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். தற்கொலைக்கு முயன்று அடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுள் மிக முக்கிய மானவர் ஸ்ரீபிரியா. மும்தாஜ், ரோஜா போன் றோர்கள்கூட தற்கொலைக்கு முயன்றதாகச் (உண்மையோ, பொய்யோ!) சமீபத்தில் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தற்கொலைக்கு முயலும் அல்லது தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் அனைவரும் படப்பிடிப்புத் தளங்களில் மிகுந்த சந்தோசமானவர்களாக வளைய வருபவர்கள் என்பது ஆச்சர்யமளிக்கும் உண்மை! மோனல் விஷயத்திலும்கூட இதுதான் நடந்தது. காலை வரை சந்தோஷமாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்த அவர், கண நேரத்தில்தான் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஒரு கணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை அவர்களை உந்தித் தள்ளுகிறது?

பிரச்சனைகள் என்னென்ன? (இது மோனல் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்) ஆராயப் போனால் நெஞ்சைச் சுடும் உண்மைகள் நம்முன்னர் விரிகின்றன. இவர்கள் அனைவரும் பணம் காய்ச்சி மரங்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்பது ஒரு சோகம். பெற்றவர்களே அவர்களை சம்பாதிக்கச் சொல்லி வற்புறுத்துவதும், அவர்கள் காதலிக்கிற பட்சத்தில் வருமானம் போய்விடுமோவென அஞ்சுவதும் இங்கு நடந்தேறுகிறது. வீட்டை விட்டு காதலுடன் வெளியேறுகிற நடிகைகள் அனைவரும் 'என் அம்மா அப்பா என்னை ஒத்துப் போகச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்' என்பதையே தொடர்ந்து சொல்லி வருவதையும் கவனிக்க வேண்டும். இவர்களுக்கு வற்புறுத்தும் பெற்றோர்களிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி காதல்!

தங்களுடைய காதலனை துயர் துடைக்க வந்த இளவரசனாக, எதிரிகளிடமிருந்து மீட்டுச் செல்லும் ராஜகுமாரனாக இவர்கள் ஒரு கட்டத்தில் நம்பத் துவங்குகின்றனர். வெளிப் படையாக மனம் விட்டுப் பேச முடியாத திரையுலகில், தனக்கென தன்னைப் புரிந்து கொண்ட ஒருத்தனை முழுமையாக நம்பி ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். நடிகைகள் தங்களுடைய எதிர்காலக் கணவன் குறித்துப் பேட்டியளிக்கும் போதுகூட 'என்னைப் புரிந்து கொண்டவர், அனுசரித்துப் போகிறவர், அன்பானவர், மனம் விட்டுப் பேசக் கூடியவர்' என்ற வார்த்தைகளையெல்லாம் குறிப்பிட்டுப் பேசுவதையும் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு சாதாரண பெண் உதிர்க்கும் போது வேறு அர்த்தங்களைத் தரும். ஆனால் இவைகளை ஒரு நடிகை உதிர்க்கும் போது இதற்குள் பல்லாயிரக் கணக்கான அர்த்தங்கள் பொதிந்து கிடக் கின்றன.

இப்படி மாய்ந்து மாய்ந்து நம்பி இவர்கள் காதலித்த ஒருவர் கைவிடும் போது, மற்றவர் களுக்கு உருவாகுவதைவிட அதிகமான வெற்றிடம் இவர்களுக்குள் உருவாகுகிறது. முடிவு மரணமென்று உறுதியாக நம்புகின்றனர். இவர்களைக் காதலிப்பவர்களில் பெரும் பாலானவர்கள் காதலிக்கத் தயாராகயிருக்கிறார்களே தவிர, திருமணம் என்று வந்தவுடன் தயங்குகிறார்கள். நடிகை ரசிப்பதற்கு மட்டும் உரியவளே என்கிற பார்வை அனைவருக்கும் இருப்பதையும் நாம் இந்த இடத்தில் கவனம் கொள்ள வேண்டும். தமிழ் ரசிகர்கள் மத்தி யிலும் 'நடிகைதானே இவள் எப்படி உண்மை யாகக் காதலிக்கப் போகிறாள்' என்ற பார்வை யும் நிலவி வருகிறது. சாதாரண ரசிகன் ஒருவனுக்கு இருக்கக் கூடிய பார்வையே நடிகைகளின் காதலன்களுக்கும் அமைந்து போவது காலத்தின் பரிதாபம்!

காதலித்துக் கொண்டிருக்கிற நடிகைகளும் சரி; காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் சரி; இவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை சந்தேகம்! தங்களது துணையே இவர்களைச் சந்தேகிப்பதுதான் இவர்களுடைய மிகப் பெரிய சோகம். சமீபத்தில் விவகாரத்துப் பெற்ற நளினிகூட ராமராஜனைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், "என் கணவர் ராமராஜன் என்னை எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். நானும் சத்யராஜும் நடித்த படம் டீவியில் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந் தால், 'என்ன மலரும் நினைவுகளா' என்பார். வங்கி மானேஜரிடம் கடன் வாங்குவதற்குக் கூட என்னைத்தான் அனுப்புவார். கடனைத் திரும்பிக் கேட்கும் போதும் என்னைத்தான் போய்ப் பேசச் சொல்லுவார்" என்கிற ரீதியில் தன்னுடைய மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருந்தார். இப்படியான சந்தேகங்கள் இவர்கள் வாழ்க் கையில் முட்களாக அமைகின்றன. தைரியம் இருப்பவர்கர்கள் எதிர்த்து நீந்தி தப்பித்து விடுகிறார்கள். இல்லாதவர்கள் மரணத்தை முத்தமிடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் துணையோடு வாழ்வது என்பது சாத்தியமில்லாமல் போகவே, கண் காணாத ஒரு நாட்டில் ஏதாவது ஒரு தொழிலதிபருக்கு மூன்றாம் தாரமாகவோ நான்காம் தாரமாகவோ வாழ்க்கைப்படவும் துணிந்து விடுகிறார்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ் தர்கள், அரசியல் பிரமுகர்கள், நிழலுலக தாதாக்கள் இவர்களையும் நடிகைகள் 'அனுசரித்து'ப் போக வேண்டிய கட்டாயமும் இருப்பதாக நடிகைகளின் பிஆர்ஓவாகப் பணிபுரியும் ஒருவர் குறிப்பிடுகிறார். அவர்கள் இதற்கெலாம் ஒத்துப் போனால்தான் தொடர்ந்து சினிமாவுலகில் நிலைக்க முடியும்.

