இணைவதைப் பற்றியும்...
'தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள்; உலகில் எங்கு இருந்தாலும் வட்டார, சாதி அல்லது இவை போன்ற ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வேறுபாடுகளை மிகுதிப் படுத்தி விடுவார்கள்.' இதைப்போல பலர் (தமிழர்கள் தான்!) என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார்கள். நான் 'மற்ற மொழி இன மக்கள் எப்படி என்று நமக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை எல்லாருமே இப்படித்தான் போலிருக்கிறது' என்று வாதாடுவதுண்டு; இல்லா விட்டால் கேட்டுக்கொண்டு சும்மா இருந்துவிட்டதும் உண்டு.

2002 இரண்டாம் ஆண்டில், தமிழ் இணைய மாநாடு நடக்கவிருக்கிறது - இத்தனை காலம் எப்படியோ தெரியாது, இனிமேல் தமிழர்கள் அப்படியில்லை என்பதை நமக்கும் மற்றவர்களுக்கும் நிரூபிக்கும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு எல்லோரும் கூடிநின்று இம்மாநாட்டை மிகப்பெரும் வெற்றியாகவும், பின்னாளில் எல்லோரும் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்லும் வண்ணமும் நடத்த வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை உலகெங்குமுள்ள தமிழர்களுக்கும், குறிப்பாக 'தென்றல்' வாசகர்களுக்கும் விடுக்கிறேன்.

'உலகின் மிகப்பெரிய மக்களாட்சி' என்று பலமுறை நமக்கு நாமே வாழ்த்துப் பத்திரம் படித்திருக்கிறோம். தமிழகத்தில் இப்பொழுது நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்கள், தமிழ்நாட்டில் மனிதராட்சியாவது நடக்கிறதா என்று பொரும வைத்துவிட்டன. தலைமுறை, தலைமுறையாக சாதிப்பேய் பிடித்து ஆட்டுகிறது. நமது அரசியல்வாதிகளிடம் குறுகிய நோக்கும், சுயநலமும் தலைவிரித்தாடுகிறது. என்று மாறும் இக்கொடுமை என்று தெரியவில்லை. பிற்பட்டோரும்கூட அவர்களுக்குள் உட்பிரிவுகளை முதன்மைப் படுத்தி பலகூறாய்ப்பிரிந்து நிற்கிறார்கள். இணையத்தைப் பற்றிப் பேசும் நாம், இணைவதைப் பற்றியும் கொஞ்சம் பேசவேண்டும்.

தமிழ் இணையத் தளங்கள் பல, இனிமேல் 'சந்தாதாரர்களுக்கு மட்டும்' என்கிற முறைக்கு மாறியுள்ளன; அல்லது மாறுவதைப்பற்றி தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளன. அவர்கள் அனவரும் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

இரண்டு நேர்காணல்கள் மற்றும் அதிகமான நிகழ்வுகள் காரணத்தால், அமெரிக்காவின் வாகன மைய வாழ்வியல் துளிகள் இரண்டைப் பிரசுரிக்க இயலவில்லை - பாகீரதி சேஷப்பன் மற்றும் ஹெர்குலிஸ் சுந்தரம் ஆகியோரது படைப்புகள் அடுத்த இதழில் வெளிவரும். வாசகர்களது எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புக்கள், எதிர்ப்புக்குரல், எல்லாவற்றையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
மே - 2002

© TamilOnline.com