சினிமாவை விட்டு விட்டுப் போய்விடலாமே? என்றுகூட கேள்விகள் எழலாம். ஆனால் உண்மை என்னவென்றால் முடியாது என்பது தான். இவர்கள் சினிமாவுலகிற்குள் நுழைந்த வுடன் யதார்த்தத்துடனான தங்களுடைய உறவைத் துண்டித்துக் கொள்கிறார்கள். சாதாரண அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால், அதை உதறி விட்டு வேறு ஒரு வேலைக்குப் போகலாம். ஆனால் நடிகைகளால் அப்படி முடியாது. கார் இல்லாமல் தெருவில் அவர்களால் ஒரு எட்டுகூட நடந்து கடக்க முடியாது. படப்பிடிப்பின் போதே சீண்டி விளையாடும் ரசிகர்கள் இருக்கிற உலகத்தில் அவர்களால், சுதந்திரமாக நடந்து திரிந்து விட முடியுமா? என்பதையும் யோசிக்க வேண்டும். இது ஒரு பக்கம் என்றால், மற்ற ஒரு பக்கத்தில் சுக போக வாழ்க்கையிலிருந்து மீள முடியாமல், அதற்குள்ளாகவே சுற்றி வர விருப்பப்படும் நடிகைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

அதற்கடுத்து வெளி மாநிலங்களிலிருந்து இங்கு நடிக்க வரும் நடிகைகளை யார் வேண்டுமானாலும் எளிதில் மிரட்டி விடலாம். அதற்குச் சமீபத்திய நல்ல உதாரணமாக, 'தலைப்புச் செய்தி' என்ற துக்கடா பத்திரிகை ஆசிரியர் நெல்லை கோபால் நடிகைகளை மிரட்டிப் பணம் கேட்டதைச் சொல்லலாம். பணம் தராவிட்டால் எய்ட்ஸ் என்று செய்தி வெளியிடுவேன் என்று அவர் சொன்னதாக நடிகைகள் பேட்டி தந்துள்ளனர். இதுமாதிரி அவர்கள் தொழிலிலும் வெளியிலும் ஏகப்பட்ட மிரட்டல்களைச் சமாளித்து அனுசரித்துத்தான் போக வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து நடிகைகள் பயவுணர்வுடனேதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக் கிறார்கள். வெளியிலும் வரமுடியாது, உள்ளேயும் இருக்க முடியாது என்கிற நிலைதான் அவர் களுக்கு இருக்கிறது. தோள் சாய்ந்து அழ ஒரு துணை அவர்களுக்குத் தேவை. துணையை நம்பி இறங்கித் தோற்கிற பட்சத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள அவர்கள் முயல்வதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்!

சினிமா என்கிற கனவுலகத்தினுள் சுழலும் நடிகைகளின் வாழ்வு கனவிலும் கனவு! சினிமா பத்திரிகையாளர் ஒருவர் நடிகைகளின் தற் கொலை பற்றிச் சொன்ன போது, 'விசிறிகளுக்கு மத்தியில் இருக்கும் நடிகைகளுக்குத்தான் அதிகப் புழுக்கம் இருக்கிறது' என்றார். அவர் சொன்னதில் உள்ள உண்மை சுடுகிறது. மோனல் உள்ளிட்ட தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுக்கு இருந்த புழுக்கம் இனி வரும் நடிகைகள் யாருக்கும் வந்துவிடக் கூடாது.

தினந்தோறும் ஆயிரமாயிரம் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த நாட்டில் மோனலின் தற்கொலையை, ஒரு சினிமா நடிகையின் மரணமாக மட்டும் பார்க்காமல், 21 வயதேயான வாழ வேண்டிய இளம்பெண் ஒருத்தியின் மரணமாகப் பாவித்து அஞ்சலி செலுத்துவோம். தற்போது தற்கொலை செய்து கொண்ட மோனல் தினந்தோறும் உதிரும் ஆயிரமாயிரம் மலர்களின் மத்தியில் உதிர்ந்த மற்றுமொரு மலர்தான். ஆனால் இந்த மலர் கொஞ்சம் அதீத வாசமுள்ள மலர்!

"மின்மினிகளின் சுவடு மோப்பித்து
ஒளி யாசிக்கும் விட்டில்களாய்...
அதன் ஒவ்வொரு அணைப்பிலும்
இதன் சுவாசம் அறுபட்டு
திக்கு முக்காடிச் செல்லும்
இருள் வெளிகளில்..."
என்று எவனோவொரு யாத்ரீகன் சொல்லிப் போன கவிதை மோனலுக்கும் பொருந்திப் போய்விட்டதுதான் காலத்தின் துரதிர்ஷ்டம்!

சரவணன்

© TamilOnline.com